Sunday, August 30, 2009

பொறுமையின் உச்சம் பெண்

இந்த அவலப் பெண்ணின் சோக நிலைதனைச் சற்றே செவிமடுங்கள்... எவ்வளவு பொறுமை இவளிடத்தில்... வியந்து பார்க்கிறேன், கற்பனையில்ப் புனைந்து சிந்தித்தும் பார்க்கிறேன்...!!!

குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்டவள் படும்பாடு உலகறிந்ததே.... இங்கேயும் ஒரு அவல நிலை கற்பனையூடே உண்மையும் கலந்து.... பொறுமை காக்கும் பெண்ணவள் கருப்பொருளாய் அமைகிறாள்... வன்செயல், துன்பம், சோதனைகள் இங்கு முக்கிய கதாபாத்திரங்கள், அவள் வாழும் வீடு அரங்கமாய் அமைகிறது....!!!

வெளி உலகைப் பொறுத்தவரை இவள் வீடு அமைதியும், சந்தோஷமும் இரண்டறக் கலந்த சொர்க்க பூமி ஆனால் ஒரு நாள் அவள் இல்லமதில் இருந்து பாருங்கள் அவலப் பெண்ணும் அவள் இரு குழந்தைகளும் "போதை தாசன்" கோரப் பிடிக்கிள் மாட்டிக் கொண்டு அனுபவிக்கும் சொல்லனாத் துயரை....!!!

காட்சி மலர்கிறது.................

ஆரவாரமாய் இருந்த அயலட்டம் மெல்ல அமைதியினை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறது..... அந்தி சாயும் வேளை 6 மணியிருக்கும் அவள் கணவன் வீட்டை விட்டு வெளிச் செல்கிறான்... சென்ற கணவன் திரும்பி வரும்வரை அவன் வரவை எண்ணி நடு
இராத்திரியில் கட்டிலில் அமர்ந்தபடி கண்விழித்து அப்பப்போ தூங்கிக்கொள்கிறாள் இவள்.
ஆளரவமற்ற வீதி தனில் அவள் கணவனின் சப்பாத்துச் சத்தம் கேட்கிறதா என உற்று செவிமடுத்தும் பார்க்கின்றாள். இருந்தும் வீடு திரும்பும் தன் கணவன் குடித்துவிட்டு கற்பனையான கதைகள் சேர்த்து தன்னில் பிழை கண்டு தன்னை அடித்தும் அயலட்டம் கேட்கும் படி சமூகத்தால் புறம் தள்ளி வைத்த வார்த்தைகளால் ஏசியும் தன்னை நோகடிப்பார் என அவள் நன்கு அறிந்திருந்தாள்.

கணவன் வெளிச் சென்ற வேளையில் வீட்டு வேலை முதல் தாய்க்குரிய வேலை வரை அத்தனையையும் செய்து முடித்து விட்டு களைப்படைந்து காணப்பட்டாள். அதனால் அவள் கண்கள் அவளையறியாமலே தூங்கிக்கொண்டிருந்தன...

நேரம் மெல்ல கழிந்து கொள்கிறது.................
..........

திடீரென வீதி வழி யாரோ நடந்து வரும் சத்தம் அவள் காதுகளில் ஒலிக்கிறது...... பதறியபடி கட்டிலில் எழுந்து அமர்ந்து கொண்டு கேட்கும் பாதச் சத்தம் தன் கணவனுடையதா என தனக்குள்ளே கேட்டுக்கொள்கிறாள்.... அவள் இதயம் படபடவென வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.... கவனமாக உற்றுக் கேட்கிறாள்.... சலனம் கண்ட அவள் மனதிலிருந்து ஒரு முடிவு வந்தது... கேட்கும் பாதச் சத்தம் தன் கணவனுடையதில்லை என... மீண்டும் படுத்துக் கொள்கிறாள் இருந்தும் நிம்மதியான தூக்கம் அவள் கண்களை விட்டு வெகு தொலைவிலே.........!!!

நேரமும் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது...........!

முன்னர் கேட்டதை விட பெரிதாய் ஒரு சத்தம் அவள் காதுகளை ஆக்கிரமிக்கிறது ஆனால் தள்ளாடித் தள்ளாடி நடந்து வருபவர்களின் கால்த் தடம் என்பதை உணர்ந்து கொள்கிறாள்.... இது நிச்சயமாகத் தன் கணவன் தான் குடித்து விட்டு வருகிறார் என உறுதியும் செய்கிறாள்.....!!! கணவன் தான் என அறிந்ததுமே பேதையவள் விழிகளிநோரம் கண்ணீர் அவளுக்குத் தெரியாமல்.....!!!

வீடு வந்த அவள் கணவன் கதவை மிகச் சத்தமாகத் தட்டித் திறக்கிறான்..... பீதியடைந்த அவள் தன் மூச்சைக் கட்டுப்படுத்தி மெல்ல சுவாசிக்கிறாள்... இருந்தும் வீட்டு வேலை செய்து கால் வலியுடன் கட்டிலில் அமர்ந்திருந்த அவள் கணவன் தன்னை என்ன செய்யப் போகிறானோ என்ற பயத்தினால் தன்னையறியாமல் நகங்கள் கொண்ட விரல்களினால் அவள் உள்ளங்கையை இறுகப் பற்றிக் கொண்டபடி அமர்ந்திருந்தாள்...... தன் கணவன் வீட்டுக்குள்ளே தள்ளாடிய படி நடந்து போவதைப் பார்க்கிறாள்..... ஆனால் அவன் முதலில் குளியலறைக்குள் நேரே செல்கிறான்.... சென்று அவன் தனியே கத்திச் சிரித்துக் கொண்டிருந்தான்..... சிரித்துச் சிரித்து அவன் உண்டவற்றை வெளியெடுத்துக் கொள்கிறான்... அங்கு எவரும் இருக்கவில்லை... கணவன் சிரிக்கும் சத்தம் கேட்ட அவளோ பயத்தின் எல்லையில் நின்று கொண்டிருந்தாள்....

சற்று நேரம் கழித்து அவன் தட்டுத்தடுமாறி சாப்பாட்டு அறை நோக்கி நடக்கலானான்..... அங்கே தனக்குரிய இராப் போசனத்தை எடுத்து உண்ணத் தொடங்குகிறான்.... இடைவழியில் தண்ணீர்க் குவளையைத் தேடிப் பார்த்து எடுக்க முனைகிறான் அது அவன் கை தவறி நிலமதில்ப் பட்டு உடைந்து கொள்கிறது.... குவளை உடையும் சத்தம் கேட்ட அவள் மேலும் அச்சம் கொண்டு தன் புயங்களுக்குள்த் தன்னைப் புதைத்துக் கொள்கிறாள்.... சிறிது நேரம் அமைதி நிலவிக் கொண்டிருந்தது.... அந்த அமைதியினூடே அவள் கணவன் அடுப்பை மூட்டிக் கொள்கிறான்.... அந்த நெருப்பின் சத்தம் அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது..... அவள் நடக்கப் போகும் அசம்பாவிதங்களை எண்ணி அவளை அறியாமல் நடுங்கிக் கொண்டு துன்பத்தின் இறுதி எல்லையில் நின்று கொண்டிருந்தாள்... ஆனால் அவனோ அடுப்பை நிறுத்தாமல் உரத்த குரலில்ப் பாடிக்கொண்டு அவளை நோக்கிய படி படுக்கையறைக்குள் நுழைகின்றான்....

அறைக்குள் வந்த கணம் இன்னும் சத்தமாக கத்தத் தொடங்கினான்... அவன் கத்திய சத்தம் கேட்டு அச்சத்தினால் அவன் குழந்தை கதறி அழத் தொடங்கியது...குழந்தை அழுவதை கண்ட அவனோ குழந்தையைப் பார்த்து ஏசிக்கொண்டிருந்தான்.... போதையில்க் குழந்தையை ஏதும் செய்து விடுவானோ என்ற அச்சத்தால் அவள் விரைந்தோடி குழந்தைகளை அள்ளி அணைக்க முயற்சிக்கிறாள்.... அவ்வேளை ஒரு குழந்தை கை தவறி நிலத்தில் விழுகின்றது... இருந்தும் அவள் தன் மற்றைய குழந்தையைப் பத்திரமாய் மார்போடு அணைத்துக் கொள்கிறாள்.... இத்தனையும் கண்ட அவள் கணவன் குழந்தைகள் மேல் கோவம் கொண்டு அவர்களைத் தாக்க முனைகின்றான்... அவன் அவளருகில் வருவதை கண்ட கோதை தன் பிள்ளைகள் இருவரையும் கைகளால் அணைத்த படி நின்றாள்... இதனைக் கண்ட அவன் ஆத்திரத்தில் அவளை தாக்கத் தொடங்கினான்.... எங்கே தான் அழுதால் தன் குழந்தைகளும் அழுதுவிடும் என்பதற்காய், அத்தனை அடிகளையும் தன் உதடுகளை இறுகக் கடித்த படி தாங்கிக் கொண்டு நின்றாள்... அப்போது கூட அவள் தனக்குள்ளே கேட்டுக் கொள்கிறாள் தான் என்ன பிழை செய்தேன் என்றவாறு....

அவளைத் தாக்கியதால்த் தடுமாறி கட்டில் மேல் விழுகின்றான் அவன்.... விழுந்தபடியே உரத்துக் கத்திவிட்டு அப்படியே தூங்கிவிட்டான். அவன் தூங்கியபின் ஒரு முறை அவள் அவனை வடிவாகப் பார்க்கிறாள்.... அவள் மனதிற்குள் சிந்திக்கின்றாள்.... எத்தனை துன்பத்தை அவர் எனக்குத் தந்தாலும் அவர் என் கணவர் என்று அவளை அவளே தேற்றிக் கொள்கிறாள்... இருந்தும் அவள் மனதில் ஒரு கேள்வி நன்மை எது... தீமை எது... என்று கூட அறியாத இந்தப் பச்சிளம் குழந்தைகள் மீது ஏன் அவர் இப்படி சீற்றம் கொள்கிறார் என்பதே..... இந்த குழப்பமான நிலையை எண்ணி அவளும் கண்ணீர் வடித்துக் கொள்கிறாள்.... சிறிது நேரம் கழித்து அவள் தன் கணவன் குழியலறையில் எடுத்த உணவுத் துகல்களை துப்பரவு செய்து கொள்கிறாள்....

இத்தனை இம்சைகளையும் பொறுத்து இன்னும் அவள் தன் கணவனுக்காக வாழும் இந்த சிறைவாசத்திற்கு எப்போது தான் விடிவு வருமோ.....!!!

பிறேம்...

Friday, August 21, 2009

பேருந்துப் பயணம்

யன்னலோரம் அமர்ந்தபடி
என்
பேருந்துப் பயணமதில்
முன்பு எங்கோ பார்த்த முகம்
இருந்தும்
முழுமையாக அறியாத...
கருமைக் கயல் விழியாள்
என் முன் ஆசனமதில்
அமைதியான சிறு புன்னகையுடன்....!

என் ஒவ்வொரு அசைவுகளையும்
தெரிந்தும் தெரியாதவளாய்
அவளும்...!
அவளின் ஒவ்வொரு அசைவினாலும்
மனம் தடுமாறி தவிப்பவனாய்
நானும்...!
ஒரே வீச்சில் பயணித்த படி...!

சிறு தூர இடைவெளியில்
காற்றோடு மிதந்து வந்த
பூவாசம் வீசும் அவள்
தோகைக் கூந்தல்
என் வதனம் பட்ட கணம்
மயில்த் தோகை வருடல்
எனக்குள் அவள் நினைப்பைத்
தூண்டுவதாய்...!

அப்படியே அவள்
கூந்தல் தனைக் கையிலெடுத்து
அவளிடத்தில் சேர்த்த போது
விழியோரம் சிறு பார்வை
சிறைப்பட்டேன் முழுமையாக...!

அவள் கன்னமதை
அலங்கரிக்கும் கருங் கூந்தல்
காற்றில் நடனமிட
அதை அவள்
காதோரம் சேர்க்கும்
ஒவ்வொரு தருணங்களிலும்
என்னை அவள் பக்கம்
ஈர்ப்பதாய் ஓர் அதிர்வு
மனதுள்ளே...!

என்
எண்ணற்ற கற்பனைகளும்
அழகிய இயற்கைகளும்
அவள் முன் சரண்
புகுந்தாற் போல்
ஓர் ஏக்கம்...!

என் இனிமையான
நெடுதூரப் பயணம்
குறுந்தூரம் கண்டபடி
முடிவுறப் போகுதென்ற
உணர்வோடு
அவளை ரசித்தபடி
சென்றிருக்க...!!!

என் இடம் வந்துவிட்டதாம்...
நடத்துனர் தட்டி சொல்கிறார்
இருந்தும்...
இறங்கிக் கொள்ள மனமின்றி
என் மனதை அங்கேயே விட்டுவிட்டு
தனியே நடக்கலானேன்
அவள் நினைவுகளைச் சுமந்தபடி...!!!


பிறேம்...

பன்றிக் காய்ச்சலைப் போல நாய்க் காய்ச்சலும் வந்து விட்டது


lankasri.comஉலகையே ஆட்டிப்படைத்து வரும் பன்றிக் காய்ச்சல் (Swine flu) பற்றிய பீதி அடங்குவதற்கு முதல் பன்றிகளில் இருந்து மனிதருக்கு தொற்றிய (H1N1) வைரஸுக்கள் போன்று நாய்களில் தொற்றைக் காண்பிக்கும் நாய்க் காய்ச்சல் (Dog flu) வைரஸுக்களின் (H3N8) தாக்கம் அமெரிக்காவில் வெர்ஜினியா மாநிலத்தில் நாய்களிடையே அவதானிக்கப்பட்டுள்ளது.

Thursday, August 20, 2009

மண் வாசனை

என் தாய் நிலத்தில்
நான் பெற்ற சந்தோஷங்களை
எண்ணிப்பார்க்கின்றேன்...!!!
ஏக்கத்துடன்....!

அயல் வீட்டில்த் தணல் எடுத்து
எம் வீட்டில் அடுப்பு மூட்டி
மண் பானை, சட்டி கொண்டு
மனம் மகிழச் சோறாக்கி......!
மத்தியான நடு வெயிலில்
அக்கம் பக்கம் பரிமாறி
நாமும் உண்ட காலம் எங்கே....???

வயலுக்குச் சென்ற கணவன்
திரும்பி வரும் வேளைதனில்
அயரை மீன் குழம்பு ஆக்கி
காத்திருந்து காத்திருந்து...!
குதூகலமாய் ஊட்டி
மகிழ்ந்த காலம் எங்கே....???

ஊர் வீட்டுத் திண்ணையில்ப்
பாட்டியுடன் அமர்ந்திருந்து...!
பழங் கதைகள் கேட்டு
ரசித்த காலம் எங்கே...???

கோயில் மணலில் அமர்ந்திருந்து,
கேலிக் கதைகள் பேசிப் பேசி
மணல் வீடு கட்டி நாம்
குடிபுகுந்த காலம் எங்கே...???

ஒற்றைப் பனையடியில்
நொங்கு குடித்துவிட்டு
தோழர்களாய் அமர்ந்து அங்கே,
காவோலை மேடை கட்டி
கரகாட்டம் ஆடி மகிழ்ந்த
காலம் எங்கே...???

வயல் வரம்பு தனில்
இதமான காற்றோடு
என் காதல்க் கதை பேசி
மகிழ்ந்த காலம் எங்கே...???

பட்டப் பகல் வேளை
எட்டுமூலைப் பட்டம் கட்டி,
பணிக்கர் வளவுதனில்....!!!
இராக் கொடி பறக்க விட்ட
காலம் தான் எங்கே...???

நான் தொலைத்த என்
அத்தனை சந்தோஷங்களும்
என்னில் மீள வந்து சேருமா...???

பிறேம்...

ஆறுமுகத்தாற்ர குசும்பு

அட என்ன தம்பியவ இங்க வெள்ளவத்தேக்க சுத்தித் திரியிறியள், யாழ்ப்பாணம் போகலையே...??? அங்க நல்லூர்த் திருவிழாவும் வேற நடக்குது நீங்க எல்லாம் போகனும் எண்டதுக்காக உங்கட பெரிய மாமா A9 றோட்டையெல்லாம் திறந்திட்டாராம் நீங்க கேள்விப்படலையோ....???

அட போங்கையா நீங்க.... உவங்கட கதையக் கேட்டு Busல யாழ்ப்பாணம் போக வெளிக்கிட்டா அவ்வளவும் தான் நடு றோட்டில நிக்க வேண்டியது தான் பாருங்கோ...!!!

தம்பி ஏன் நீங்க அப்பிடிச் சொல்லுறியள் ஆ....
இஞ்ச பாருங்கோ தம்பியவ... நான் சொல்லுறத கொஞ்சம் கேக்கிறியளே.... நீங்களெல்லாம் இளந்தாரிப் பெடியள் தானே அப்புறமென்ன Busல ஏறி பெடியளோட பெடியளா போய்ட்டு வாறது தானே... விழங்குதே நான் சொல்லுறது....

அது சரி ஐயா...!!!
அப்போ நீங்க ஏன் போகல...

எனக்கு வயசு போச்சுத் தம்பி... பிரயாணம் செய்யிறதெண்டால் செரியாண கஷ்டம்... அதால தான் நான் எங்கையும் போகிறேல... அப்பிடியும் வெளிக்கிட்டாலும் உடம்பு உசும்பாதப்பா... ஒரே அம்மலாயிடும் பொடியள்....

என்னையா நீங்க...
பெரிசுகளோட பெரிசா பகிடியா போய்ட்டு வாறது தானே.... ஆ....

தம்பி உங்களுக்கும் என்னோட தனகாட்டி திருப்தியா இருக்காதே...
சரி தம்பியவ எனக்கு நேரமாச்சு என்ட மனிசிய வேற கோயிலுக்கு கூட்டிக்கொண்டு போகணும்... அப்ப நான் வரட்டே....
பிறகு சந்திப்பம்....!!!

பிறேம்...

நிலவு தேவதை...!!!

என்
சலனம் கண்டமனதிலிருந்த
சோகங்கள் அத்தனையும்
என்னவளிடம்பகிர்ந்து கொள்ள...
என்நிலவுப் பெண்டாட்டிவருகைக்காய்
காத்திருந்த வேளை தனில்
நாண் ஏற்றும் விழியில்
நாணமதை ஏற்றிக்கொண்டு
என்
கண்ணெதிரேவந்து நின்றாய்...
இனிமையாக பேசி
என்
சோகமதை உணர்ந்த
நீ
தலை சாய மடி தந்தாய்...
என்
மனம் மகிழ தலை கோதி
ஆறுதலும் தந்தாய்...
நீ
காட்டிய பாசமதில்
தாய்மையின் சாயலை
ஒரு கணம் உணர வைத்தாய்...
என்
சோகங்களை உன்னிடத்தில்
இறக்கி வைத்தேன்...
அத்தனையும்
நீ
சுமக்கின்றாய் எனக்காக
இனியவளே...
இத்தனை அன்பான காதலி
நீ
என் அருகிருக்க
உன் குட்டிஇதயமதில்
அன்பான காதலனாய்
நான் என்றென்றும்
உன்னோடு துணையிருப்பேன்...!!!