Sunday, September 30, 2012

சக்திமான்(Shaktimaan) - 1998/99களில் எங்கள் சூப்பர் ஹீரோ...!

வணக்கமுங்கோ! 

ன்றைய கால கட்டத்தில் திரைப்படங்கள் முதற் கொண்டு நாடகங்கள் வரையில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு பிரமாண்டமான படைப்புக்கள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. கட்மான்(CATMAN), பட்மான்(BATMAN), ஸ்பைடர்மான்(SPIDERMAN) என எத்தனை மான்கள் வெளிவந்தாலும் நம்ம சக்திமான் கதாபாத்திரத்தையும் படைப்பையும் இன்றும் மறந்துவிட முடியாது. 

1998/99 காலப்பகுதி... அப்போது தான் யாழ்ப்பாணம் மீண்டும் நீண்ட கால இடைவெளியின் பின்னர் ஒளி பெற்று துல்லியதொரு வளர்ச்சியை எட்டிக்கொண்டிருந்த காலம், தொலைக்காட்சி பாவனையும் அதிகமாக பயன்படுத்தப்பட்ட காலம் அது! எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சி குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சிக்காக இயங்கிக்கொண்டு இருக்குமேயானால் அது ஞாயிற்றுக் கிழமை மதியம் 12 மணியாக தான் இருக்க முடியும். 

பொதிகை அலைவரிசை யாழ் மண்ணைப் பொறுத்தவரை எமது பொழுதுபோக்கு தொலைக்காட்சி அலைவரிசை. மதியம் 12 என்றாலே போதும் எங்கும் சக்திமான், சக்திமான் தான்! குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் மிக பிடித்த சூப்பர் ஹீரோ நாடகம் அது! சிறுவர்கள் என்ற வட்டத்தில் இருந்து நானும் சக்திமானை ரசித்தவன் தான்... :) 

எல்லோருக்கும் பிடித்தமான கதாபத்திரம் அந்த சக்திமான் கதாபாத்திரம், சக்திமானில் முகேஷ் கண்ணா(Mukesh Khanna) சக்திமானாகவும், கங்காதராகவும்(Gangadhar) இரு வேடங்களில் நடித்திருப்பார். இவர் தவிர சிறப்பான கதாபாத்திரங்களாக கீதா விஷ்வாஸ், தாம்ராஜ் கில்ஃபிஷ், டாக்டர் ஜக்கால் என முக்கிய பாத்திரங்களை ஏற்று திறமையான படைப்பொன்றை உருவாக்கியிருந்தார்கள். 

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை எல்லோராலும் விரும்பிப் பார்க்கப்பட்ட வித்தியாசமான படைப்பு இது எனலாம்! சக்திமான் சுழன்று சுழன்று வானத்தில் பறப்பதும், எதிரிகளை எதிர்த்துப் போராடுவதும் அந்த காலத்தில் வியக்கத்தக்க ஒரு கலையாக காட்டியிருந்தார்கள். அதிலும் குறிப்பாக கங்காதராக சக்திமான் செய்யும் குறும்புகள் ரசிக்கத்தக்கவை. வேற்றுக்கிரக வாசிகளைப் போல பல எதிரிகளை உருவாக்கி இருந்தார்கள், அவர்களோடு புதிய வியூகங்களில் சண்டை போடுவதும் பறப்பதும், மறைவதுமாக அற்புதமாக அந்த சக்திமான் படைப்பு இருந்தது.

சக்திமானை பொறுத்தவரையில் முக்கிய கதாபாத்திரமாக பார்ப்போரை அஞ்சவைக்கும் விதத்தில் தாம்ராஜ் கில்ஃபிஷ்ன் கதாபாத்திரம் இருந்தது. “இருள் நீடிக்கின்றது” என்ற வாசகம் அடிக்கடி அந்த கதாபாத்திரத்தால் உபயோகிக்கப்பட்டது மட்டுமல்லாமல் நாமும் அந்தக் காலத்தில் அடிக்கடி முனுமுனுத்த வசனமாக இருந்தது. அத்தோடு டாக்டர் ஜக்காலின் “பாவ்வர்” என்ற வசனமும் கூட. 

2000ம் ஆண்டை நெருங்கிய காலகட்டத்தில் மிகப் பிரபல்யமாக ஒளிபரப்பப்பட்ட தொடர் நாடகம் என்றால் அது சக்திமான் தான், அதன் பாடலும் கூட அந்த காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தது. இன்று பலரால் மறக்கப்பட்டிருக்கும் சக்திமான் என்ற நாடகம் இப்பதிவை வாசிப்பவர்கள் மனதில் மீண்டும் அந்த சூப்பர் ஹீரோ ஞாபகத்திற்கு வந்திருப்பார் என்பது திண்ணம். :) 

ஹாய் நண்பர்ஸ்! நம்ம ஹீரோவ நாங்க மறக்கலாமா...? அது தான் ஒருக்கா ஞாபகப்படுத்தினன் :) “இருள் நீடிக்கிறது” #லொலொ

நாடகத்த ஞாபகப்படுத்திட்டன் அப்ப நான் போய்ட்டு வரட்டே... பாய்...! 


Saturday, September 29, 2012

எழுத்து திருட்டும், விசயமே அற்ற பதிவுகளும்...!

சில மாத இடைவெளியின் பின்னர் பதிவர்களையும் பதிவுலக நாயகர்களையும் சந்திப்பது மிக்க மகிழ்ச்சி! இனி இனி தொடர்ச்சியாக பதிவுகள் எழுதுவேன் என்று எழுந்தமாணமாய் கருத்துக்களைச் சொல்லி நான் அதைச் செயற்படுத்தியது இல்லை இதுவரையில் ;)
கருத்து சொல்வது சுலபம் செயற்படுத்துவது சிரமம்! ஆதலால் இம்முறை நான் எந்த வாக்கும் கொடுப்பதாக இல்லை! கொடுத்த வாக்குகள் செல்லுபடியற்றுவிட்டன. 

இன்றைய விசயம் பதிவர்களின் பதிவுகளும் அவர்களின் பதிவுகள் திருட்டுப் போவதும், வேதனைக்குரிய விடயம். சில பதிவர்கள் நல்ல கருத்தோட்டமான பதிவுகளை அனுபவங்களை சிந்தித்து சிறிது சிறிதாக செதுக்கி அதை ஆக்கமாக்கி சமூகத்தின் முன் பகிர, ஒரு சில நொடிகளில் அதையே சுருட்டி எடுத்து தமது தளங்களில் பிரசுரித்து பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் ஒரு சில புதிய பதிவர்கள். சரி திருட்டு தான் செய்கிறீர்கள் செய்யும் திருட்டு திருட்டு இல்லாமல் இருக்க திருடும் தளத்தின் சுட்டியையாவது போட்டு உங்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாமே! 

மிகச்சிறந்த பதிவுகள் மற்றவர்களால் சமூகத்திற்கு பரிமாற்றப்படுவது வரவேற்க்கத்தக்கதே ஆனால் அது திருடாமல் சரியான விதத்தில் பரிமாற்றப்படும் போது பதிவர்களைப் பொறுத்தவரையில் ஏற்றுக் கொள்ளப்படத் தக்க ஒன்று! 

எழுத்து திருட்டு என்பது சில ஆண்டுகளுக்கு முதல் பதிவுலகில் பதிவர்கள் பகிர்ந்த பதிவுகளைத் தோண்டி எடுத்து தமது பெயர்களில் பிரசுரிக்கிறார்கள். திருடும் அவர்களின் நினைப்பு யாராலும் கண்டுபிடிக்க முடியாதென்று! “உனக்கு இரண்டு கண்கள் என்றால் சமூகத்திற்கு ஆயிரம் கண்கள்” ஒவ்வொருவர் எழுத்து நடையும், சிந்தனையும் வேறுபட்டவை, எழுதிய பதிவர்களுக்கு தெரியாதா தமது சொந்த பதிவா இல்லை தமது பதிவு திருடப்பட்டு விட்டனவா என்று!!!

சுயமாக சிந்திக்க தெரியாதவர்கள் எல்லாம் கருத்துக்கள் பகிர்கின்றோம் என்ற போர்வையில் ஏன் இந்த நாடகம்...? இது இவ்வாறிருக்க சிறந்த பல பதிவர்களின் ஆக்கங்கள் இந்த காலகட்டத்தில் பெரிதாய் வெளிவருவதில்லை போலும், எங்கையா போனீர்கள் பிரபல பதிவர்களே!!! உங்களது கருத்தோட்டமான, காத்திரமான படைப்புக்கள் தான் பதிவுலகத்திற்கும் சமூகத்திற்கும் தேவையான ஒன்று! பிரபல பதிவர்களின் வேகம் குறைய புதிது புதிதாய் கிளம்பியிருக்கிறார்கள் சில குட்டிப் பதிவர்கள்! புதிய பதிவர்களை பதிவுலகில் வரவேற்கின்றோம்!

புதிதாய் பதிவுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் சில பதிவர்கள் ஏதாவது பதிவுகளை தாமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விசயமே இல்லாத, சமூகத்திற்கு இயல்பான கருத்துக்களை மறுத்து ஏதேதோ பதிவுகளைப் பகிர்ந்துவிடுகின்றார்கள். பதிவுலகைப் பொறுத்த வரையில் புதியவர்களால் பதிவுகள் பகிரப்படுகின்றன ஆனால் கருத்துக்கள் புதைக்கப்படுகின்றன. 

தரமான நல்ல சமூக சிந்தனையாளர்களின் கருத்துக்கள் மீண்டும் பதிவுலகை ஆக்கிரமிக்க வேண்டும், தொய்ந்து போய் இருக்கும் பதிவுலகம் மீண்டும் புதுப் பொலிவுடன் எழுச்சி கொள்ள வேண்டும். உங்களது சிறந்த பதிவுகள் ஒரு பாடமாக புதிய பதிவர்களுக்கு இருக்க வேண்டும்! 

எழுத்து திருட்டை தடுக்க மூத்த பதிவர்களே நீங்கள் விழித்திருக்க வேண்டும்! உங்கள் முயற்சியின் பலனை வேறொருவன் அனுபவிக்க இடமளிக்காதீர்! எழுத்து திருட்டுக்கும் விசயமே அற்ற பதிவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம்!!! 

“யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல! இப்படிப்பட்ட தவறுகள் இனியும் இடம் பெறக்கூடாது என்பதற்கான வேண்டுகோள்”