Friday, December 31, 2010

காகம் கத்தினா ஆக்கள் வருவினும் எண்டது உண்மையோ...???


சும்மா சொல்லக்கூடாதுங்க என்ன தான் கறுப்பா இருந்தாலும் நம்மாக்கள் காகத்த இன்னமும் முன்னுரிமை குடுத்து தான் வைச்சிருக்கிறாங்கப்பா. வெள்ளிக்கிழமை விரதமெண்டாலும் சரி சனிக்கிழமை விரதம் எண்டாலும் சரி காக்காக்கு சோறு வைச்ச பிறகு தான் நாமளே சாப்பிடுறம். அப்ப பாருங்களன் நிலமைய.

இண்டைக்கும் நான் பதியப்போற இந்த பதிவு முழுக்க முழுக்க காகத்தப் பற்றினது தானுங்கோ. அந்த காலத்தில இருந்து இந்த காலம் வரைக்கும் வீட்டு முத்தத்தில காகம் கத்தினா யாரோ வரப் போகினும் எண்ட கருத்து இன்னமும் வழக்கத்தில தான் இருக்குது. தெரிஞ்சோ தெரியாமலோ யாரும் இத மறுக்க மாட்டினும் எண்டு நினைக்கிறன். அதுவும் தீவுப் பகுதிகளைச் சேந்தவராய் இருக்கட்டும், இல்ல யாழ்ப்பாணத்த சேந்தவரா இருக்கட்டும் அவங்க எல்லாரும் பரவலா இன்னமும் நம்பிறாங்க முத்தத்தில காகம் கத்தினா யாரோ வரப்போறாங்க எண்டு.
இது எந்தளவுக்கு உண்மை எண்டது சரியாய் தெரியவில்லை. ஆனால் நான் அறிந்த வரையில் காகம் கத்தி வீட்டுக்கு விருந்தினர் வந்தும் இருக்கிறார்கள் அது தவிர மரணச் செய்திகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றான. அத விட வேற வேற விதமான நிகழ்வுகள் எல்லாம் நடந்தேறி இருக்கிறது. அதனாலேயே காகத்துக்கும் பிரிவுகள் வைச்சிருக்கிறாங்க நம்ம மூதாதேயர்கள். எப்பிடின்னு கேக்குறிங்களா அதாகப்பட்டது “வரத்துக் காகம், கூடாத காகம், செய்தி காகம்” இத விட வேற இருக்கோ தெரியல. எவ்வளவோ கண்டு பிடிச்சவே பெயரா வைச்சிருக்க மாட்டினும்.

கொழும்ப பொறுத்த வரையில காகம் கத்தி ஆக்கள் வாறது எண்ட கதைய சொன்னா காமடியா தான் இருக்கும் ஏன்னா இருக்கிறதே அதிகம் தட்டு வீடுகளில காகம் கார் பாக்கிங் பேஸ்மண்டில நிண்டு கத்தினா இருக்கிற எல்லா தட்டுக்கும் ஆக்கள் போவாங்களா இல்ல ஏதாச்சும் செய்தி தான் அவங்கள சென்றடையுமா... இப்பிடி நீங்க யோசிக்கிறது விளங்குது, அத விட காகம் கத்தி பொமிசன் குடுத்த தான் விருந்தாளிகள் வீடுகளுக்கு போகனும் எண்டு நியதியா என்ன அப்பிடி கேக்கிறதும் விளங்குதுப்பா... பட் நான் இத சரி எண்டு சொல்ல வரலையே...

ஆனா ஊர்ப் பகுதிகளில காகம் கத்துறத முழுமையாக நம்புகிறவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். கடந்த வாரம் நான் யாழ்ப்பாணம் சென்று வர வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்ற போது வேலை எல்லாம் முடிச்சு வெட்டி நிஜயம் கதைச்சுக் கொண்டு இருக்கேக்க வழக்கம் போல காகம் கத்திச்சு. அப்ப எங்க கை சும்மா இருக்குமோ ”ஹய் சூய்” ஒரே ஒரு சவுண்ட் தான் குடுத்தன் எடுத்துச்சு பாரு ஓட்டம். பட் சின்ன கப்ல திரும்பவும் வந்து கத்திச்சு, ஆனா இந்த தடவ நான் கலைக்கல. அப்ப என்னோட அம்மம்மா சொல்லுறா இது வரத்துக் காகம் போல இருக்கு தம்பி போய் முத்தத்தில அடி அளவடா எண்டா... அடி அளக்கிறது எண்டத அண்டைக்கு தான் நானே கேள்விப்பட்டன்.

அப்பிடின்னா என்னண்டே தெரியாது சோ நான் அதின்ர விளக்கத்த கேட்டன். அம்மம்மா அடி அளக்கிறதுக்கு விளக்கம் சொல்ல தொடங்கினா அதுவும் சும்ம இல்லிங்க ஒரு பாட்டோட விளக்கம் சொன்னா. அத கேக்கிறபோ எனக்கு ஏதோ வெண்பா கேக்கிற மாதிரி இருந்திச்சு. அதுக்கப்புறம் என்னால நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல.

அம்மம்மா காகம் கத்தினதுக்கு சொன்ன பாட்டு இது தான். பெரியாக்கள் அந்த காலத்தில எழுதினது கணிச்சது எல்லாம் இன்று வரையில் பொய்க்கவில்லை. இத நீங்களும் படிச்சு பாருங்களன்.

கருமகள் அழுத போது, கடுகவே அடி அளந்து
ஒரு பதும் இரண்டும் கூட்டி, ஓரேழு கீவராகில்...
வருவது
சுகம்
இலாபம்
மழை
படை
அயனம்
வெற்றி
கருதிய சாவுண்டன்று கணித்தனர் கலைவல்லானோர்...!!!

பொருள் :

கருமகள் - காகம்
கடுகவே - உடனே
ஒரு பதும் இரண்டும் - பன்னிரெண்டு
ஓரேழு - ஏழு
கீவராகில் - பிரித்தல்

அதாவது இதின்ர விளக்கம் என்னண்டா காகம் கத்தினா உடன முத்தத்தில போய் நிண்டா நீங்க நிக்கிற நிலையில இருந்து உங்கட நிழல் எவ்வளவு தூரத்துக்கு விழுதோ அந்த இடத்த குறிச்சு வைச்சிட்டு உங்க கால் பாதத்தால அந்த நிழலின்ர நுனிவரையில அளந்து வாற எண்ணோட பன்னிரெண்ட கூட்டி அத ஏழால பிரிச்சா வாறது அதாவது வாற மிச்சம் வாறது மேல சொன்ன ஒழுங்கு முறையில அமையுமாம் மிச்சமே வராவிட்டால் அது சாவு செய்தியாய் இருக்குமாம்.

ஆனாலும் இந்த இடத்தில உங்களுக்கு சந்தேகம் கொஞ்சம் வரணுமே அதாவது பாதத்தால அளந்துக்கிட்டு போறப்போ அடி அரைக் கணக்கில வந்தா என்ன செய்யிறது... சோ அப்பிடி அரைல வந்தா அந்த அரைய கணக்கில சேர்க்கிறதே இல்லையாம் Eg - 12 1/2 எண்டு வந்தா 12ஐ தான் கணக்கெடுக்கிறதாம். இன்னொரு சந்தேகம் மழை மப்பா இருந்தா எப்பிடி அடி அளக்கிறதாம்??? யோவ் மழை பெய்யிற நேரத்தில காகம் அடிக்கடி கத்துறத கண்டிருக்கிறியோ...? மூதாதேயர் என்ன முட்டாளுகளா... கொஞ்சம் பகுத்தறிவா யோசிக்கிறதில்ல... என்னையும் சேத்து தான்யா திட்டுறன்.... :P ஏன்னா எனக்கும் இப்பிடி சந்தேகம் வந்திச்சு... :)

சோ
உங்க ஊரில காகம் கத்தினா ஒருக்கால் இத ரை பண்ணிப் பாருங்க சரியா வந்தா சொல்லுங்க. சரி வரும் எண்டு நினைக்கிறன். முன்னோர் வாக்கு அமிர்தம் கண்டியளோ...!!!
Thursday, December 30, 2010

என் 2010ம் ஆண்டின் கனவு கிறிக்கட் அணி...!!!

கிரிக்கட்டின் அகோர வளர்ச்சியும் வேகமும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. அது போக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆஷிஸ் தொடர் வேறு விறுவிறுப்பான முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் 2010ம் ஆண்டும் தனது பணியைச் செவ்வனே செய்து முடிக்கிறது... இத் தருணத்தில் எனக்கான கனவு கிரிக்கட் அணியை தேர்வு செய்திருக்கிறேன். இது 2010ம் ஆண்டில் வீரர்கள் தமது அணிக்காக செய்த பங்களிப்பின் அடிப்படையில் அவர்களது ஆண்டுக்கான சராசரியை அடிப்படையாகக் கொண்டு எந்த வீரர்கள் எனது கனவு அணியில் இடம் பிடித்தால் வலுவான அணியாக திகளும் என்ற கருதுகோளின் அடிப்படையில் என் கனவு அணியைத் தேர்வு செய்திருக்கிறேன்.

இம் முறை கடந்த முறையைப் போல் அல்லாது ரெஸ்ட் போட்டி, ஒரு நாள் சர்வதேசப் போட்டி மற்றும் இருபதிற்கு இருபது போட்டிகள் என்று மூன்று வகையான போட்டிகளுக்கும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் என முக்கியமான நாடுகளில் இருந்து வீரர்களை ஏலம் எடுத்திருக்கிறேன். இவர்களும் என் கனவு அணியை நிச்சயம் வெற்றியடையச் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

முதலில் ரெஸ்ட் போட்டியில் நான் தெரிவு செய்த கனவு அணி வீரர்களின் விபரங்களைப் பார்ப்போம்...!!!

ரெஸ்ட் அணி :

ரெஸ்ட் போட்டிக்காக அவுஸ்ரேலியா அணியில் இருந்து இரண்டு வீரர்களும், இங்கிலாந்து அணியில் இருந்து நான்கு வீரர்களும், இந்திய அணியில் இருந்து மூன்று வீரர்களும், தென்னாபிரிக்கா அணியில் இருந்து நான்கு வீரர்களும், இலங்கை அணியில் இருந்து இரண்டு வீரர்களும், நியூசிலாந்து அணியில் இருந்து ஒரு வீரருமாக மொத்தம் பதினாறு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

அணி வீரர்களின் விபரத்தைப் பார்போமேயானால்....!!!

MEK Hussey (Aus)
IJL Trott (Eng)
AN Cook (Eng)
KP Pietersen+ (Eng)
SR Tendulkar (Ind)
VVS Laxman (Ind)
HM Amla (RSA)
JH Kallis* (RSA)
KC Sangakkara^ (SL)
DL Vettori (NZ)
MG Johnson (Aus)
JM Anderson (Eng)
Harbhajan Singh (Ind)
DW Steyn (RSA)
M Morkel (RSA)
M Muralitharan (SL)

+ அணித் தலைவர் * உபதலைவர் ^ விக்கற் காப்பாளர்

இவர்களே என்னால் தேர்வு செய்யப்பட்ட என் கனவு அணி ரெஸ்ட் வீரர்கள். இருந்தும் கவலைக்குரிய விடயம் என்னவெனில் பாக்கிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகளில் இருந்து எந்த ஒரு வீரரையும் என் கனவு ரெஸ்ட் அணியில் சேர்த்துக் கொள்ள முடியாமல் போனமை. பார்க்கலாம் அடுத்த ஆண்டுக்கான கனவு அணியில் இவ் அணி வீரர்கள் இடம் பிடிக்கிறார்களா இல்லையா என்று.

அடுத்ததாக ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான எனது கனவு அணியில் எவ் அணி வீரர்கள் இடம்பிடித்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

ஒரு நாள் போட்டிக்காக அவுஸ்ரேலியா அணியில் இருந்து மூன்று வீரர்களும், இங்கிலாந்து அணியில் இருந்து இரண்டு வீரர்களும், இந்திய அணியில் இருந்து இரண்டு வீரர்களும், தென்னாபிரிக்கா அணியில் இருந்து மூன்று வீரர்களும், இலங்கை அணியில் இருந்து ஒரு வீரரும், நியூசிலாந்து அணியில் இருந்து இரண்டு வீரர்களும், மேற்கிந்திய தீவுகளில் இருந்து இரண்டு வீரர்களும், பாகிஸ்தான் அணியில் இருந்து ஒரு வீரருமாக மொத்தம் பதினாறு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஒரு நாள் போட்டி அணி :

MEK Hussey (Aus)
KP Pietersen (Eng)
SK Raina (Ind)
MS Dhoni+ (Ind)
LRPL Taylor (NZ)
RT Ponting (Aus)
AB de Villiers (RSA)
KC Sangakkara*^ (SL)
CH Gayle (WI)
JH Kallis (RSA)
DM Bravo (WI)
DW Steyn (RSA)
Mohammad Amir (PK)
DL Vettori (NZ)
JM Anderson (Eng)
PM Siddle (Aus)

+ அணித் தலைவர் * உபதலைவர் ^ விக்கற் காப்பாளர்

இறுதிக்கட்டமாக கிறிக்கற் சிறிது காலம் கவனிப்பாரற்றுப் போன தருணங்களில் 20-20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் மீண்டும் கிறிக்கட் ஆர்வலர்கள் அனைவரையும் போட்டியின் இறுதிக்கட்டம் வரையில் நுனிக்கதிரையில் உக்கார வைக்கும் அளவிற்கு விறுவிறுப்பாக அமைந்து போனது இந்த இருபதிற்கு இருபது போட்டிகள். அன்றிலிருந்து கிறிக்கட் போட்டிகள் புத்துயிர் பெற்றதெனலாம் அந்த அளவிற்கு ரசிகர்களைக் கவர்ந்த போட்டியாக இந்த இருபதிற்கு இருபது போட்டிகள் மாறி இருக்கின்றது. இந்த போட்டியைப் பொறுத்த வரையில் வேகத்துக்கும் விவேகத்துக்குமே முக்கியத்துவம் எனலாம். அவ்வாறான போட்டியிலும் எனக்கான
கனவு அணியை தேர்வு செய்திருக்கிறேன்.

அதன் அடிப்படையில் என் கனவு இருபதிற்கு இருபது போட்டிகளுக்கான வீரர்களின் விபரம் இதோ...!!!

20 - 20 போட்டிக்காக அவுஸ்ரேலியா அணியில் இருந்து மூன்று வீரர்களும், இங்கிலாந்து அணியில் இருந்து இரண்டு வீரர்களும், இந்திய அணியில் இருந்து இரண்டு வீரர்களும், தென்னாபிரிக்கா அணியில் இருந்து இரண்டு வீரர்களும், இலங்கை அணியில் இருந்து ஒரு வீரரும், நியூசிலாந்து அணியில் இருந்து மூன்று வீரர்களும், மேற்கிந்திய தீவுகளில் இருந்து இரண்டு வீரர்களும், பாகிஸ்தான் அணியில் இருந்து ஒரு வீரருமாக மொத்தம் பதினாறு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

20 - 20 அணி :

DJ Hussey (Aus)
SR Watson (Aus)
KP Pietersen (Eng)
V Sehwag (Ind)
YK Pathan (Ind)
LRPL Taylor (NZ)
AB de Villiers (RSA)
Abdul Razzaq (PK)
TM Dilshan^ (SL)
CH Gayle+ (WI)
SB Styris (NZ)
DM Bravo (WI)
DL Vettori* (NZ)
DP Nannes (Aus)
GP Swann (Eng)
DW Steyn (RSA)


+ அணித் தலைவர் * உபதலைவர் ^ விக்கற் காப்பாளர்

நான் தெரிவு செய்த 20 - 20 போட்டிக்கான கனவு அணியில் அதிகமான வீரர்கள் சகல துறை வீரர்களாகவே உள்ளனர். ஆகவே இந்த அணி மிகவும் வலுவான அணியாக திகழும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. நான் 2010 ல பாத்ததில என்னால தெரிவு செய்யகூடியதா இருந்தது இவர்களைத் தான். எங்க உங்களால முடிஞ்சா உங்களுக்கென ஒரு கனவு அணிய உருவாக்கி என்னோட கனவு அணியோட மோத விடுங்க யாரு ஜெயிக்கிறாங்க எண்டு பாப்பம். நான் றெடி நீங்க றெடியா...???
Friday, December 24, 2010

யாழ்ப்பாணம் சீர்கெடுதா தாத்தா...??? தாத்தாட கருத்த கவனிச்சியளோ...???

இம் முறை என் யாழ்ப்பாணத்துக்கான விஜயம் முழுக்க முழுக்க பதிவையும், புகைப்படங்களையும் மையமாகக் கொண்டே அமைந்திருக்கிறது. அதாவது நான் பதிவுலகத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது இருந்தும் என் சொந்த மண்ணில் இருந்து இதுவரையில் எந்த ஒரு பதிவையும் பகிர்ந்ததில்லை. ஆக இம்முறை எப்பாடுபட்டாவது என் பிறந்த மண்ணில் கால்கள் பட்டபடி பதிவிட வேண்டும் என்ற அவாவில் என் வீட்டுமுத்தத்தில் இருந்து கொண்டு நான் இன்று பகல் கலந்துரையாடிய சுவாரசியமான பதிவை சுடச்சுட உங்கள் முன் ஆவலால் ஒப்புவிக்கிறேன்.

நான் பகிர இருக்கிற இந்த விசயம் ஏற்கனவே பலரால் அலசப்பட்டிருக்க கூடும் இருந்தாலும் என் பார்வையில் எப்படியான கருத்துக்கள் ஒன்றை ஒன்று சாடி நிற்கின்றன என்பதனை நீங்களே பாத்து
சொல்லுங்க. ஊருக்கு எண்டு வந்திட்டா எவ்வளவு நேரம் தான் வெட்டியா வீட்டுக்கையே குந்திக்கிட்டு இருக்கிறது. ஆனபடியா சும்மா ஒருக்கால் ஏரியாவ சுத்திக்கொண்டு வருவம் எண்டு வெளிக்கிட்டன் பிறேக்கே இல்லாத என்னோட சைக்கிளில. அப்பிடியே ஒவ்வரு இடமா அட்டண்டன்ஸ்ச போட்டுக்கிட்டே வர்றபோ தான் ஞாபகம் வந்திச்சு கணேசு வாத்தியார் வீட்டையும் ஒருக்கா போகணும் எண்டு. வாத்தியார் எண்டா போல நினைச்சிடாதீங்க எனக்கு படிப்பிச்ச வாத்தியார் எண்டு. இவர் எங்கள பொறுத்த வர அ.மு காலத்த சேந்தவர். நீங்க யோசிக்கிறது விளங்குது எங்களுக்கு கி.மு தான் தெரியும் அதென்ன அ.மு. அதாவது அம்மாக்களுக்கு முன். அதுதாங்க பாட்டன் முப்பாட்டன் காலத்து வாத்தியார். என்னக்கு ஒரு வகையில தாத்தா. இப்ப இந்த பயோ டேட்டா எல்லாம் வேணாமே...!

அப்போ தாத்தாக்கும் ஒரு சலாம் போட்டிட்டு உடனேயே வெளிக்கிடுவம் எண்டு தான் நம்பி உள்ள போனன். போனப்புறம் தான் தெரிஞ்சிச்சு சும்மா போன ஆசாரிய கூப்பிட்டு எனக்கு ஒரு ஆப்ப வை எண்டு அவசரப்பட்டுட்டமோ எண்டு. பட் தாத்தா கூட நான் பகிர்ந்துக்கிட்ட விசயம் எல்லாமே நடமுறையோட ஒத்தே இருந்திச்சு. அது தாங்க எனக்கே ஆச்சரியம்! வாத்தியார்க்கிட்ட அரிவரில இருந்து அரசியல் வரைக்கும் எல்லாமே அத்துப்படி...! அப்புறம் என்ன என்னைய சும்மா விட்டிடுவாரா என்ன! ஒவ்வரு விசயமா புட்டுப்புட்டு வைச்சுக்கிட்டே வந்தார். சரி நானும் அவர் சொல்லுற எல்லாத்துக்கும் ஆம்மா போட்டு க்கிட்டே வந்தன் ஒரு கட்டத்தில தாத்தா யாழ்ப்பாணத்தின்ர இண்டைய நிலமைக்க வந்தார். இந்த இடத்தில நான் முழிச்சிட்டன். ஏன்னா இப்போ எல்லாருமே பரவலா கதைக்கிறது இத பற்றி தான். சரி என்ன தான் அவர் அப்பிடி புதுசா சொல்ல போறார் எண்டு நானும் கவனிச்சுக்கிட்டே இருந்தன். என்ர பங்குக்கு சில கேள்விகள் தாத்தாட்ட கேக்க வேண்டி இருந்திச்சு சோ அப்பப்போ நான் அவர குறுக்கு விசாரணை செய்துக்கிட்டே இருந்தன். இதால யாழ்ப்பாண விசயம் எங்களுக்குள்ள கேள்வி பதிலா ஒரு உரையாடலாவே மாறிப்போச்சு.

தாத்தா கூட நான் கதைச்சத உரையாடல் பாணில சொன்னா தான் ஒரு கிக் இருக்கும். சோ எனக்கு தற்சமயம் ஞாபகம் இருக்கிற, அவர்கூட கதைச்ச அத்தனையையும் இங்க உரை நடையிலையே தாறன் சரியே...!

முக்கிய குறிப்பு :
சில கட்டங்களில் சில சொற்கள் இந்த TVல தண்ணியடிக்கிற கட்டங்களில படம் மங்கலா வாற மாதிரி இங்க சில சொல்லுக்கு நீங்களே அர்த்தம் போட்டுக்குங்க... Fill in the Blanks with suitable words :P

பேச்சு வாக்கில நான் கேட்டன் தாத்தா யாழ்ப்பாணம் இப்பெல்லாம் முன்னைய விட மாறி இருக்கெண்டு நினைக்கிறியளோ.... அப்ப அவர் சொன்னார் யாழ்ப்பாணம் மாறிட்டு எண்டு கடவுளே எண்டு நான் சொல்லவே மாட்டன் ஆனா யாழ்ப்பாணத்தின்ர புனித தன்மைய சீர்குலைக்கிற நடவடிக்கைகள் தான் தற் சமயம் நடந்தேறிக் கொண்டு இருக்குது மோனே! இது ஒரு கொஞ்சக் காலத்துக்கு தான்... அதுவும் யாழ்ப்பாணத்தின்ர பெயர கெடுக்கிறதுக்கு எங்கட மக்களையே பகடக் காயா பாவிக்கிறது தான் செரியான மனக் கவலை. இந்த காலத்து பொடியளுக்கு ஸ்டைல் தான் முக்கியம் தம்பி ஊரப் பற்றியோ நாட்டப் பற்றியோ எதுவிதமான கவலையும் கிடையாது.

பின்னேரமானா சைக்கிளையோ இல்ல, இப்ப தான் அப்பா அம்மாட காசுகள சுறண்டி புதுசு புதுசா மோட்டச்சைக்கிள்களையும் வாங்கி இல்லாத பொல்லாத றோட்டெல்லாம் கண்மண் தெரியாம திரியிறாங்கள். இவங்களுக்கெல்லாம் உயிரின்ர மதிப்பே தெரியாதப்பன். இத தட்டிக்கேக்க யார் இருக்கினும் நீர் சொல்லும் பாப்பம். பெடி பெட்டையளுக்குப் பின்னால திரியிறதும், பெட்ட பெடியனுக்குப் பின்னால திரியிறதும் பிறகு இப்ப கொஞ்சக்காலமா அதுகளின்ர அப்பா அம்மா ஆசுப்பத்திரிக்கு திரியிறதும் எண்டு காலம் மாறிப் போய் கொண்டு தான் இருக்கு. எல்லாம் அவன் செயல்.

இப்ப தான் கட்டவுத்து விட்டிட்டாங்களே! ஆளாளுக்கு உரு ஏறிப்போய் திரியிறாங்கள். முன்ன “பெடியள்” இருந்த போது இப்பிடி எல்லாம் திரிஞ்சவையே சொல்லும் பாப்பம்? என்ன ஒரு கட்டுக்கோப்பு! இப்ப எல்லாமே சீரழிஞ்சு போய்க்கொண்டு இருக்கு. அரசியல் எல்லாம் இப்ப எதுக்கு! அத விடுவம், ஏன்னா அரசியல கதக்க போனா இண்டைக்கு நீர் வீட்ட போக மாட்டீர்! அப்பிடி ஒரு கேவலமான அரசியல் இப்ப இருக்குது தம்பி. யாழ்ப்பாணம் இந்த நிலமைல இருக்கிறதுக்கு இதுவும் ஒரு காரணம். ஒரு காரணம் எண்டு சொல்லுறத விட முழுமுதற் காரணம் எண்டே சொல்லலாம்... ச்சே....ச்சே..!

எப்பிடி எல்லாம் வளங்கொழிச்ச யாழ்ப்பாணம் இப்ப தட்டுத் தடுமாறி தடம் மாறிப்போயிடுமோ எண்டு தான் எங்கள மாதிரி பெரிசுகளின்ர கவலை எல்லாம். இப்பத்தையான் இளசுகளுக்கு இது அடியோட விளங்குதே இல்ல, இதையே நாங்க சொல்ல போனா! யோவ் பெரிசு அதெல்லாம் எங்களுக்கு தெரியும் நீ உன் வேலைய பாத்திட்டு போ...! பிறகென்ன இந்த அவமானம் எங்களுக்கு தேவை தானா....?

ஆனா ஒண்டு அரசியல் இலாபம் தேடினுமோ இல்லையோ யாழ்ப்பாணத்தின்ர அபிவிருத்திய பொறுத்த வரையில ஏதோ முன்னேற்றம் இருக்கு தான் அத யாராலும் இல்லை எண்டு சொல்ல ஏலாது. எண்டாலும் இந்த அபிவிருத்திக்கையும் அசம்பாவிதங்களும் நடக்குது அது தான் கவலையான விசயம். முன்ன வெறிச்சோடிக் கிடந்த றோட்டெல்லாம் இப்ப ஒரே சனக்கூட்டமா இருக்குது. றேட்டுகளும் உதவாது, ஒரே புளுதி, பழக்க வழக்கங்களும் உதவாது, இப்பத்தைய
உண்மை நிலை விளங்காமல் பாத மாறிப் போற எங்கட சனத்துக்கு முன்னைய யாழ்ப்பாணத்துக்கான சரியான வழிய யாராச்சும் காட்டணும் இல்லின்னா அழிவ நோக்கி போற யாழ்ப்பாணத்த யாராலும் தடுக்க ஏலாது மோனே!

தாத்தா சொன்ன கருத்துக்கள வைச்சும் நான் அறிஞ்ச அனுபவிச்ச சில கரணங்களை வச்சும் ஒரு முடிவ நான் வகுக்கிறன் இது எந்த அளவுக்கு உண்மை எண்டத நீங்களே ஊகிச்சுக் கொள்ளுங்க.

பிரபல அரசியல்வாதிகளை போல போரைக் காரணம் காட்டி ஆதாயம் தேடுபவர்கள் பலர் இருந்தும் உண்மை நிலைப்பாட்டை சொல்ல விரும்புகிறவர்கள் வெறும் சிலரே! இதன் காரணத்தால் உண்மையின் வெளிப்பாடுகள் சமுகத்தின் சபையில் எடுபடுவதில்லை. நானும் போர்ச் சூழலில் யாழ்ப்பாணத்தில் இருந்தவன் தான் என்னாலும் உணர முடிகிறது நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த யாழ்ப்பாணத்தின் கட்டுக்கோப்பிற்கும் தற்போதைய யாழ்ப்பாணத்தின் கட்டுக்கோப்புக்கும் இடையிலான வித்தியாசத்தினை. எவ்வளவோ மாற்றங்கள் அபிவிருத்தியிலும் சரி அரசியலிலும் சரி.

மாற்றம் என்று பார்க்கின்றவிடத்து போர் முற்றுப் பெற்று A9 வீதி திறக்கப்பட்டதன் பிற்பாடே யாழ்ப்பாணத்தின் ஏழு அரைச் சனி ஆரம்பிச்சிருக்கிறது. ஒவ்வொரு விசயத்தையும் ஒட்டு மொத்தமாய் பார்த்தோமேயானால் கல்வியைப் பொறுத்த வரையில் யாழ் மைந்தர்கள் தான் முதலிடம், விளையாட்டைப் பொறுத்த வரையில் யாழ்ப்பாணத்தான் முன்னிநிலையில், கலாச்சாரத்தைப் பொறுத்த வரையில் எங்குமே இல்லாத உயர்வு என எல்லாவிதத்திலும் முதன் நிலையில் யாழ்ப்பாணத்தின் மைந்தர்களே கொடிகட்டிப் பறந்தார்கள். இதெல்லாம் எப்போது A9ற்கு முன். A9ற்கு பின்னர் எல்லாமே தலை கீழாய் மாறிக்கொண்டு வருகிறது.

தவறுகள் எல்லாவற்றையும் நாங்களே செய்து கொண்டு பழியை மட்டும் யாழ்ப்பாணத்தின் மேல் போட்டுக் கொள்கிறோம். இப்போதெல்லாம் பார்கின்ற பொழுது அடிக்கடி தலைப்பு செய்திகளாக “யாழ்ப்பாணம்” என்ற பதமே சுட்டிக்காட்டப்படுகிறது இதைத் தான் அரசியல்வாதிகள் விரும்பிறார்களா இல்லை இதெல்லாவற்றையும் தெரிந்தும் தெரியாதவர்களாய் இருக்கிறார்களா? எல்லா பிழைகளுக்கும் பொறுப்பாளிகளாய் நாங்களே இருந்து கொண்டு பழியை மட்டும் யாழ்ப்பாணத்தின் மீது சுலபமாக போட்டு விடுகிறோம்.

தவறுதான் செய்வது என்றாகிவிட்ட பிறகு தவறிற்கான பட்டத்தையும் நாங்களே பொறுப்பேற்கலாம் தானே....! எய்தவன் இருக்க அம்பை நோவானேன்...???

Monday, December 20, 2010

மனம் எனக்காய் அழுகிறது...!

அவள்
என் உயிரோடு சேர்ந்து வாழ்ந்தது
அது ஒரு கனாக்காலம்...

அவள்!
அழகானவள்...
அன்பானவள்...
உயிரினும் மேலானவள்...!

என்
மனம் எனக்காய் எடுத்துரைத்த பாடங்கள் இவை...

அவள் என் பார்வையில் பட்ட பொழுதுகளில்
விலகி நடந்தேன்
அவளை நான் காதலித்திடக் கூடாதென்பதற்காய்...!

இருந்தும்

மனமோ என் கடிவாளத்தை
இறுகவே பற்றிக் கொண்டது
நான் அவளைக் காதலிக்க வேண்டும் என்பதற்காய்...
மனம் ஒரு மந்தி! அறிந்திருக்கவில்லை அன்று.

அவள் கண்களுக்குள் சிறைப்பட்டுக் கொண்டேன்
அன்று...
நிசப்தமான இரவுகளில் அவள்
நினைவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டேன்...
மீள முடியாத இன்ப வலி காதல்...
ஒவ்வொரு நிமிஷங்களும்
எனக்காய் உணர்த்திய காதல் தார்ப்பரியங்கள்...

எனக்குள் பிறந்திட்ட
புது றணத்தில் எத்தனை வலிகள்...
கார் இருளில் நீண்டு சென்ற
எனக்கான பகல் பொழுதுகள்...
கிறுக்குப் பிடித்தவனாய் அன்று...

வார்த்தைகளை மெல்ல கோர்க்க
பழக்கித் தந்தது காதல்...
நேரத்தை விழுங்க காட்டித் தந்ததும்
காதல்...!

காலப்போக்கில் எத்தனை காத்திருப்புக்கள்...
சலித்துப் போயும் சாந்தமானவனாய் நான்...

எல்லாம் அவள் அன்புக்காய்...

என்னைப் புரிந்தும் புரியாதவளாய்
அவள்...!
அவளைப் போல் எடுத்தெறிய
தெரியவில்லை எனக்கு...

சில கணங்களில்
என்னை வார்த்தைகளால் வஞ்சித்துக் கொள்வாள்
அப்போதெல்லாம்
என்
இதயத்தில் நெருப்பை வைத்ததைப் போல் இருக்கும்
எனக்கு....

இருந்தும் பொறுத்துக் கொள்வேன்
என் உயிர் அவளாயிற்றே...!
அன்றும் நம்பி இருந்தேன்
அவளுக்கு என்மேல்
அதீத பிரியம் என்று...!!!

காலப்போக்கில்
தொடர்புகள் தூரம் போகிறது...!

என்னவளுக்கு
கடிதம் வரைந்தேன்
பதிலேதும் இல்லை...
தொலைபேசியில் அழைத்தேன்
குரல் ஏதும் இல்லை...
நேரில் சென்றேன்
அவள் அங்கு இல்லை...

இதயமே வெடித்தாற் போல்
சுறுண்டு விழுகிறேன் சுடு மணலில்...
காய்ந்த சருகுகள் கன்னத்தில் ஒட்டிக் கொள்கிறது...
மெல்ல எடுக்கையில்
அவள் சென்று வெகு நாட்கள்
தடயம் சொல்கிறது சருகுகள்...!

இன்று என்
கண்களில் கண்ணீர் வரவில்லை...
மனம் எனக்காய் கதறி அழுகிறது
காதலை உணரா ஜடத்தை
எனக்கு குறி காட்டியதற்காய்....!!!

வலிகள் பிடித்திருந்தால் கருத்துக்களை விட்டுச்செல்லுங்கள்... :)


Friday, November 19, 2010

அப்ப பாருங்களன் இவேன்ர செயற்பாட்ட...!!!

அடேங்கப்பா...!!!
என்னமா நாடு முன்னேறிக்கிட்டு போகுதுடோய். இப்பிடியொரு வேகத்த இதுக்கு முன்னாடி பாத்ததே இல்ல. அப்பிடியொரு வளர்ச்சி. தேங்கிக் கிடந்த குப்பை எல்லாத்தையும் கூட்டி அள்ளுறானுக... வாய்க்கால் எல்லாத்தையும் துப்பரவாக்குறானுக... றோட்டில இருக்கிற பிச்சக்காறங்கள கூட அடிச்சு விரட்டுறாணுக...!

ஏதோ நல்லா செய்யிறாங்க தான் ஆனாலும் இதெல்லாம் விசயம்மில்ல, நான் சொல்ல வந்ததே வேற... அபிவிருத்தி வேலையெல்லாம் சும்மா பிச்சல் வே
கத்தில போய்க்கிட்டு இருக்கு. துரித வளர்ச்சிக்கு உதாரணம் இலங்கை என்னு சொல்லிக்கலாமே...!

போன வருசம் இங்க வந்திட்டு போனவன் எல்லாம் அதே இடத்துக்கு இப்ப வந்து எங்க நான் வந்து போன இடம் என்னு கேக்கிற அளவுக்கு எல்லாமே மாறிக்கிட்டு வருது. 24 மணி நேர பொலிஸ் சேவையாம், றோட்டில கண்ட படி குப்பை போடேலாதாம், ஏன் எங்கட பாரம்பரிய தொழில் அதுதாங்க றோட்டில காறி துப்புறது. அதக்கூட அப்பப்போ பிடிக்கிறாங்களாம். தண்ணியே தேங்காத மாதிரி வடிகாலமைப்பு, மின்வெட்டே இல்லாத மாநகரம், முக்கியமா வீதி போக்குவரத்தெல்லாம் சும்மா அமர்க்களமா கண்காணிக்கிறாங்களாம்.... இப்பிடியே சொல்லிக்கிட்டே போனா எவ்வளத்த தான் நானும் சொல்லுறது.

எல்லாம் நல்லா தான் இருந்தாலும் சில விசயத்தில நம்மாக்கள் கொஞ்சம் சறுகத் தான் செய்யிறாங்கப்பா...! உங்களுக்கு விசயம் தெரியுமே இப்பெல்லாம் கொழும்பு றோட்டெல்லாம் “காப்பெட்” தான் தெரியுமோ...? அந்த மாதிரி இருக்குது... ஒரு சான் உயத்தி ஒரே சீரா றோட்டுப் போடுறாங்க பரவலா எல்லா இடத்துக்கும். இப்ப கிட்டத்தில கூட “இராஜகிரிய” பக்கம் வலு மும்முரமா போடுறாங்க...!

ஒன்னு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி பாத்தன் மாலபேல இருந்து இராஜகிரிய வரைக்கும் றோட்டெண்டா றோட்டு அந்த மாதிரி றோட்டு போட்டிருந்தாங்க... பாக்கிறத்துக்கு ஆசையாவும் இருந்திச்சு. அதையே போன கிழமை அந்த றோட்டில போனபோ பாத்தன், நீர்ப்பாசன திணைக்களத்து ஆக்கள் வரிசையா றோட் நீளத்துக்கும் கிண்டிக்கிட்டு வாறாங்க... ஏன்னா பைப்ல வெடிப்பாம் புது பைப் போட்டுக்கனுமாம். அப்ப பாருங்களன் நிலமைய... இவ்வளவு கஷ்டப்பட்டு றோட்ட போட்டிட்டு பைப் போட்டுக்கிறதுக்காக கிண்டிக்கிறாங்களாம்.


அங்க மட்டும் இப்பிடி நடக்கிறதில்ல பொதுவாவே எல்லா இடத்திலும் இப்பிடி தான் நடக்குது. இவங்கள் இப்ப கிண்டிற்ரு போக பிறகு அத மேவி விட, அடுத்த மாசம் மின்சார பொறியியல் திணைக்களம் வந்து நடுவால றோட்ட கிண்டி வயருகள தாக்க, அமைப்பா இருந்த றோட்டு மேடு பள்ளமாக, அடுத்தடுத்த நாள் மழை சும்மா தூறினோனையே தண்ணீ அதுக்க நிக்க, அடுத்த நாள் பேப்பரில வரும் ”நாடு பூராவும் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர்” வீதிகளில் எல்லாம் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் டெங்கு பரவும் அபாயம் நிலவுவதாக சுகாதாரத் தினைக்களம் தெருவித்திருக்கிறது. இப்பிடி ஒரு அறிக்கை வரும்.
இதுக்கு யார் மேல குற்றம் சொல்லுறது. சத்தியமா எனக்கு தெரியல...!

எல்லாத்தையும் நல்லாச் செய்யிறவே இதுகளையும் கொஞ்சம் கவனிச்சா சரி...!
வடிவேலு சொல்லுற மாதிரி ”எந்தவொரு விசயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும், பிளான் பண்ணாம பண்ணினா இப்பிடி தான்...!!!” ஓக்கே....!!!

இதெல்லாம் வேடிக்கையா இருந்தாலும் நிச்சயமாக சிந்திக்க வேண்டிய விடயங்கள்.
இப்ப போறன் திரும்பி வரேக்க வேற குதர்க்கத்தோட வாறன் சரியே...!!!
பாய்...!

Wednesday, November 3, 2010

காலம் மாறிப்போச்சு...!!!

கலாச்சாரம் சீரழிகிறதா...
இல்லவே இல்லை...!!!
கலாசாரம் சீரழிக்கப்படுகிறது...!
இது தான் உண்மை.
உடலுக்கேற்ற உடுப்பிருந்தும்
உடல் தெரிய உடுப்பு உடுக்கும்
பெட்டைப் பிள்ளைகளே...!!!
உங்கள் வீட்டில்
அம்மா, அப்பா வேறுலோகம்
சென்றிட்டனரோ...?
இல்லை
பார்வையிலே கோளாறோ...?
முதல் கோணல் முற்றும் கோணல் தானே
யார்தான் கண்டது...?

பெண்...!
பூவை, கோதை, மடந்தை
எவன் சொன்னான் பைத்தியக்காரன்...!
இன்று நடக்கும்
அநீதி காண்.......
பூவை, கோதை, மடந்தை
இவை கடந்தும் எல்லாமே
வாயிருந்தால்
தேம்பி தேம்பி சொல்லியழும்.

அது கிடக்க...
மின் சமிக்கையில் பஸ் ஒதுங்க
யன்னல் எங்கும் காதலர் கூட்டங்கள்
கவர்ச்சி உடையில் ஒரு சிலர்...
யான் பெற்ற இன்பம்
இவ் வையகமும் பெறுக எண்டு
காதலன் ஊர்வலம் கூட்டிச் செல்கிறானோ அவளை...?

இருந்தும்
ஒன்று, இரண்டு நியக் காதலர்களும்
இடையிடையே இருக்கத் தான் செய்கிறார்கள்.
ம்ம்ம்ம்...
கொழும்பு றொம்ப சூடு போலும்
அது தான் சூடு தணிக்கிறார்கள்
பாவம்...!

பேச்சோடு பேச்சாய்
என் பக்கம்
யன்னல் வழி எச்சில் துப்புகிறான்
ஒரு காதலன்.
ஊரே அவர்களைப் பார்த்துக்
காறித் துப்புவதை அறியாமல்...!!!

Friday, August 13, 2010

யாழ்ப்பாண மினிபஸ்சிலையும் மனிசன் ஏறுவானா....???

வணக்கமுங்கோ....!!!
ஆனப்பந்தி, அரசடி, நல்லூர், முத்திரச்சந்தி, கட்டப்பிரா, இருபால, கோப்ப, அச்சுவேலி, நெல்லியடி, பருத்துறை, பருத்துறை.....
ஆனப்பந்தி, அரசடி, நல்லூர், முத்திரச்சந்தி, கட்டப்பிரா, இருபால, கோப்ப, அச்சுவேலி, நெல்லியடி, பருத்துறை, பருத்துறை.....!

வாங்க வாங்க... அம்மா எவடம் போகணும். வாங்கோ ஏறுங்கோ. அண்ணே அந்த வாசல்ல நிக்கிற அண்ணை கொஞ்சம் தள்ளி இடம் விடுங்கோ அம்மா உள்ள போகட்டும். தயவு செய்து வாசல்ல நிக்காதீங்க அண்ணே. சொன்னா கேளுங்கோவன்...!!!
இதவிட எங்கண்ணே உள்ள போறது? புட்போட்டில நிண்டுகிட்டே கொண்டைக்ரரோட சண்ட.
இந்தக் கட்டத்தில தான் என்ர கதையக் கேளுங்க...
அதே பஸ்ல தான் நானும் போக வேண்டிய கட்டாயம் சோ கொஞ்ச நேரம் பஸ்சுக்குப் பக்கத்திலேயே நிண்டன் உந்த திருக் கூத்துக்கள பாத்துக்கிட்டு... ஏன்னா நான் நல்லூர்ல இறங்கணும் அதால என்ன கடசியா ஏறச் சொன்னார் அந்த நல்ல மனிதர். நானும் பாக்கிறன் பாக்கிறன் உர(B)பாக்கில உமிய அடையிற மாத்திரி அந்த டம்மாத் துண்டு கதவுக்கால வாறாக்கள கூப்பிட்டு கூப்பிட்டு அடைஞ்சுக்கிட்டு இருந்தார் அந்த நடத்துனர்.

இப்போ பஸ் வெளிக்கிட தொடங்கிச்சு கொண்டைக்ரர் என்னட்ட சொல்லுறார் அப்பன் ஏறு, உள்ள கால வை, தலைய உள்ள எடு எண்டு தொண தொணத்துக்கிட்டே... ஒரு கட்டத்துக்கு அப்புறம் முடியல. சோ ஒரு கால வெளில தொங்கப் போட்டுக்கிட்டு கதவ இறுக்கமா பிடிச்ச படி நான் நிக்கிறன் ஆனா பஸ் வேகமா போறதுக்கான எந்த அறிகுறியும் இல்ல. இறங்கி நடந்து போயிடலாமோ எண்டு கூட நினைச்சன். அப்பிடி ஒரு இம்சை.

ஏதோ ஏறிற்ரம் இனி என்ன வீடு போய் சேருவம் எண்டு வௌவால் மாதிரி தொங்கிக்கிட்டே வந்தன் வீடு வரைக்கும். என்ர பஸ் ஹொல்ட்ல இறங்கினதுக்கு பிறகு தான் யோசிச்சன் எனி என்ர சீவியத்தில உந்த யாழ்ப்பாண மினி பஸ்சில ஏறவே கூடாதெண்டு... என்னமா படுத்துறானுகள்.

இத விடுங்கப்பா போற வழில நடக்கிற சில்மிசங்கள் அத விடக் கொடும. ஏன்னா எந்த நேரமும் கம்பஸ் அக்காமார், பள்ளிக்கூட பிள்ளையள் எண்டு அடிக்கடி ஏறிக் கொள்ளுவாங்க. அப்பேக்கில நம்ம கொண்டைக்ரர் மார் என்ன செய்வினம் தெரியுமோ (கொஞ்சப் பேர் தான்) அவங்களுக்கு முதுகு தடவி விடுவினும். இதவிட வேற வேற சேட்டைகளும் நடந்திருக்கிறதா அறிஞ்சன். நானா பாக்காததால இங்க சொல்லிக்க விரும்பல.

இதுக்கெல்லாம் என்ன காரணம் மினிபஸ்காரங்களுக்குள்ள இருக்கிறா போட்டியா இல்ல காசா...? அவங்கட லாபத்துக்கும் தொழிலுக்கும் நாங்கதானா கிடச்சம். நாங்க என்ன ஆட்டு மந்தையளா அடசி ஏத்திக் கொண்டு போறதுக்கு...?
ஆனா வேற வழி இல்லாம திரும்பவும் அவங்ககிட்டையே போக வேண்டி இருக்கு. இத விட அரசாங்கம் ஓடுற இ.போ.ச கொஞ்சம் பறவால்ல (இ.போ.ச) ட விளக்கம் தெரியுமோ... ( இதில போனா சங்கு)

நான் அனுபவப்பட்ட என்னொரு சந்தர்ப்பம்...
ஏதோ ஒரு கோயில் திருவிழா மூட்டம் அடிக்கடி மினிபஸ் விட்டாங்கள். சன்னதி கோயில் திருவிழாவா இருக்கணும். ஒவ்வொரு ஹோல்ட்லையும் தங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேர ஏத்திக்கிட்டு போய்க்கிட்டே இருந்தானுகள். ஒரு கட்டத்தில யாரையும் ஏத்த இடமில்லை எண்ட நிலை வந்தபோ எதப்பற்றியுமே யோசிக்காம பஸ்ஸின்ர மேல் கரியர்ல என்னைய மாதிரி பெடியங்கள ஏத்திவிட்டாங்கள். சோ மேலுக்கும் (f)புள் கீளுக்கும்
(f)புள். ஆனா உள்ளுக்க இருந்த சனங்கள் உம்மையாவே செரியான பாவங்கள். உள்ள இருந்து நசிஞ்சு வெந்திருக்குங்கள்.

இந்த நிலையிலும் அவங்க குறிக்கோள் காசாத்தான் இருந்திச்சே தவிர எங்கட சனத்துக்கான போக்குவரத்துச் சேவையா இருக்கல. இந்த மாதிரியான போட்டியால எத்தினையோ தரம் பஸ் அடிபட்டிருக்குது, எத்தினையோ உயிர் போயிருக்கு. இதுக்கெல்லாம் முகம் குடுத்தும் திரும்பவும் இதையே தான் இண்டை வரைக்கும் செய்யிறாங்கள். இனியும் செய்ய போறாங்க...

கடசியா போன மாசம் ஒரு பஸ் கொண்டைக்ரரோட சண்ட பிடிச்ச கதைய கேளுங்க... முதல் சொன்ன மாதிரியே புட்போட்டில தான் நான் நிக்கிறன் ஒரு படி மேல போற அளவுக்கு அங்க இடமே இல்ல... இதில அவர் என்னட்ட சொல்லுறார் தம்பி றோட்டில பொலிஸ் நிக்கிது மேலுக்கு ஏறு எண்டு... அப்ப நான் சொல்லுறன் அண்ணே இடமில்ல அண்ணே மேலுக்கு போறதுக்கு. அதெல்லாம் போகலாம் நீ ஏறு எண்டார். அப்ப எனக்கு வந்திச்சே பாரு கோபம். நான் அவன் கிட்ட கேட்டன் எங்க முதல்ல நீ அந்த இடத்தில ஏறி நிண்டு காட்டு அப்புறமா நான் நிக்கிறன். அதுக்கப்புறமா எதுவுமே கதைக்கல அந்த நல்ல மனிதர்.

மூஞ்சுறு தான் போக வழியக்காணம் விளக்குமாத்தையும் சேத்துக் காட்டிச்சாம் எண்ட மாத்திரி இருந்திச்சு அந்தாள்ட கத...

இனிமேலும் யாழ்ப்பாணம் போனா 200 என்ன 2000 குடுத்து ஓட்டோலையோ இல்ல ஒன்னுமே இல்லாம நடந்து போவனேயொளிய உந்த மினிபஸ்சில மட்டும் ஏறவே மாட்டன்.
இது ஒண்ணும் சிரிக்கிற விசயமில்ல சிந்திக்கிற விசயம்.

யார் மனசையும் புண்படுத்திறதுக்காக சொல்லல இது நான் கண்ட அனுபவம், நீங்க கூட என்ன விட அதிகமா அனுபவப்பட்டிருப்பியள். இன்னமும் யாழ்ப்பாணத்தில இருகிற உங்களுக்கு கனக்க தெரிஞ்சிருக்கும்,,,, இப்ப சொல்லுங்க நான் சொன்னதில ஏதும் பிழையிருக்குதோ...?

Thursday, August 5, 2010

என்னே ஒரு ஈர்ப்பு அவள் கண்களில்...!!!

வழக்கம் போல் புலர்கிறது காலை
வழக்கத்துக்கு மாறாய்
எனது செயற்பாடுகள்
எல்லாமே வேகமாய் நடப்பனவாய்
ஒரு புரிதல்...!

பாயைச் சுருட்டிக் கொண்டு
கட்டில் பக்கம் ஓடுகிறேன்...
சுவரோரம் அவற்றை சாய்த்துவிட்டு
அருகே தொங்கும் நாட்காட்டியில்
தின பலன் பார்ப்பதற்காய்...
திகதி கிழிக்கிறேன்...!
இடபம் - புதிய சந்திப்பு
பார்த்த கணத்தில் இருந்து
மனதில் அன்று மட்டும் ஏதோ
கேள்விகள்...!

அந்தரப்பட்டு அவசரப்பட்டு
காலைச் சாப்பாட்டை மறந்து
புறப்பட தயாராகிக் கொண்டிருக்கையில்
அம்மா அழைக்கிறார்
தம்பி ஒருவாயாவது சாப்பிட்டுப் போயன்...
மறுப்புக் குரல் குடுத்து
வேகமாய் வாசல் கடக்கிறேன்...!

என்னவாய் இருக்கும்..?
யாராய் இருக்கும்..?
அவள் எப்படி இருப்பாள்...?
வினாக்கள் மட்டுமே என்னுள்
விடைகள் ஏதுமில்லை...
இப்படியே நுழைகிறேன்
ஏதோ ஒரு Plazzaக்குள்...
என் தேவையை ஒவ்வொன்றாய்
நிவர்த்தி செய்து கொண்டுவருகிறேன்
இருந்தும்
புதிய சந்திப்புக்களுக்கான
தடயங்கள் ஏதும் இல்லை...

ஒரு கட்டத்தில்
மனசு கேட்கிறது என்னிடத்தே
”ஏன் இத்தனை ஆர்ப்பரிப்பு...?
நீ யாரையாவது சந்திக்க நேர்ந்தால்
அவர்கள் ஏன் ஒரு ஆணாக இருக்கக் கூடாது...?
இல்லை
வயது வந்தவராக இருக்கக் கூடாது...?”
மனசின் கேள்வி நிஜாயமானதாய்
எனக்குப்பட்டது...!
ஒரு கணம் என் தலையை நானே தட்டிக் கொண்டு
இத்தனை நேரமும் என் எண்ண ஓட்டத்தில்
ஒரு பெண்ணின் சந்திப்பாய் எண்ணியிருக்கிறேனே... சே...!

அவ்விடம் விட்டு நகர
வாசல் நோக்குகிறேன்
எதிரே ஒரு தேவதை...
என்னுள் எல்லாமே ஸ்தம்பித்தாயிற்று
அவள் முன் ஒரு சிலை என நின்றேன்
சில வினாடிகள்...!
என்னே ஒரு ஈர்ப்பு அவள் கண்களில்...!

Heyyy....!
Helloooov...!
Excuse meee...!
அவள் என்னிடத்தே ஏதோ சொல்லிக் கொள்கிறாள்
நானோ அவள் கண்கள் வழி உள்நுழைந்து
அவள் மனசில் எனக்காய் இடம் தேடிக் கொண்டிருக்கிறேன்...!
இது தான் கண்டதும் காதலா... ம்ம்
கண்களை குணுக்கி
உதடுகளைச் சுழித்தபடி விலகிச் செல்கிறாள்
அவள்...

என்னுள்
மீண்டு வந்தேன் நான்
ஆனால்
என் முன் அவள் இல்லை...
தூரம் விலகிச் சென்று கொண்டிருக்கிறாள்
சற்றே துரத்துகிறேன்...
Excuse me...! Excuse me...!
மெல்லத் திரும்புகிறாள்...
அவள் விழி விழிம்பில் சிறைப்பட்டுக் கொண்டேன்
நான்...!

மெல்ல வாய் திறக்கிறேன்...
you... you... you are looking very cute...!
என்னை அறியாமல் சொல்லிவிட்டேன்...
அவளோ சிறிதாய் புன்னகைத்து
Thanks... என்று ஒரு வார்த்தையில்
எல்லாத்தையும் முடித்துவிட்டு
அவள்பாட்டுக்கு சென்றுவிட்டாள்...!

இது தான் அந்த சந்திப்பா...?
இருந்தும்
அவசரப்பட்டு விட்டோமோ
என எண்ணி கைகளால்
என் தலையைக் குழப்பியபடி
கண்களுக்குள் பதிந்திட்ட
அவள் நினைவுகளோடு
வெளியில் விரைகிறேன் நான்...!!!
Tuesday, August 3, 2010

நல்லூர் கந்தனுக்கு அரோகரா...!!!

கந்தனுக்கு அரோகரா.... முருகனுக்கு அரோகரா... முத்துக் குமரனுக்கு அரோகரா.... வடிவேலனுக்கு அரோகரா... முருகா... முருகா... முருகா... முருகா...!!!

ஏய்... ஏய்... கொஞ்சம் பொறுங்கப்பா இத வாசிச்சிட்டு இப்பவே வீட்டுக்க உறுண்டிடாதீங்கப்பா... பொறுமை... பொறுமை...! நாமெல்லாம் ஒண்ணா விடியக்காலம நல்லூர்ல போய் பிரதட்ட அடிக்கிறதுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு அது வரைக்கும் பொறுத்துக்குங்கப்பா...!

இப்ப விசயம் என்னண்டா இந்த முற நல்லூர் திருவிழா ஒரு களைகட்டும் அதில எந்த சந்தேகமும் இல்ல ஆனா என்ன நல்லூர் தொண்டர் படை தான் ஏதோ புதுசா சட்டம் போட்டிருக்கினம் போல. அது வேற ஒண்ணுமில்லிங்கோ கோயிலுக்குள்ள போறப்போ ஆம்பிளைங்க வேட்டி சால்வையோட மட்டும் தான் போகேலுமாம் அதே மாதிரி பொம்பளைங்க சேலை, முழுப்பாவாடை சட்டை அதோட பாவாடை தாவணியோட தான் போகலாமாம்.

இதுகூட நல்ல ஐடியா தான். இல்ல சீரியஸ்சா தான் சொல்லுறன் A9 திறந்து பட்டி அவிட்டு விட்டதுக்குப் பிறகு யாழ்ப்பாணம் றொம்ப மாறிட்டு. யாழ் மண்ணுக்கே உரிய பாரம்பரியங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டு தான் போகுது. இந்த காலகட்டத்தில நல்லூர் கோயில் நிர்வாகம் இப்பிடியான அறிவித்தல குடுத்தது உண்மையில ஒரு நல்ல விசயம் எண்டு தான் நான் சொல்லுவன். ஏன்னா சமயப் பாரம்பரியங்களையாவது கட்டிக்காக்கிறதுக்கு இவங்கட இந்த முயற்சி நிச்சயமா வெற்றி பெறும் எண்டு நினைக்கிறன். இதையே தொடந்து செய்வினும் எண்டா இது பாராட்டுக்குரிய விசயம் தான்...!

இதால கோயில்லுக்க காத்து வாங்கிற மாதிரியான யன்னல் வைச்ச உடுப்புக்கள் போடுறவங்க பாடு அதோ கெதி தான். அது மட்டுமில்லாம ஒரு சாண் களிசாணும் ரெண்டு கைக்குட்டையளவு மேலுடுப்பும் போட்டுக்கிற பொண்ணூங்களுக்கு கோயில் வைச்சிச்சே பாரு ஆப்பு. முதலாளி உங்களுக்கு ஒரு பாராட்டு.

மூண்டு வருசத்துக்கு பிறகு நல்லூர் திருவிழாக்குப் போறதா இருக்கிறன். கன வித மாறுதலோட இந்த முற திருவிழா நடக்கும் எண்டு எதிர் பார்க்கிறன். அதிலும் மும் மதமும் ஒண்ணா நிண்டு கொண்டாடிற மாதிரியா இம் முற திருவிழா இருக்க போகுது. எல்லாருக்கும் இருக்கிற போல எனக்குள்ளும் கனக்க கற்பனைகள மெருகேத்தி வைச்சிருக்கிறன். முடிஞ்சளவு எல்லாத்தையும் நிறைவேத்திடனும்.

உங்க எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும் நல்லூர் கொடி ஏறிடிச்சுன்னா ஐஞ்சில இருந்து தொண்ணூறு வரைக்கும் ஒரே கொண்டாட்டம் தான் அந்த இருவத்தஞ்சு நாளும். கோயில சுத்தி ஒரே கடையளும், பாதாள கிணறு சேக்கஸ் எண்டு எந் நேரமும் எங்கட சனங்கள் பிஸியா தான் திரிவினும் காலமல இருந்து நடுச் சாமம் வரைக்கும் அப்பிடி ஒரு திருவிழாவ வேறெங்கையும் பாத்ததில்ல. என்ன இந்த முற கொஞ்சம் அட்வான்ஸா பல தரப்பட்ட பிஸ்னஸ் நடக்கும் “வாங்க வாங்க மலிவு எல்லாம் மலிவு எண்டு கத்துறவங்க மத்தியில அப்பப்போ லாபாய்... லாபாய்... எண்ட சத்தமும் கேக்கப் போது”.

அதால எந்த நேரமும் சன நடமாட்டம் கோயில சுத்தி இருக்கப் போது. அப்ப என்ன மாதிரிப் பொடிப் பசங்கள சொல்லவா வேணும்...! எங்க பாடு ஒரே ஜாலி தான்.

அட இத விடுங்கப்பா முக்கியமான விஷயம் என்னண்டா கள்ளர் தான் இந்த முறை திருவிழாவின் கதாநாயகர்கள், மறை பொருட்களும் அவர்களே... இந்த முற அவங்க பாடு கொந்தாய் தான்... ஒரே தங்க வேட்டை தான் போங்க... சோ திருவிழாக்கு போறவங்க நீங்க நீங்க உங்க உடமைகள சரியா பாதுகாத்துக்கோங்க.

இது எல்லாத்தையும் கடந்து இம் முற நல்லூர் கந்தனின் உட்சவம் வெகு சிறப்பாக நடந்தேறும் எண்ட நம்பிக்கைல இப்ப நான் போய்ட்டு வாறன்.

பிறகென்ன திருவிழால சந்திப்பம்.
கந்தனுக்கு அரோகரா...!!!

Thursday, July 15, 2010

தனித்து விட்டேன் நான்...!!!

மெல்லிய மழைத் தூறலில்
உனக்காய்
நான் பல மணி நேரம்
காத்திருந்தேன்... நான்
நீயோ
வழமை போல் தாமதமாய்
ஆடி அசைந்து என் பக்கம்
வருகிறாய்...!

நீ வரும் நேரம் காட்டில்

அருகே தேங்கிக் கொண்டிருந்த
மழை நீரில்
நிலா முகம் பார்த்து
உன்னை ரசித்துக் கொண்டிருந்தேன்
நான்...!

உன்னில் சிறு கோபம்

எனக்கு...
கேட்கிறேன்
ஏன் இந்த தாமதம்...?
வார்த்தைகளை அனலாய்
பொழிந்தாய்...நீ!
ஒரு நிமிடம் மௌனியாய்
உன் முன் நான்...!

உன்

தவறை மறைப்பதற்காய்
என்னைக்
குற்றவாளியக்கி விட்டாய்...நீ!
இருந்தும்
பொறுத்துக் கொண்டேன்
அனைத்தையும்...

இறுதியில்

நான் நிலா ரசித்த
மழை நீரில்
எச்சில் உமிழ்ந்துவிட்டு
செல்கிறாய் நீ...
எனக்காய் ஒரு கணம்
கலக்கம் கொள்கிறது
அந்த நிலா...!

என்னை விட்டு போகாதே

என்று கத்திக் கொள்ள
வார்த்தைகள் என்னிடம் இல்லை...!

ஓர் நொடியில்

மின்னல் வெட்டுகிறது,
இடி, காற்று, மழை
என
அனைத்தும் அசுர வேகத்தில்
உன்னை என்னிடத்தே
சேர்ப்பதற்காய்...
தமக்குள்ளே போட்டி போட்டபடி...

இருந்தும்

ஏதும் அறியா ஜடம்
போல
நீ விலகிப் போய்க் கொண்டு
இருக்கிறாய்...

நானோ

மெல்ல கிழிந்து கிடக்கும்
தாவாரத்துக்குள்
சுவரோரம் ஒதுங்கி கொள்கிறேன்...!

எனக்குள்ளே

என்னை அடக்கி
முழங்கால்களுக்குள்
முகம் புதைத்த படி

ஒரு கணத்தில்

எல்லாமே
ஓய்ந்து கொள்கிறது...
எனக்கான இயற்கையின்
போராட்டங்கள்
அனைத்தும் தோல்வியில்...

என்

மனக் குமுறலை விடுத்து
எல்லாமே நிசப்தமானதாய்...!
இதமாய் வந்து
என் தலை கோதி
தன் மடி மீது உறங்கச் சொல்கிறது
அந்த காற்று...!!!

Wednesday, July 7, 2010

அட வாங்கப்பா மூஞ்சி புத்தகத்தில Barn Buddy விளையாடுவம்...!

வணக்கமுங்கோ...!

உங்க எல்லாருக்கும் மூஞ்சி புத்தகம் தெரிஞ்சிருக்கும் எண்டு நினைக்கிறன். அது தான் ஆங்கிலத்தில (Facebook)ன்னு சொல்லுவாங்களே, அத தான் சொல்லுறன். அதப் பற்றி நான் உங்க எல்லாருக்கும் விளக்கம் தர வேண்டிய அவசியம் இல்ல. ஏன்னா நீங்களும் என்ன மாதிரி எந்த நேரமும் அதில வெட்டித் தனமாய் இருந்திருப்பியள் எண்டு நினைக்கிறன். மன்னிச்சுக்கோங்கோ உண்மைய பப்லிக்ல (Public) உளறினதுக்கு...!

நான் நினைக்கிறன் இந்த மூஞ்சி புத்தகம் தான் தற்காலத்தில மிக பெரிய தொடர்பாடல் வலையமைப்புன்னு. இது உலகிற்கு அறிமுகமானதுக்கு பிறகு தான் விடுபட்ட பல நட்பின்ர, உறவுகளின்ர தொடர்புகள் எல்லாம் எங்களுக்கு மீண்டும் கிடைச்சிச்சுன்னலாம். So அதுக்காக மூஞ்சி புத்தக ஓணருக்கு ஒரு சலாம் போட்டுகிறேன்.

சரிங்க நாம இப்ப விசயத்துக்க வருவம்...விசயம் இது தான்... இந்த மூஞ்சி புத்தகத்த பொறுத்த வரையில பல தரப்பட்ட பசிலிட்டி (Facilities) உள்ளடங்கப்பட்டிருக்கு, அத விட வித்தியாசமான விளையாட்டுக்களும் சேர்த்திருக்குறானுக. ஆனாலும் இந்த மூஞ்சிப் புத்தகம் உலகலாவிய ரீதியில றீச் ஆகினது எப்ப எண்ணு தெரியுமா. இந்த Barn Buddy எண்ட விளையாட்டு வந்ததுக்கு அப்புறமாத் தான். ஏன்னா அப்பிடி ஒரு சுவாரசியமான விளையாட்டு தான் இந்த Barn Buddy. நீங்களும் விளையாடியிருப்பியள் எண்டு நினைக்குறன்.

இந்த Barn Buddy வந்ததுக்கு அப்புறமா தான் பல பேர் மூஞ்சி புத்தக எக்கவுண்ட்(Account) திறந்துகிட்டாங்க. அதிலும் குறிப்பா ஏற்கனவே Account வைச்சிருக்கிறாவர் கூட கள்ளப் பெயரோட புதுசா Account எல்லாம் உருவாக்கி வச்சுக்கிட்டாங்க! ஏன்னா அந்த விளையாட்டு அப்பிடி Interestingன்னா பாத்துக்கோங்களேன்.

நானும் ஒரு காலத்தில மும்முரமா Barn Buddy விளையாடினவன் தான். கனக்க லெவல்((Levels) தாண்டினன் நானும். எங்க வீட்டில மொத்தம் இப்ப நாலு பொடியள் ஒரு பொட்டைச்சி இருக்கிறம். இவனுகளுக்கே நான் தான் Barn Buddy காட்டிக்குடுத்தன் but இப்ப இவனுகள் இம்சை தாங்க முடியல எப்ப பாரு தோட்டம் தான். Barn Buddyய சொன்னன். இவங்களாவது தோட்டம் செய்யிறதாவது என்னையும் சேர்த்துத் தான் சொல்லுறன். அப்ப பாருங்களன்.

அப்போ நான் விளையாடின காலத்தில Barn Buddyல நாய் ஒண்டு வாங்கிறதுக்குத் தான் போட்டி போட்டுக்கிட்டாங்க. அத வாங்கினா போதும் மற்ற தோட்டக்காரன் வந்து ஆட்டையப் போட முடியாது. ஆனா அப்பிடி இருந்தும் கடி வாங்கியே ஆட்டைய போடுறவங்க நம்ம பசங்க. அடுத்தவன் தோட்டத்தில ஆட்டையப் போடுறது தான் எவ்வளவு சுகம் நிஜத்திலும் சரி கணணியிலும் சரி. அதுவும் பட்டப் பகலிலேயே!களவாணிப் பசங்க.

அப்பிடியே சுவாரசியமா விளையாடிக்கிட்டு வந்த நான் கல்லூரி Exam எண்ட துன்பத்தால அத தற்காலிகமா நிறுத்திக்க வேண்டியதாகிற்று.என்ன செய்யிறது செரியான மன வருத்தத்தோட Barn Buddy இருந்து விலகிக்கிட்டன் ஆனாலும் எண்ட வீட்டில இருக்கிற களவாணிப் பசங்க இன்னும் லொள்ளுப் பண்ணிக்கிட்டே தான் இருக்கிறாங்க.

இத விடுங்க நாங்க தான் இத பண்ணிக்கிறம் ஏதோ பொழுது போக்கா. எண்ட கல்லூரிக் கதைய கேளுங்கோவன். எங்களுக்கு கல்லூரி தொடங்கிறது 8.30 மணிக்கு. ஆனா பொடியள் எல்லாம் timeக்கு வந்திடுவாங்கள். வாத்திமார் தான் timeக்கு வர மாட்டாங்க ஏன்னு பாத்தா அவங்க அவங்களுக்காக ஒதுக்கின கபினட்ல இருந்து Barn Buddy விளையாடிக்கிட்டு இருக்கிறாங்க. இந்த Barn Buddy வந்ததுக்கு அப்புறாமா நாமெல்லாம் றொம்ப சோம்பறிகளாகிட்டம்னா அது உண்மை தானுங்கோ.

இத மாதிரி எத்தினையோ இருக்குது சொல்லிக்கிட்டு போனா உங்களுக்கே அலுப்புத் தட்டிடும். ஏங்க வீட்டுக்கு முன்னாடி வளர்ற பூக்கண்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீயும் ஊத்திக்க மாட்டானுகள். Barn Buddyல விழுந்து விழுந்து தண்ணிய ஊத்துறாங்கள். இதில என்ன நகைச்சுவைன்னா அடுத்தவன் தோட்டத்துக்கும் சேர்த்து ஊத்துறானுகள். பூச்சிக்கு மருந்து அடிக்கிறது, காணி வாங்கி விடுறது. (ஆமா சொந்தமா வியர்வை சிந்தி வாங்கினதாக்கம்) எண்ணு ஏகப்பட்ட வேலைய பண்ணுறானுக. நடுச்சாமத்தில (Alarm) வைச்சு வேற எழும்பி நடத்துறானுகள். அப்ப பாருங்களன் நிலமைய.

என்ன தான் இருந்தாலும் மூஞ்சி புத்தகம் இன்னும் முன்ணணில வெற்றி நடை போட்டுக்கிட்டு தானுங்கோ இருக்குது. ஏன்னா எங்கள மாதிரி வெட்டிப் பசங்க இருக்கும் வரையில Barn Buddyயும் வளரும் மூஞ்சிப் புத்தகமும் வளரும்.

அட வாங்கப்பா இன்னுமொரு தடவ தோட்டம் செய்வம். நானும் மற்றவன் தோட்டத்தில ஆட்டையப் போட்டு கன காலமாச்சு சகோதரங்களா. என்ன நீங்க றெடியோ...?

அப்புறமென்ன ஆரம்பிக்க வேண்டியது தானே....!!!

அண்ணேமார் இந்த பதிவு சொட்டு அலட்டலாய் இருந்தா மன்னிச்சுக்கோங்க...!

Tuesday, July 6, 2010

வெள்ளவத்தைக் கடற்கரையும் வேண்டாத வேலைகளும்...!!!

போன சில வாரம் எனக்கு செரியான அலைச்சலா போச்சு. அதால இந்த பதிவுப் பக்கம் சரியா வர முடியல. அதுக்காக மன்னிச்சுக்கோங்கோ...!!! அது எல்லாத்துக்கும் சேத்து இண்டைக்கு ஒரு இசக்கு பிசக்கான விசயத்தோட வந்திருக்கிறன். இத யாரிட்டையும் சொல்லேலைன்னா எனக்கு தூக்கமே வராது பாருங்கோ...!!!

இத பாத்துப்புட்டு நீங்களே சொல்லுங்க ஞாயத்த சரியே...!

கடக்கரைக்கு எதுக்குங்க நீங்க போறனியள். அட சும்மா சொல்லுங்கப்பா. எங்களுக்க ஏன் இந்த ஒழிவு மறைவெல்லாம்... ம்ம் சரி
நானே பொதுவா சொல்லிக்கிறன் . நாமல்லாம் கடக்கரைக்கு பெரும்பாலும் காத்து வாங்க தானே போறது வழக்கம். அது தவிர பல பேருக்குக்கு பல தரப்பட்ட பிரச்சினைகள் இருக்கலாம் so அதையெல்லாம் தணிச்சுக்கிறதுக்காக அவங்க கடக்கரைக்கு போய்க்குவாங்க. அப்பிடி இல்லாக் காட்டிலும் என்ன மாதிரி வயசுப் பையல்கள் ஒரு பொண்ண கூட்டிக்கிட்டு (அட நான் சொல்லுறாது அவன் காதலியை) அப்பிடியே ஒரு றவுண்ட் வருவாங்க சரி தானே.

அட நானும் அந்த ரகம் தாங்க. அதாவது நான் என்ன சொல்ல வாறன் எண்டா நானும் ஒரு காலத்தில அடிக்கடி கடக்கரைப் பக்கம் போனவன் தான் காத்து வாங்க மட்டும் தான் காதல் வாங்க இல்ல தப்பா நினைச்சிடாதீங்க. அப்போ நான் போறப்போ எல்லாம் அன்பான பெரிய மனிசர பாத்தன், அழகான காதல் ஜோடிகளைப் பாத்தன், அவங்க குறும்புத்தனங்களையும் ரசிச்சன். அதுக்கப்புறமா என்னோட படிப்பு பிஸில கடக்கரையையும் மறந்தே போனன். இதெல்லாம் நடந்திச்சு எப்போ...? அது ஒரு காலம்.

இப்பிடியே கொஞ்ச காலம் ஓடி ஓய... அண்மையில அதே கடக்கரைக்கு போறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிசு அதுவும் என் நண்பன் கூட. அந்த கடக்கரை விஜயம் எங்க ரெண்டு பேரையும் வியக்க வைத்த ஒரு சம்பவம் எண்டே சொல்லலாம். பஸ்ல இருந்து இறங்கி கடக்கரை றோட்டால நடக்கிறபோவே ஏதோதோ மாறுதல்களை எங்களால் உணர முடிந்தது. நடந்து சென்ற பாதை, எங்கள கடந்து போன மனிதர்கள், எண்டு எல்லாமே வித்தியாசமான நகர்வுகள், இப்பிடியே கடக்கரைக்குக் கிட்ட போய்ப் பாத்தா என்ன கொடுமைப்பா...!

உங்கட அவசரம் விளங்குது...!
இனித் தான் விசயத்தையே சொல்ல போறன் கேளுங்கோ... கரையோரம் எங்கும் அடர்ந்து படர்ந்த புதர்கள், சிறு பற்றைகள், அது தவிர இப்போ தான் கன வான், பஸ் எல்லாம் கடக்கரையில அடுக்கி விட்டுக்கிடக்கே சங்கக் கடையில சாமான் வாங்க ஆக்கள் கியூல நிக்கிற மாதிரி. சரி இது எல்லாத்தையும் கடந்து கரைக்கு நடந்து போனம். முதல் ரயில் தண்டவாளத்த கடக்கிறபோ வலப்பக்க புதருக்க இருந்து ச்சு... ச்சு... எண்டு சத்தம் கேட்டிச்சு அப்பிடியே திரும்பிப் பாத்தா அதுக்குள்ள ரெண்டு இருந்து நெழிஞ்சிதுகள்.

நண்பன் சொன்னான் ஆகா ஆரம்பமே அசத்தலா இருக்குதே அப்போ உள்ள போனா சொல்லவா வேணும் என்ற படியே கரையில அலைகள் தளுவ பேசிக்கிட்டம். அதில ஒரு சுவாரசியமான விஷயம் என்ன எண்டா எண்ட நண்பனுக்கு தண்ணியக் கண்டா சூ.. சூ.. வந்திடும். so அவன் என்கிட்ட கையால சிக்னல் காட்டிற்ரு ஒரு ஓரமா போனான். போனவன் போன வரத்திலே திரும்பி வந்து டேய்... டேய்... இங்க வாடா நான் சூ போக போன புதருக்க ரெண்டு பேர் இருக்கிறாங்கடா எண்டான். அவன் சொன்னத கேட்டு நானும் பாத்தேனா அதுக்கையும் ரெண்டு குழைஞ்சுக்கிட்டே...

ம்ம் அதுக்கப்புறமா தான் தேடல் தொடங்கிச்சு திரும்புற பக்கமெல்லாம் ரெண்டு ரெண்டா. அதில இருந்த ஜோடிகளில காதலர்கள் எண்டா விரல் விட்டு எணிக்கலாம் எண்டா பாருங்களன். காதலர்களைத் தேடிப்பாத்தா காமுகர்கள் தான் அதிகம் இருந்தாங்க. அவரவர் றொம்ப பிஸியான வேலையில். சரி நம்ம வயசுப் பசங்க தான் ஏதோ பண்ணிக்கிறாங்க என்னா எங்க வயசு அப்பிடி.
இதில என்ன காமடின்னா! சும்மா ஒரு அறுபது அறுபத்தஞ்சு வயசிருக்கும் ஒரு கிளடு அதுக்கு பக்கத்தில ஒரு அதுக்கும் அறுபது எண்டே மதிச்சுக்கலாம். அதுகள் ரெண்டும் நாங்க உகாந்திருந்த கல்லுக்கு முன்னால இருந்து பண்ணின கொடுமை தாங்க முடியல.


அப்ப தான் நண்பன் சொன்னான் நாங்கெல்லாம் சுத்த வேஸ்ட்டா. வாடா இந்த கடலுக்க போய் குதிப்பம்டா எண்டான். ஏன்னா கொடுமைன்னா கொடுமை அப்பிடி ஒரு கொடுமை... முடியலடா சாமி. இதுக்கு மேலையும் அங்க இருந்திருந்தா எங்களுக்கும் அவங்க லீலைகளை புளூருத்ல ஏத்தியிருப்பாங்க.

எல்லாமே மாறுதலாய், எங்கும் புது மனிதர்களாய், காதலர் காதல், பசுமை எல்லாமே கடலேடு கலக்கப்பட்டதாய் ஒரு கடல்க்கரையில் நானும் ஒருவனாய்....!!!

ஆவலாய் நான் இதமான காற்று வாங்க போன கடற்கரை ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாய் கரைகளைத் தளுவிக்கொண்டுடிருந்தது. பாவம் கடல் அன்னை எவ்வளவு காலம் தான் இவர்கள் கொடுமைகளைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

காதலர்கள் அலைகள் தீண்ட கைகள் கோர்த்து நடந்து செல்ல நான் பார்த்து ரசித்த என் முன்னைய கடற்கரை மூழ்கடிக்கப் பட்டுவிட்டது இந்த காமுகர்களால்.Wednesday, June 2, 2010

கடல் - வசன கவிதை (மகா கவி)

கடலே காற்றைப் பரப்புகின்றது.விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கியிருக்கும் கடல் நீர் அந்தச் சுழற்சியிலே தலைகீழாகக் கவிழ்ந்து திசை வெளியில் ஏன் சிதறிப் போய்விடவில்லை?

பராசக்தியின் ஆணை. அவள் நமது தலைமீது கடல்வீழ்ந்து விடாதபடி ஆதரிக்கிறாள்.

அவள் திருநாமம் வாழ்க. கடல் பெரிய ஏரி; விசாலமான குளம்; பெருங் கிணறு; கிணறு நம் தலையிலே கவிழ்கிறதா? அதுபற்றியே கடலும் கவிழவில்லை. பராசக்தியின் ஆணை.

அவள் மண்ணிலே ஆகர்ஷணத் திறமையை நிறுத்தினாள். அது பொருள்களை நிலைப்படுத்துகின்றது. மலை நமது தலைமேலே புரளவில்லை. கடல் நமது தலைமேலே கவிழவில்லை. ஊர்கள் கலைந்து போகவில்லை. உலகம் எல்லா வகையிலும் இயல் பெறுகின்றது. இஃதெல்லாம் அவளுடைய திருவருள். அவள் திருவருளை வாழ்த்துகின்றோம்.

வெம்மை மிகுந்த பிரதேசங்களிலிருந் வெம்மை குன்றிய பிரதேசங்களுக்குக் காற்று ஓடிவருகின்றது. அங்ஙகனம்,ஓடி வரும்போது காற்று மேகங்களையும் ஓட்டிக் கொண்டு வருகிறது. இவ்வண்ணம் நமக்கு வரும் மழை கடற் பாரிசங்களிலிருந்தே வருகிறது.

காற்றே, உயிர்க் கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர் மழை கொண்டுவா. உனக்குத் தூபதீபங்கள் ஏற்றிவைக்கிறோம். வருணா, இந்திரா, நீவிர் வாழ்க இப்போது நல்ல மழை பெய்யும்படி அருள் புரிய வேண்டும்.

எங்களுடைய புலங்களெல்லாம் காய்ந்து போய்விட்டன. சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்று காலிகளுக்கும் நோய் வருகிறது.அதனை மாற்றியருள வேண்டும்.

பகல் நேரங்களிலே அனல் பொறுக்க முடியவில்லை. மனம் ‘ஹா ஹா’ வென்று பறக்கிறது.

பறவைகளெல்லாம் வாட்டமெய்தி நிழலுக்காகப் பொந்துகளில் மறைந்து கிடக்கின்றன. பல தினங்களாக, மாலைதோறும் மேகங்கள் வந்து கூடுகின்றன.

மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய்,ஓரிலை கூட அசையாமல், புழுக்கம் கொடிதாக இருக்கிறது. சிறிது பொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து மேகங்களை அடித்துத் துரத்திக்கொண்டு போகின்றன. இப்படிப் பல நாட்களாக ஏமாந்து போகிறோம்.

இந்திரா, வருணா, அர்யமா, பகா, மித்திரா, உங்கள் கருணையைப் பாடுகிறேன். எங்கள் தாபமெல்லாந் தீர்ந்து, உலகம் தழைக்குமாறு, இன்ப மழை பெய்தல் வேண்டும்.

Monday, May 31, 2010

வாடாத காகிதப் பூக்கள்

உடலைப் படைத்து
உள்ளத்தை விலையாக
எடுத்து கொண்டான்.
படைத்ததை வைத்து
பிழைக்க வேண்டினான்.

மறுத்து பயனில்லை.
பிழைத்தாக வேண்டும்.
உழைத்தாக வேண்டும்.
சதை உண்டு
விதை இல்லை
வலி உண்டு
வழி இல்லை.
பழி உண்டு
பாவம் இல்லை.
சோறு உண்டு
சுகம் இல்லை

சிங்காரம் செய்வது சம்சாரிக்க.
சிரித்து குழைவது அவன் கவனிக்க.

உருவம் கொடுத்து
பருவம் கொடுத்து
மனம் கெடுத்து
தானம் செய்து
வாழ்வு வாழ
இந்த உடலை தந்தான்.

சூழ் நிலை கைதியாய்
சுகம் கொடுக்கும் இயந்திரமாய்
சுரக்கும் இந்த பாத்திரம்.
பொருள்களின் விலை எப்போது ஏறும்
இவர்களின் நிலை ஏப்போது மாறும்?

பருவம் இவர்களின் கருவம்
உருவம் பாறினால் அதுவே பாரம்.
வயிற்றை கழுவ வலியயை
பொறுக்க வேண்டும்.
மஞ்சள் கயிற்றைக் கொடுக்க
சிலர் வர வேண்டும்.

சிலையாய் சிங்காரித்தால்தான்
சிலர் வருவார்கள்.
தன் குடும்பம் என்றொரு
உலகம் பார்க்க மனதில்
ஒரு ஏக்கம் உண்டு
வாழ்கையே ஒரு கானல் நீரா?
அல்லது வறண்டு போன ஆற்று நீரா?

என்ற கேள்வி என்றும்
உள்ளத்தில் உண்டு.
இவர்கள் சுரண்ட சுரண்ட
சுரக்கும் இன்ப சுரங்கம்.
தன் நலம் இல்லா குணம்
தன் வலி பொறுத்து
வருபவர் இன்புற வாழ்பவர்கள்.
சட்டம் ஒடுக்கும்
சமுதாயம் பழிக்கும்
ஆனாலும் சத்தமில்லாமல்
வாழ்கை தொடரத்தான் வேண்டும்.
சளைத்தாலும் சலித்தாலும்
இழுத்தவர் பக்கம்
சாயத்தான் வேண்டும்.

பணம் உண்டு அவனிடம்
சுகம் உண்டு இவளிடம்.
வந்தவன் வலி கொடுப்பான்
வஞ்சியவள் வலி பொறுப்பாள்.
வாழ்கை வலியும்
தேக வலியும்
பழக்கம் கொண்டாள்.
வாடாதது வாடக்கூடாதது
இந்த வாடகை மலர்கள்.
வாடினால் வாழ்கையேது?
வாடகை சந்தோஷம்
வழங்கும் விருப்பமில்லா மகிழ்ச்சி
வழங்குமோர் நிகழ்ச்சி.

வாலிபப் பசியாற வருவோர்
இங்கு ஆயிரம்.
பருவம் இருக்கும் வரை வழங்கும்
இன்பம் யாரிடம்?
முகவரி இல்லா முகத்திற்கு
முந்தானை விரித்து
முகம் சுளிக்காமல் முனகி
கரையும் தேகம் இளகி
மெழுகாய் உருகி
மனப்பூவும் கருகி
பழகிப் போன ஒன்று.


விடியலுக்காக விடியும்
வரை உழைத்து
விடிந்து வெளிச்சம்
காணாமல் தவித்து
தொடரும் ஒரு வாழ்கை.
ஆசை என்பதன்
அர்த்தம் அறியாமல்
வேஷம் போட்டு
பாசம் காட்ட
காசும் வரும்
நேசம் இல்லா
வாழும் வாழ்வு.
காசுக்கு கடை விரித்தாள்
கனவுக்கு விடை கொடுத்தாள்.
கல்லினால் மலர் பிம்பம்
செதுக்கிக் கொண்டாள்
அதயே தன் மனம்
என்று கொண்டாள்.

காகிதப் பூக்கள் வாசம் வருட
வாழும் பூக்கள்
ஒரு பூ பணத்தை கண்டால்
படுக்கையில் மலரும் இந்த பூ

சாத்திரம் தேவையில்லை
கோத்திரம் பார்ப்பதில்லை
தாரம் தரவில்லையெனில்
தருவாள் இவள் மேனி
சுகம் பொருளுக்கிணையாக.

அலங்காரம் செய்வது
அவசியம் கலைவதற்கு
மோகத்தீயில் மெழுகாய் உருகுவர்
இங்கு வந்து குளிர் காய்வர்.

மோகத்தில் மோட்சம் அடைவது
இவர்களிடத்தில்தான்.
நாலு சுவருக்குள் ஓர் உலகம்
துணைகள் மாறும் தனி உலகம்.
சதையுடன் சந்தைக்கு வந்ததால்
சிதையானது இவர்கள் வாழ்வு.

சிகப்பு விளக்கு எரியவிட்டு
செயற்கை சிரிப்பை உதட்டில் விட்டு
சில நொடிக்காக சிங்காரம் செய்து
சின்ன சினுங்கல் தவறாமல் செய்து
தூண்டிலிட்டு மீன் சிக்க காத்திருந்து.

சிக்கிய மீனுக்கு
சிலாகித்து கொள்ள வேண்டும்.
அரிதார்ம் பூசி
ஆளை மயக்குவதும்
ஒரு கலைதான்.
தேகம் வளர்க்க
சுகயாகம் செய்பவர்கள்.
பூவுலகில் வந்து விட்டோம்.
வாழும் வரை
வாழ்ந்து பார்த்திடுவோம்
என்று வாழ்பவர்கள்.
கயிற்றையும் விஷத்தையும்
முத்தமிட்டு தன் வாழ்வை
முடித்துக் கொள்ளும்
கோமளிகளின் முன்
வாழ்வே விஷமானலும்
ஓர் விடியலுக்காக
உருகும் மொழுகுவர்த்திகள்.

செல்லும் வழிதனில்க் கண்பட்ட அழகிய கவியிது...
வாழ்வியல் உண்மையில் யதார்த்தம் தனைக் கலந்தே...!!!

Thursday, May 13, 2010

நம்ம ஊரு கிரிக்கட்டும் ICC கிரிக்கட்டும்...!!!

இஞ்சே உத கொஞ்சம் கேளுங்கோவன்... உங்க எல்லாருக்கும் கிரிக்கட் பிடிக்கும் எண்டு எனக்குத் தெரியும் அதால உங்க கூட நான் கொஞ்சம் கதைக்க போறன் எண்ட கதைய கொஞ்சம் கேளுங்கோவன்...

இப்பெல்லாம் Test match, அப்புறமா One day Match எல்லாம் ஓஞ்சு போய் “ருவன்ரி-ருவன்ரி” (T-20) காலமும் வந்திட்டு... முன்ன எல்லாம் ஒரு டெஸ்ட் match நடக்குதெண்டா ஐஞ்சு நாளும் லீவு போட்டு குத்தவச்சு உக்காந்து நல்லா பாத்துக்கிட்டோம் ஆனா இப்போ ஐஞ்சு நிமிசம் கூட பாக்கிறதுக்கு நேரம் இல்ல...

ஏன்னா! உலகம் றொம்ப பிஸியாகிட்டு, ஆளாளுக்கு எவ்வளவோ வேலைகள்... ம்ம் இருந்தாலும் நேரம் கிடைகிறபோ எல்லாம் நம்ம பசங்க கிரிக்கட் பாத்துக்கொள்ளுவாங்க இல்லின்னா ஐஞ்சாறு பேர் சேந்து விளையாடிக்கிறாங்க...!!!

எது எப்பிடி எங்க மாறினாலும் நம்ம ஊரில இன்னும் கிரிக்கட் மாறவே இல்ல... அதாவது நான் என்னத்த சொல்ல வாறன் எண்டா எங்கட குறும்புத் தனமான அந்த கிரிக்கட ஆட்டத்த தான்... இந்த Rules and Regulations எல்லாம் ICCக்கு மட்டும் தான் நம்ம ஊருக்கெல்லாம் கிடையாது... இங்க ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு Rules. ICC Rules மாத்துதோ இல்லையோ நாங்க அடிக்கடி மாத்திக்குவோம்.

அம்மா நான் Classக்கு போய்டு வாரன் எண்டு சொல்லிற்ரு கிளம்புவம் ஆனா போற வழியில ஏதாச்சும் ஒரு வெறுமையான காணி எங்க கண்ணில பட்டா போதும் அப்புறம் அது தான் எங்கட SSC Ground.
அங்க கருக்குமட்டை தான் எங்கட MRF bat. அப்புறமா ஆளாளுக்கு காசு போட்டு பந்தையும் வாங்கி ஒருத்தன குனிய விட்டு அவன் முதுகில Toss போட்டு காலையில இருந்து சாய்ங்காலம் வரைக்கும் நல்லா வெயில் காஞ்சு கருவாடா தான் வீடு போய்ச் சேருவம்.

எங்க ஊர் கிரிக்கட்டின்ர சுவாரசியமே ஆளாளுக்கு ‘அலாப்பிறது’ தான். எங்க உங்களால முடிஞ்சா ICCல இத பண்ணிக் காட்டுங்க பாப்பம்... ஆனா நாங்க பண்ணுவம். பந்தையம் கட்டி கிரிக்கட் அடிக்க தொடங்கினம் எண்டா எங்க இருந்து தான் வருவாங்களோ தெரியல ஆளாளுக்கு அலாப்பிறதுக்காகவே சில பேர கூட்டிற்ரு வருவாங்க நம்ம பசங்க. என்னென்ன விதமா அலாப்புவாங்கப்பா... அதுவே சில வேளையில எங்களுக்குள்ள சண்டையாகிடும் அப்புறமா கொஞ்ச நாள் காணிப் பக்கமே போக மாட்டம்... எங்களால விளையாடாமலும் இருக்க முடியாது. So திரும்பவும் மெல்ல மெல்ல தொடங்குவம் எங்க ஆட்டத்த!

நாம எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டைகளாச்சே! எங்களுக்கேது றோசம். அடிதடி சண்டையெண்டாலும் அலேக்கா கிரிக்கட் விளையாட ஒண்ணு சேர்ந்திடுவமெல்லே...! என்ன தான் இருந்தாலும் நம்ம ஊரு கிரிக்கட் போல வருமா...??? நாம கிட்டிப்புள்ளு தான் அடிச்சாலும் சும்மா கெட்டியா பிடிச்சு அடிப்பமுள்ள... !!!

Tuesday, May 11, 2010

காற்று - மகாகவி

ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல்.ஓலைப் பந்தல்,தென்னோலை.

குறுக்கும் நெடுக்கமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளைச் சாதாரணக் கயிற்றால் கட்டி மேலே தென்னங்கிடுகுகளை விரித்திருக்கிறது.

மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக் கயிறு தொங்குகிறது.
ஒரு சாண் கயிறு இந்தக் கயிறு. ஒரு நாள் சுகமாக
ஊசலாடிக் கொண்டிருந்தது. பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை. சில சமயங்களில் அசையாமல் ‘உம்’ மென்றிருக்கும். கூப்பிட்டாற்கூட ஏனென்று கேட்காது.

இன்று அப்படியில்லை ‘குஷால்’ வழியிலிருந்தது.

எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் ஸ்நேஹம்(விருப்பம்). நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக் கொள்வதுண்டு.

“கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா?

பேசிப்பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை?

ஆனால் அது சந்தோஷமாக இரக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்ல வேண்டும். இல்லா விட்டால், முகத்தைத் தூக்கிக் கொண்டு சும்மா இருந்துவிடும், பெண்களைப்போல.

எது எப்படியிருந்தாலும், இந்த வீட்டுக் கயிறு பேசும். அதில் சந்தேகமே யில்லை. ஒரு கயிறா சொன்னேன்? இரண்டு கயிறு உண்டு. ஒன்று ஒரு சாண்; மற்றொன்று முக்கால் சாண்.

ஒன்று ஆண்; மற்றொன்று பெண்; கணவனும் மனைவியும் அவை யிரண்டும் ஒன்றையொன்று காமப்பார்வைகள் பார்த்துக் கொண்டும், புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டும், வேடிக்கைப் பேச்சுப்
பேசிக்கொண்டும் ரசப் போக்கிலேயிருந்தன.

அத்தருணத்திலே நான் போய்ச் சேர்ந்தேன. அண் கயிற்றுக்குக் ‘கந்தன்’ என்று பெயர். பெண் கயிற்றுக்குப் பெயர் ‘வள்ளியம்மை’

(மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர் வைக்கலாம்)

கந்தன் வள்ளியம்மை மீது கையைப்போட வருகிறது. வள்ளியம்மை சிறிது பின் வாங்குகிறது. அந்த சந்தர்ப்பத்திலே நான் போய்ச் சேர்ந்தேன்.

“என்ன, கந்தா, சௌக்கியம் தானா? ஒரு வேளை, நான் சந்தர்ப்பந் தவறி வந்துவிட்டேனோ, என்னவோ! போய், மற்றொரு முறை வரலாமா?” என்று கேட்டேன்.

அதற்குக் கந்தன்:- “ அட போடா வைதிக மனுஷன்! உன் முன்னே கூடி லஜ்ஜையா? என்னடி வள்ளி, நமது சல்லாபத்தை ஐயா பார்த்ததிலே உனக்குக் கோபமா?” என்றது.

“சரி. சரி, என்னிடத்தில் ஒன்றும் கேட்க வேண்டாம்” என்றது வள்ளியம்மை.

அதற்குக் கந்தன், கடகட வென்று சிரித்துக் கைதட்டிக் குதித்து, நான் பக்கத்திலிருக்கும் போதே வள்ளியம்மைக் கட்டிக்கொண்டது.

வள்ளியம்மை கீச்சுக் கீச்சென்று கத்தலாயிற்று. ஆனால் மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு சந்தோஷம். நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே நமக்கு சந்தோஷந்தானே?

இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்திதான். உள்ளதைச் சொல்லி விடுவதிலே என்ன குற்றம்?
இளமையின் சல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்பமன்றோ?

வள்ளியம்மை அதிகக் கூச்சலிடவே, கந்தன் அதை விட்டுமவிட்டத.

சில க்ஷணங்களுக்குப் பின் மறுபடி போய்த் தழுவிக் கொண்டது.

மறுபடியும் கூச்சல், மறுபடியும் விடுதல்; மறுபடியும் தழுவல்; மறுபடியும் கூச்சல், இப்படியாக நடந்துகொண்டே வந்தது. “என்ன,கந்தா, வந்தவனிடத்தில் ஒரு வார்த்தைகூடச் சொல்ல
மாட்டேனென்கிறாய்? வேறொருசமயம் வருகிறேன். போகட்டுமா?’ என்றேன்.

“அட போடா! வைதிகம்! வேடிக்கைதான பார்த்துக்கொண்டிருக்கிறாய். இன்னும் சிறிதுநேரம் நின்றுகொண்டிரு. இவளிட சில விவரகாரங்கள் தீர்க்க வேண்டியிருக்கிறது. தீர்ந்தவுடன் நீயும்
நானும் சில விஷயங்சகள் பேசலாம். என்றிருக்கிறேன். போய்விடாதே, இரு” என்றது.

நின்று மேன்மேலும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரம் கழிந்தவுடன்,பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது.

உடனே பாட்டு, நேர்த்தியான துக்கடாக்கள். ஒரு வரிக்கு ஒரு வர்ணமெட்டு.

இரண்டே‘சங்கதி’ பின்பு மற்றொரு பாட்டு. கந்தன் பாடி முடிந்தவுடன், வள்ளி, இது முடிந்தவுடன், அது மாற்றி மாற்றிப் பாடி-கோலாஹலம்.

சற்றுநேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகி நின்று பாடிக் கொண்டேயிருக்கும். அப்போது வள்ளியம்மை தானாகவே போய்க் கந்தனைத் தீண்டும்.

அது தழுவிக் கொள்ளவரும். இது ஓடும். கோலாஹலம்! இங்ஙனம் நெடும்பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்குக் களியேறி விட்டது.

நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டு வரப் போனேன்.

நான் போவதை அவ்விரண்டு கயிறுகளு கவனிக்கவில்லை.

நான் திரும்பிவந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக்கொண்டிருந்தது, கந்தன் என் வரவை எதிர்நோக்கியிருந்தது.

என்னைக் கண்டவுடன், “எங்கடா போயிருந்தாய் வைதிகம்! சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டாயே” என்றது.

“அம்மா நல்ல நித்திரை போலிருக்கிறதே?” என்று கேட்டேன்.

ஆஹா! அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்த வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மகிமையை என்னென்று சொல்வேன்!‘

காற்றுத்தேவன் தோன்றினான். அவனுடல் விம்மி விசாலமாக இருக்குமென்று நினைத்திருந்தேன். வயிர ஊசிபோல் ஒளி வடிவமாக இருந்தது. ‘நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம்
ப்ரஹ்மாஸி” காற்றே, போற்றி, நீயே கண்கண்ட பிரமம்.

அவன் தோன்றிய பொழுதிலே வானமுழுதும் ப்ராண சக்தி நிரம்பிக் கனல்வீசிக் கொண்டிருந்தது.

ஆயிர முறை அஞ்சலி செய்து வணங்கினேன்.

காற்றுத் தேவன் சொல்வதாயினன்:- “மனகே, ஏதடா கேட்டாய்? அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்ற கேட்கிறாயா? இல்லை. அது செத்துப் போய்விட்டது, நான் ப்ராண சக்தி.

என்னுடனே உறவுகொண்ட உடல் இயங்கும். என்னுறவில்லாதது சவம். நான் ப்ராணன். என்னாலேதான் அச்சிறு கயிறு களைபெய்தியவுடனனே அதனை உறங்க-இறக்க-விட்டு விட்டேன்.
துயிலும் சாவுதான். சாவும் துயிலே. யான் விளங்குமிடத்தே அவ்விரண்டும் இல்லை. மாலையில் வந்து ஊதுவேன்.
அது மறுபடி பிழைத்துவிடும்.

நான் விழிக்கச் செய்கிறேன். அசையச் செய்கிறேன்.நான் சக்தி குமாரன், என்னை வணங்கி வாழ்க. என்றான்.Sunday, April 4, 2010

என் யாழ் மண்...!!!

வாழ்ந்து கொஞ்சக் காலம் என்றாலும்
நெஞ்சில் வாழும்
புனித தேசம் தான்...
என் யாழ் தேசம் தான்........

அழகிய இழகிய நெஞ்சங்கள்......
இந்து, கிறிஸ்தவமும் உண்டு தான்..........

நகரத்தில் நல்லூர் எனும்
கிராமத்தில் மக்கள்
நளினம் நிறைந்த தேசம் தான்........

நகரத்து சினிமா தமிழை விட மோசம்......
கிராமத்து கலையெல்லாம் அருமை தான்.....

பல்கலைக் கழகங்கள் பெயருக்கேற்ப
பல்கலைக் கோயில்கள் தான்.....
பெருமனம் கொண்ட பேராசிரியர்கள்
யாழ் பெற்ற பெரும் பேறு தான்.....

தேசத்தின் ஜனாதிபதிக்கு மாளிகை......
அவர்
தேசியமும் வியப்புத்தான்........!
ஆனால்
அங்கும் கொலைகள், கொள்ளைகள்......
எங்கேயும் அவலம் தான்..........

அரசியல் புரட்சி அலைகள் எங்கேயும்
ஆழமதாய் கேட்கும்.........
சில
மாவட்டங்கள் சுதந்திர நாடாய்(...)
தனித்திடப் போராடும்............!
என்னதான் இருந்தாலும்
இங்கும்
மயக்கம் மேலையில் தான்...........

Hi...!
உங்கள் தேசத்திலும்
பெருங்கோயில்கள் உண்டா....?
என் நல்லூர்
தேசத்தை வியப்பதுவும்
இதிலே தான்.......!

பஞ்சகுடியேற்றத்தின் பிடிகளுக்குள்
நன்கு நசுக்குகின்றார்கள்.........
நம்மைப் போலவே
புறத்தியர்களும் கூலிகளய்
நாடு நாடாய்
அலைந்து திரிகிறார்கள்......

அன்னியர் பிடியினுள்
அகப்பட்டுக் கொண்டாலும்
நலமாக வாழத்தான்
நல்லூரானை நினைப்பார்கள்........

நசுக்கப்பட்டு இருந்தாலும்
நமது தமிழை நினைப்பார்கள்.......
சிலர்
நம்மை நல்லூரான் என்று...
நகைத்துமே
தம்மை மறக்கிறார்கள்......!

இந்த நிலைமை
எரிச்சலாய் இருந்தாலும்
இனிய மனிதர்கள் தான்..........
என்றும்
சந்தோஷமாய் சிரித்து உழைப்பதில்..........
சந்தர்ப்பவாதிகள் தான்.........

மதங்களின் கொள்கைகளை
மனதினில் கொண்டு.............
மகிழ்ச்சியாய் வாழ்வதில்
இவர்களுக்கு ஈடு எவருமில்லை...........

வாழ்ந்து கொஞ்சக் காலம்
என்றாலும்
வாழும் தேசம் தான்.......
என்
நல்லூர் தேசம் தான்..............!

Saturday, April 3, 2010

மண் வாசனை...!!!
என் தாய் நிலத்தில்
நான் பெற்ற சந்தோஷங்களை
எண்ணிப்பார்க்கின்றேன்...!!!
ஏக்கத்துடன்....!

அயல் வீட்டில்த் தணல் எடுத்து
எம் வீட்டில் அடுப்பு மூட்டி
மண் பானை, சட்டி கொண்டு
மனம் மகிழச் சோறாக்கி......!
மத்தியான நடு வெயிலில்
அக்கம் பக்கம் பரிமாறி
நாமும் உண்ட காலம் எங்கே....???

வயலுக்குச் சென்ற கணவன்
திரும்பி வரும் வேளைதனில்
அயரை மீன் குழம்பு ஆக்கி
காத்திருந்து காத்திருந்து...!
குதூகலமாய் ஊட்டி
மகிழ்ந்த காலம் எங்கே....???

ஊர் வீட்டுத் திண்ணையில்ப்
பாட்டியுடன் அமர்ந்திருந்து...!
பழங் கதைகள் கேட்டு
ரசித்த காலம் எங்கே...???

கோயில் மணலில் அமர்ந்திருந்து,
கேலிக் கதைகள் பேசிப் பேசி
மணல் வீடு கட்டி நாம்
குடிபுகுந்த காலம் எங்கே...???

ஒற்றைப் பனையடியில்
நொங்கு குடித்துவிட்டு
தோழர்களாய் அமர்ந்து அங்கே,
காவோலை மேடை கட்டி
கரகாட்டம் ஆடி மகிழ்ந்த
காலம் எங்கே...???

வயல் வரம்பு தனில்
இதமான காற்றோடு
என் காதல்க் கதை பேசி
மகிழ்ந்த காலம் எங்கே...???

பட்டப் பகல் வேளை
எட்டுமூலைப் பட்டம் கட்டி,
பணிக்கர் வளவுதனில்....!!!
இராக் கொடி பறக்க விட்ட
காலம் தான் எங்கே...???

நான் தொலைத்த என்
அத்தனை சந்தோஷங்களும்
என்னில் மீள வந்து சேருமா...????

எங்கே என் தோழி...!!!

நட்பெனும் வானமதில்
சிறகடித்துப் பறந்த - எம்
நட்பு இன்று சிறகொடிந்து
போனதன் காரணம் தான் என்ன......?

பள்ளிப் பருவமதில்
கதைத்துச் சிரிக்க ஒரு நட்பு
கல்லூரி வாழ்க்கையதில்
சுக, துக்கங்களைப் பகிர்ந்துகொள்ள
என் இன்றைய நட்பு.......!

நல்ல நட்பை யாசித்த
என் வாழ்க்கையில்.......
வசந்தத்தை எனக்குக்
காட்டியவள் என் தோழி.......!

அன்பில்த் தாயாக.......
சரிவுகளில் என் உடன்பிறப்பாக......
சோகங்களில் தோள் கொடுக்கும்
என் தோழியாக......
என்னோடிருந்த என் நண்பி....
இன்று எங்கே சென்றுவிட்டாய்.....?
என்னதான் ஆகிவிட்டது உனக்கு.....?

நேற்றுவரை........
நட்பெனும் தரு தனிலே
தோழர்களாய் மகிழ்ந்த நாம்....
கை தட்டினால் கலைந்து செல்லும்
காக்கைகளைப் போல் இன்று
சிதறியேபோனதன் காரணம் தான் என்ன....?

இன்றும் கூட......
நீ மௌனமாக இருந்தாலும்......
நெருங்கி வந்து
விலகிச் செல்கிறேன்......
பேச மனம் இருந்தும்...
பேசிக்கொள்ளாமல்...........!

ஒன்று தெரியுமா உனக்கு....?
நீ என்னோடு இல்லாததால்
என்னவோ........!
நீண்ட காலத்தின் பின்.....
சோகங்களும், சந்தோஷங்களும்.....
என் மனதில் மெல்ல மெல்ல....
கனக்கத் தொடங்குகின்றன.......!

என் தோழியே..........!
நீ
எங்கிருந்தாலும்
பேசிக்கொள்வாயா என்னோடு.......?
என் சோகங்களை
உன்னோடு பகிரவேண்டும்........!

Friday, April 2, 2010

அன்பு நண்பனே கிருஷான்...!!!

அன்பு நண்பனே கிருஷான்...!!!
கல்லூரிக் காலமதில்
சொல்லிலடங்கா சந்தோஷங்களைப்
பகிர்ந்த நாம்...
பள்ளி கடந்தும் தொடர்ந்திருக்க
பாதி வழியில் எனை விட்டுச்
செல்ல எப்படி மனசு வந்தது
உனக்கு...!!!

கல்லூரித் தடகளமதில்
உனக்காகக் கரகோஷம்
செய்த பவிலியன் தனை
கண்ணீரில் பரிதவிக்க விட்டு
சென்றுவிட்டாயே நண்பா...!!!

சொல்லுக்கு சொல்
மச்சான் சொல்லிக்
கதைக்கும் உன்
அழகிய பேச்சை
நான் இனி
எப்போது கேட்பேன் நண்பா...???

அன்பு நெஞ்சம் கொண்ட உனை
அழிக்கும் அளவுக்கு
ஆழிக்கு என்னடா கோபம்
உன்மேல்....???

நீ இல்லா
இவ்வுலகில்
உன் நினைவுகள் மட்டும்
நிமிடம் தோறும்
கனத்துக் கொண்டே
இருக்கிறது தோழனே...!!!

என்
அன்பு நண்பனே கிருஷான்...!!!
உன்னோடு
நான்
பகிர்ந்து மகிழ்ந்த
அத்தனை சந்தோஷங்களும்
என்னுள்ளே
என்றென்றும் நிரையோடிக்
கொண்டே இருக்கும்...!!!

நண்பா
என்
இதயத்தை உடைத்து
மனதைப் பறித்து
உன் நினைவுகளை
என்னுள் விதைத்து
சென்றவனே...
உனக்காக
என்
இறுதிக் கண்ணீர்த் துளியைக்
காணிக்கையாக்குகிறேன்....!!!

நேசமுடன்....
பிறேம்...