Wednesday, June 27, 2012

புரிதல் தொலைத்த வலி...!

இன்றும் பயணிக்கின்றேன்
புது புது கனவுகளைச் சுமந்தபடி
போகும் வழி நெடுக சிதறி
விழுகின்றன என் கனவுகள்
நான் செல்லும் பாதை
புல் வெளி தாண்டி
முட்கள் நிறைந்த வழிவழி
திருப்பம் காண்கிறது,
மனதின் கடிவாளத்திற்குள்
கட்டுண்டு கிடக்கிறேன் - நான்
கடலில் தத்தளிக்கும் துரும்பு போல
அவ்வப்போது கனவுகளும் வந்து போகும்
வரும் கனவுகளில் வலிப்பது
என்னவோ என் இதயமே! - உயிர் வலியது!
இனம் தெரியாத புரிதலுடன்
இரு மருங்கும் பரந்து தொடரும்
இரட்சகர்கள் கூட்டம் நடுவே
நாதியற்றவனாய் பயணிக்கின்றேன்
விடிவென்பது உனக்கில்லை
என கூவிப் பறக்கின்றது சாக்குருவி...!!!

Wednesday, June 20, 2012

சிந்தனைக்கு ஒரு நிமிடம் - உங்கள் சிந்தனை உங்களைக் குறிகாட்டும்...!

மீண்டும் ஒருமுறை வணக்கங்களைச் சொல்லிக்கொண்டு வித்தியாசமான ஒரு கருத்தாடலோடு வந்திருக்கிறேன்! இது முழுக முழுக்க மனிதர்களுடைய சிந்தனை சம்பந்தப்பட்டதாகவே இருக்கப் போகின்றது. அதாவது சராசரியாக குறிப்பிட்ட ஒரு தொகை மக்களை எடுத்துக் கொண்டால் அவர்களது சிந்தனைத் திறன் மனிதருக்கு மனிதர் வித்தியாசமானதாகவே காணப்படுகின்றது, இருப்பினும் ஒரு சில சந்தர்ப்பங்களில் சிலரது சிந்தனைகள் ஒன்றுபட்டனவாகக் காணப்படக்கூடிய சாத்தியங்களும் இருக்கின்றன.

குறிப்பாக சிந்தனை என்று வருகின்ற போது பல எண்ணற்ற சிந்தனைகள் ஒரு சில கணத்திலேயே தோன்றிவிடுகின்றன அதுவே குறிப்பிட்ட நாளை சந்தோஷமானதாக அல்லது குழப்பம் நிறைந்த நாளாக மாற்றிவிடுகின்றன. அதற்கான காரணங்கள் என பார்க்கப் போனால் சிலரது சிந்தனை கடந்த கால சம்பவங்களின் தொடர்ச்சியாக இருக்கும். அதாவது சிறிது காலத்திற்கு முன்னராக நடந்த சம்பவம் அவரவர் சிந்தையில் புதிய தொடர்ச்சியாக தோன்ற வாய்ப்புள்ளது, அது சில வேளைகளில் நல்லதாக இருக்க கூடும் சில வேளைகளில் கடுமையானதாக கூட இருக்க கூடும்.

இதே போன்று வேலைக்கு செல்பவர்களின் மன நிலையை எடுத்துக் கொண்டால், ஞாயிற்றுக் கிழமையாக இருக்கும் போது ஒரு சிலர் மனதில் சடுதியாக தோன்றும் எண்ணம் ஐயய்யோ நாளைக்கு திங்கக்கிழமை, வேலைக்கு போகணும்... இப்படி அவர்கள் சிந்தனை சலிப்புடன் இருக்குமேயானால் அன்றைய நாள் அவர்களைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சிகரமானதாக அமைய வாய்ப்புக்கள் குறைவே!

எது எவ்வாறாயினும் வேலைத் தளங்களில் வேலையுடன் ஒருமித்துவிட்டால் இப்படியான சிந்தனைகள் கூட மழுங்கடிக்கப்பட்டுவிடும். எல்லாம் மனம் சம்பந்தப்பட்ட எண்ணங்களாகவே இருக்கின்றன.

அது தவிர்த்து சிலர் தமது சக வேலையாட்களுடன் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறோம் என்றவாறே சிந்தனைக்குள் பயணிப்பர், இது கூட அவர்களை தேவையற்ற கற்பனைக்குள் அழைத்து சென்று முடக்கிவிட சாத்தியங்கள் அதிகமே.

இது போன்று இன்னும் பல வேறுபட்ட சிந்தனைகளை நாம் கண்டிருக்கின்றோம், ஒரே நாளில் ஒரே நிமிடத்தில் அளவுக்கு அதிகமான சிந்தனைகள் எழுவது சாத்தியமே. ஒருவரின் மனநிலையே அவரது சிந்தனையை வழிநடாத்துகின்றது, அதாவது ஒருவரது மனம் எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறதோ அதுவே பிரதிபலனாக குறிப்பிட்ட சிந்தனையை அடையாளப்படுத்துகின்ன்றது. இதுவே யதார்த்தமும் கூட.


சிலர் மனதில் கெட்ட கீழான சிந்தனைகள் அரங்கேறும், ஆதலால் அவர்களது நாள், நடவடிக்கைகள் தவறான பாதையிலேயே பயணிக்க ஆரம்பிக்கும். ஒருவனை நல்லவனாக்குவதும் சிந்தனை தான், கெட்டவனாக்குவதும் சிந்தனை தான். எப்போதும் எண்ணம் உயர்வாக இருத்தல் வேண்டும் என பல ஆய்வுகளில் கண்டிருக்கிறோம். அது உண்மையே!

இந்த சிந்தனை சம்பந்தமான பதிவைப் படிக்கும் நீங்கள் உங்கள் மனதிடம் ஒரு கேள்வியைச் சடுதியாகக் கேளுங்கள், இந்த நிமிடம் எதுபற்றிய சிந்தனை உங்கள் மனதில் நிரையோடிக்கொண்டிருக்கின்றது என்பதை. அது ஏற்புடையதென்றால் தொடர்ந்து செல்லுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்...!


எல்லாம் யதார்த்தமே!

பெரிய மனுசன் போல கதைச்சிட்டன் எல்லா! மன்னிச்சூசூசூசூசூசூ...!

Tuesday, June 19, 2012

நண்பனின் காதல் சுயசரிதை

நண்பனின் சுயசரிதை...

இது ஒரு சோகக் கதை...! நண்பனின் கடுப்புக்கலந்த கவலை...! வாசிங்க உங்களுக்கே விளங்கும்! வேலைத் தளத்தில் நான் என் நண்பனைச் சந்திச்சபோது அவன் சொன்ன கதை...!

இதோ...!

அவரை நான் எனது பாணியில் அறிமுகப்படுத்துகிறேன்...

நான் காண்டிபன், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு படிக்க வந்தனான், வந்த இடத்தில ஆப்பு இருக்கு தெரியாம‌ மேல குந்திட்டன்! வலி தாங்க முடியல தான் இருந்தாலும் என்னால எழும்ப முடியல, குந்தினாலும் வலிக்கிது கொஞ்சம் அசைஞ்சாலும் வலிக்கிது! ஆனாலும் ஒரு வழியா படிச்சு முடிச்சிட்டன். வாழ்நாள் சாதனை இது! ஏன் தான் இப்பிடியோ! - சலிச்சுக்கிறான் நண்பன்!

மாசத்துக்கு மாசம் விசர் ஊசி போடுறதே வேலையா போச்சு! எடுகிற சம்பளம் ஊசில போது! ஓசில திண்ட‌ காலம் போய் ஊசி திண்டுற காலம் எனக்கு! இதை ஏன் சொல்லுறன் எண்டு இன்னும் கொஞ்சம் வாசிச்சீங்கள் எண்டால் விளங்கும்.

இப்ப புதுசா ஒரு வேலைக்கு சேந்திருக்கிறன் அதில எடுக்கிற சம்பளம் அப்பாடா இந்த மாசம் சம்பளம்  வந்திட்டு எண்டு சொல்லுறதுக்குள்ளையே வர்ற காசு முடிஞ்சிடுது, எனக்கும் ஒரு கேள் பிரண்ட் இருக்கிறா, என்ர ஊசி செலவு அவவால தான்! இப்ப முதல் சொன்னது ஞாபகம் வரும் உங்களுக்கு...
மற்றவங்க தொட்டு தொட்டு பேசுவாங்க ஆனா என்ர அவா கீறி கீறி பேசுவா! அவளவு பாசம் என் மேல!

இப்பிடி கனக்க நடந்திருக்கு எனக்கு எல்லாமே சொல்ல ஏலாது தானே!  இத ஒருவேள அவ பாத்தா அப்புறம் ஒரு அன்புக் கீறல் விழும்! எதுக்கு எனக்கு ஊசி செலவு?

அப்பிடி இருந்தும் நான் அவ கூட அன்பா கதைக்க போவன் கடைசில அதுவே புது ஆப்பா மாறிடும்! ஊத்தப்  பேச்சைத் தவிர மிச்ச எல்லா கேவலத்தையும் ஒண்ணா சேத்து பேசுவா! அதிலையும் விசர் சவம்,  விசர் மூதேவினு அவ திட்டுறது கேவலமா தெரிஞ்சாலும் அழகா இருக்கும்...!

ஆனா ஒண்ணுங்க லவ் பண்ணுற பசங்க ஒருத்தருக்கொருத்தர் அடிக்கடி முத்தம் குடுப்பாங்க ஆனா என்ர அவ‌ எனக்கு மொத்தமா குடுப்பா நாலு நாளைக்கு வீங்கிற மாரி! அப்புன்னா அப்பு அப்பிடியொரு அப்பு! மூஞ்சில
மூஞ்சி எனக்கு மட்டும் தான் அடிக்கடி வரும்...


ஆ! இன்னும் ஒண்ட சொல்ல மறந்திட்டன்! அவ போன்ல கதைக்கிறதே நேர்ல கதைக்கிற போல தான் இருக்கும் அவளவு மெல்லமா தான் கதைப்பா, சிரிப்பு கூட அவளவு அழகு! அவ சிரிக்கும் போது சூர்பனகைக்கு டப்பிங் குடுத்தத போல இருக்கும்...

அட விடுங்க என்ர சோகக் கதைய இதோட நிப்பாட்டுறன், இவளவு சொல்லியும் உங்களுக்கு புரிஞ்சிருக்காதா என்ர வீர வரலாறு...? என் உடம்பில் உள்ள தழும்புகள் எல்லாம் காதல் தழும்புகள்...! தழும்புகளைப் பாக்குற  நேரமெல்லாம் ஏதோ நேர்ல அவ வந்து அடிச்சிட்டு போற போல கற்பனையெல்லாம் தோணுது!  சாமத்தில கத்திக்கூட இருக்குறன்னா பாருங்கவன்!

இனியும் நான் கதைக்க விரும்பல... இத மட்டும் அவக்கு சொல்லிடாதீங்க அடி அகோரமா இருக்கும்..!

கேட்டியள் தானே அவன்ர கதைய! உந்த பெட்டையளே இப்பிடி தான் போல! ஒருத்தன் கதையே இப்பிடி  நாறிப் போய் கிடக்கு...!!!

ச்சீ ச்சீ! வெந்து போய் கிடக்கு! இது காணும் இண்டைக்கு!  

வேணாம்டா வேணாம் காதல் மோகம், பொண்ணுங்க எல்லாம் வாழ்வின் சாபம்...!

அப்பாடா சொல்லி முடிச்சாச்சு! போய்ட்டு வாறன்! - நண்பனின் குமுறல் இது!

பஸ் எண் - 154 இல் திருடர்கள்...!

தெமட்டகொட, பொரல்ல, கொழும்புக்கம்பஸ், பம்பலப்பிட்டிய எண்டு இடங்களின்ர பெயர அடுக்கிக் கொண்டே போனார் கொண்டைக்டர். 154 எண்ட பஸ் கிரிபத்கொடைக்கும் - அங்குலானைக்கும் ஓடுற ஒரு பஸ். ஓரளவு வேகமா ஓடும் ஆனா என்ன ஒவர்நாளும் கொழும்ப சுத்திக் காட்டிக்கொண்டே தான் போகும்! சுத்திற சுத்தில களவும் போகும். விடிய காலம வேலை நேரத்திலையும், பின்னேரம் வேலை முடிஞ்சு வாற நேரமும் அந்த பஸ்ல சனம் தாங்காது! அப்பிடி ஒரு கூட்டம் அந்த பஸ்ஸுக்க.

கொண்டைக்டர் கத்த கத்த சனமும் ஏறினபடியே தான், அதுக்க கள்ளங்களும் ஏறுவாங்கள்! மக்கா! ஜாக்கிருதை! 

இப்ப கொஞ்சக்காலமா நான் கேட்டறிஞ்சதின் படி 154ல செரியான கள்ளர் தொல்லையாம் நம்மள, நம்மட சாமான் சக்கட்டுக்கள பாதுகாக்க வேண்டியது நம்மட கடமை, அதிலையும் வேற யாருக்கும் கள்ளரால ஆபத்து எண்டு வந்திச்செண்டாலும் அவர்களுக்கு அதை தெரியப்படுத்திறதிலையும் நாங்க முன் நிக்க தான் வேணும்! ஏன்னா நாளை எங்களுக்கும் இதுவே நடக்க கூடும்! 


பஸ்ஸில செரியான கூட்டம் எண்டால் கொஞ்சம் கவனமா நில்லுங்க, கூட்டமான பஸ்ல தான் கள்ளர் அதிகம் ஏறுவாங்கள். உங்கட உங்கட பேர்ஸ்(Purse), ஹாண்ட்பாக் (Handbag), கையடக்க தொலைபேசி (Phones), சங்கிலி காப்பு நகைகள் (chain) அது மட்டுமில்லாம காசு (cash) அப்பிடி ஏதாச்சும் வைச்சிருந்தா பத்திரப்படுத்திக் கொள்ளுங்க! 

இப்பெல்லாம் களவெடுக்க வாறவங்கள் எங்கள விட Decentடா தான் வாறாங்கள், பாத்தா பெரிய பெரிய கொம்பனில CEO Levelல இருக்கிறாக்கள் போல. போலிகளைக் கண்டு ஏமாராதீர்கள்!

இன்னார் தான் திருடன் என்று ஒரு சில வழிகளில் ஊகிக்க முடியும், அவர்களிடத்தில் கொஞ்சம் ஜாக்கிரிதையாக இருந்தால் போதும். பஸ்ஸில் திருட வரும் கள்ளர் கையில் ஒரு 5ரூபா ஓ 10 ரூபா Shopping Bagஐ வைத்திருப்பார்கள், அவர்களுடைய பார்வை ஆக்களையும் திருட எத்தணிக்கும் நபருடைய உடைமையிலுமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் கொஞ்சம் பதற்றத்துடனே காணப்படுவர், முக்கியமா யாராச்சும் சீட்டில இருந்தபடி உங்கட சாமான் ஓ Bagஐ தான் வைச்சிருக்கிறதா சொல்லி கேட்டா கொஞ்சம் உஷாராகிக்கொள்ளுங்க! 

பெண்கள் உங்கள் Handbagஐ எக்காரணம் கொண்டும் கூட்டமாய் இருந்தாலும் பரவாயில்லை அமர்ந்திருப்பவர்கள் கைகளில் கொடுக்க வேண்டாம்! நான் நேரில் கண்ட அனுபவத்தை வைத்து சொல்கிறேன். உங்கள் நண்பராக இருக்கட்டும் உங்கள் உறவுகளாக இருக்கட்டும் கொடுங்கள் பரவாயில்லை ஆனால் அறிமுகமில்லா நபர்களிடம் பைகளைக் கொடுப்பதை தவிருங்கள். அப்படி ஒருவேளை கொடுக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தால் கொடுத்தவர் மேல அவதானமாய் இருங்கள்.

நான் இவள நேரமும் 154ஐ பற்றி தான் சொல்லிக்கொண்டு இருக்கிறன், ஆனா வேற வேற பஸ்ல என்னென்ன நடக்குதெண்டு யாருக்கு தெரியும்.

பையன்களின் கவனத்துக்கு!


உங்கள் Purse, பணம், கையடக்க தொலைபேசி எல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்பதை நேரத்துக்கு நேரம் சரி பார்த்துக் கொள்ளுங்கள்! யார்மேலாவது சந்தேகம் வந்துவிட்டால் அவர்கள் மேல் ஒரு கண் வையுங்கள், அத்தோடு யாக்கிருதையாகவும் இருங்கள்! 

தினம் தினம் வித்தியாசமான முறைகளில் திருட்டு நடக்கிறது! அனைவருக்கும் இதை அறியப்படுத்த வேண்டியது எனது கடமை! 

இது முழுக்க முழுக்க பயணிகள் கவனத்துக்கு! அடுத்த முறை இன்னும் ஒரு பதிவோட வாறன்! 

கவனமா இருந்து கொள்ளுங்கோ! 

Wednesday, June 13, 2012

உனக்குள் நான்!

என்
மனமெனும் ஓடையில்
இன்றும் அழகாய்
நீந்திக்கொண்டிருக்கின்றன 
அழகிய நீ எனும்
கவிதைகள்...

என் மௌன மொழிகளுக்கு
இதயத்தில் இருந்தபடியே
அழகாய் பதில் தந்து கொண்டிருக்கிறாய்
நீ!

எம் கடந்தகாலம் - பற்றி
இதயத்திற்கு மெல்ல
தந்தியனுப்பிக் கொண்டிருக்கின்றது
என் நரம்புகள்...

உன் நினைவுகளுடே
நானும் மெல்ல உனக்குள் 
கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன்
என்னையே அறியாமல்...