Tuesday, December 27, 2016

ஆன்மாவோடு ஓர் இரவு பயணம்...!

8 ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரி ஒன்றுகூடல் ஒன்றுக்கு சென்றுவிட்டு நடுநிசி கழித்து வீட்டிற்கு வந்து கொண்டிந்தேன், வீதியில் ஆள் நடமாட்டமே இல்லை சாதுவான மழை, வேகமான இடி, மின்னல் என் சப்பாத்தின் தடம் வீதியில் பெரிதாய் கேட்கத் தொடங்கியிருந்தது அதைக் கேட்ட நாய்களின் ஓலம் மெல்ல மெல்ல வலுப் பெறத் தொடங்கியிருந்தது... 

எனக்கோ பீதி மெல்ல மெல்ல அதிகரிக்கவே வேகமாக நடக்க ஆரம்பித்தேன் எங்கே நான் ஓடினால் வீடு வந்து சேர முன்னர் மூச்சுத் திணறி மயங்கி வழியில் விழுந்தால்  பழி தீர்க்கும் கெட்ட ஆத்மாக்களின் பிடியில் சிக்கி விடுவனோ என்ற பயத்தில் யாராவது வழித்துணை தருவார்களா என்று தேடியபடி நடக்கலானேன், அத்தனை கடவுளும் நொடியில் கண்களில்...

மழையும் கொஞ்சம் வலுப்பெற ஆரம்பித்திருந்தது தூரமாய் ஒரு உருவம் என்னை நோக்கி வருவதாய் உணர்ந்தேன் அது என்னைக் கடக்கும் முன் நான் வேகமாய் ஓடினால் இன்னும் கொஞ்சம் வீட்டுக்கு கிட்டவாய் சென்றுவிடலாம் என்ற ஆவலில் என்னையறியாமல் ஓட ஆரம்பிக்கிறேன், வீதியில் நின்ற நாய் ஒன்று என்னைக் கலைக்க ஆரம்பிக்கவே ஓட்டத்தை நிறுத்திவிட்டேன் அப்போது தான் ஞாபகம் வந்தது நாய்களுக்கு அமானுஷங்களை உணரும் தன்மை இருப்பதாய் யாரோ முன்னர் சொன்னது.

மனதை திடப்படுத்திக் கொண்டு அந்த நாயின் பக்கமாய் நிண்டுவிட்டேன் சிறிது நேரத்தில் தூரமாய் வெளிச்சம் ஆம் ஒரு ஆட்டோ என்னை நெருங்கியது. எப்பிடியாவது அதில் ஏறி வீடு சென்றுவிட வேண்டும் என்ற வேகத்தில் கையை நீட்டி மறித்தேன் ஆட்டோ ஓடி வந்தவர் உருவம் கூட இயல்பிற்கு மாறாய் இருப்பதாய் ஒரு உணர்வு கறுப்பான உருவம், தாடியுடன் அழுக்கான உடை வாயில் பீடி வாயாலும் மூக்காலும் புகை. எதுவானாலும் நான் இதிலே சென்றுவிட வேண்டும் இல்லையேல் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலைப்பாட்டில் வீட்டின் அடையாளத்தை சொல்லி ஏறி அமர்ந்தவுடன் வந்தது ஒரு வித தெம்பு.

பயத்தைப் போக்க ட்ரைவருடன் கதை தொடுக்கிறேன் எதற்கும் அவரிடம் இருந்து பதில் இல்லை, அதுவும் எனக்குள் ஒருவித பயத்தை ஏற்படுத்தினாலும் துணைக்கு ஒருவர் இருக்கிறார் என்ற அந்த தெம்பில் தொடர்ந்தும் பயணிக்கிறேன்.

இது இப்படியிருக்க வீட்டிற்கு அண்மையில் இருக்கும் ஒரு வீடு அது மரண வீடாய் இருந்தது அதைக் கடக்க வேண்டுமே என்ற பயம் மீண்டும் என் மனதில். மழையோ கனதியாய். மரண வீட்டை ஆட்டோ நெருங்கிய வேளை ஆட்டோ நின்றுவிடுகிறது. ட்ரைவர் இறங்கி ஆட்டோவின் பின்பக்கமாய் செல்கிறார் சில வினாடிகளில் கனதியான அலறல் ஒரு சத்தம். திடுக்கிட்டு பின் கண்ணாடியால் திரும்பி பார்க்கிறேன் கறுப்பாய் ஒரு உருவம் வான் நோக்கிப் போவதை உற்று பார்த்துக்கொண்டு நிற்கிறது ஒரு கறுப்பு பூனை, ஆட்டோவை விட்டு இறங்கி ட்ரைவரை தேடினால் காணவில்லை, எதிர்த்தால் போல் பெரிய லாறி வேகமாய் ஆட்டோவை நெருங்கிக்கொண்டிருந்தது சடுதியாய் விலகி கண்ணை மூடி ஓட்டம்பிடிக்கிறேன் என்னை சுற்றி குளிர்மை உணரப்படுகின்றது ஆன்மாக்கள் உலாவும் இடத்தில் குளிர்ச்சி இருக்கும் என்பதை எங்கோ படித்த ஞாபகம் நினைவிற்கு வருகிறது இருந்தும் ஆன்மாக்கள் என்னைத் துரத்தும் அளவிற்கு நான் எந்த தவறும் செய்ததாய் ஞாபகத்தில் இல்லை.

விடிகிறது காலை, வழக்கம் போல வெளியில் வர வீட்டு வாசலில் அடிபட்டு நெழிந்த ஆட்டோ என் நினைவைத் தட்டி எழுப்புகிறது 16 நாட்களுக்கு முதல் நண்பனும் நானும் காரில் பயணிக்கும் போது அதிவேகத்தில் வந்து யாரும் அற்ற வீதியில் ஆட்டோ ஒன்றுடன் மோதி விட்டு பயணித்தது. அதன் தாக்கமாக இருக்க கூடும் என்று நினைக்கும் போதே எனது கைபேசி மணி ஒலிக்கிறது அதை எடுத்து காதில் வைக்கிறேன் நண்பன் வீதி விபத்தில் மரணமானதாய் அவனின் தான் புலம்பி அழும் அந்த அழுகை என்னை அப்படியே புரட்டிப் போட்டது...

Tuesday, December 20, 2016

நதியோடை மீன்கள்...

எப்போதும் கண்களால் வலை வீசும்
காந்தக் கண்ணியை
நதிக்கரையில் சந்தித்தேன்
நிர்வாணமாய் நீந்தும்
மீன்களுக்கு தன் ஆடை வண்ணத்தில்
மின்னிடும் ஆடைகளை
அவள் அவைகளுக்கு
வழ‌ங்கிக் கொண்டிருந்தாள்...

எப்போதும் காந்தப் பார்வை
தரும் அவள் இன்று என்மேல்
காதல் பார்வை எய்கிறாள்!

அருகில் நெருங்கினேன்
எழுந்து நின்றவள்
அருகில் இழுத்தணைத்து
என்
நெற்றியில் முத்தமிட்டாள்...

துள்ளிக் குதித்தன நதியோடை
வண்ண மீன்கள்!
சிலிர்த்தது என் தேகம்!
சலனமற்று காற்றில் ஆடி
நதி விழும் ஆலம் இலை
அந்த நொடி பாரிய சப்தம் எழுப்பி
நீரில் மிதக்கத் தொடங்குகிறது!

விழுந்த இலையின் மேல் பயணிக்கிறது
அவள் இதயமும் என் இதயமும்!
காற்றிடை புகா எம் நெருக்கத்தின்
கதகதப்பில்
பிறந்தன ஆயிரமாயிரம் பட்டம்பூச்சிகள்!
ஈற்றில் நமக்கு நாமே உடையாய்
மாறியிருந்தோம் காதல் பறவைகளின் சப்தம்
கேட்டு ரசித்தபடி!
நீரில் மிதந்துகொண்டிருந்தது
மின்னிடும் அவள் ஆடையும் என் ஆடையும்!