Wednesday, November 30, 2016

நயினாதீவு!

கனத்த மனதோடு வள்ளத்தில் இருந்து பாலத்தில் கால் வைக்கிறேன், ஊருக்கே உரிய தனித்துவமான அந்த ஈர்ப்பு, தாய் அன்பிற்கு ஈடான அந்த குளிர்ந்த காற்றின் வருடல், பாலம் பட்டு தெறிக்கும் கனத்த அலையின் நீர்த்துகள்களின் பன்னீர் வரவேற்பு! அங்கும் இங்கும் நடமாடும் நம்மவர்கள் சக ஊரவர்கள்!
சரவணமுத்து வாத்தியார்ட பேரன் தானே நீர் என்றும், பொன்னம்மா குஞ்சியாச்சிட பேரனா தம்பி நீர் எண்டும், சுசீலா டீச்சர்ட மகனா நீர் எண்டும் அவர்கள் கேட்கும் ஒவ்வொரு தருணங்களிலும் எம் உறவுகளின் பந்தம் இன்றும் அதே பாசத்துடன் புத்துயிர் பெற்றிருப்பதைப் பறைசாற்றும்!
கைப் பையை ஒரு கையில் ஏந்தி எட்டடி நடக்கையிலே கம்பீரமாய் வரவேற்கும் தாயவளின் ராஜ கோபுரம் நாம் அறியா மாத்திரத்தில் நெஞ்சில் கை வைத்து ஒருகணம் கண் மூடி அம்மாளாச்சி தாயே என்று முணுமுணுத்தே நகரச்சொல்லும்!
பலத்த காற்றை எதிர்கொண்டு கோயில் நோக்கி பாலத்தில் நடப்பதன் சுகம் வேறு லெவல்! கிட்டவாய் அம்மாளை தரிசித்து கோயிலடி வாமதாஸ் அண்ணன் கடையடி போகையிலே அது தீவின் நவீனத்தின் அடையாளமாய், நயினாதீவின் குட்டி நகரம் என்றும் சொல்லிக்கொள்ளலாம் அந்த இடத்தை! பெரும்பாலும் எல்லாவசதிகளும் பெருவாரியாய் கிடைக்கும் இடம்!
அந்த இடத்தில் தான் என்னோடு கூட நடக்க சேர்ந்து கொண்டது அந்த பறவை!
அது நிச்சயமாக நம் மூதாதேயராய் தான் இருக்க வேண்டும், நான் நடக்கும் வீதியெங்கும் என் கூடவே வர ஆரம்பிக்கிறது, ஆரம்பத்தில் அதை நான் துரத்திவிடுவதிலே குறியாய் இருந்தேன் காரணம் அது என் கையில் இருக்கும் வடைக்கு குறி வைக்கிறது என்ற நினைப்பில் ஆனால் அதன் நோக்கம் அதுவல்ல!
மறுகணம் துரத்த எத்தணிக்கவே, அது என்னிடம் சொல்கிறது 2ம் வட்டாரம் முந்திய கலகலப்பில்லை!
என்னது! காகம் பேசுமா?
ஆம் என்னிடம் பேசியது!
அது தன்னை இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு நான் எடுத்து வைக்கும் ஒவ்வோரு அடியிலும் ஒவ்வொருவரைப் பற்றி விளக்கம் கொடுத்தபடியே நகரத் தொடங்கியது!
இது இன்னாருடைய காணி, இது இன்னாருடைய கடை, இது இன்னாருடைய வளவு, இது இன்னாருடைய ஒழுங்கை, அது சொல்லும் ஒவ்வொரு இன்னாரின் பின்னரும் இப்ப இதில் யாரும் இல்லை, யாரும் வந்து பார்ப்பதும் இல்லை, எல்லாம் வெறிச்சோடி போச்சு என்ற கனதியான ஏக்கம் கலந்தே இருந்தது!
அன்னதான மடம் தாண்டி தொடர்ந்தும் நடக்கிறோம், சுந்தா மாமாவின் வீடு இருந்ததற்கான ஒரே ஒரு தடையமாய் உடைந்து புதைந்து போன தொட்டி வீதியோரமாய், சற்று நேரம் இழைப்பாற அந்த குந்தில் அமர்கிறேன் தடையமே இல்லாத வளவில் அழகான வீடு வீறுகொண்டு எழுந்து நின்றது!
உள்ளே என் உறவுகள் அதே கழிப்புடன், நிஜ‌மாக்கப்பட்ட என் கனவுகள் அங்கே உருவங்களாகி தமக்கிடையே பேசிக்கொள்கின்றன! சுந்தா மாமாவின் குரல் மட்டும் எனக்கு தெளிவாக கேட்கிறது காரணம் அவரை நான் அண்மையில் சந்தித்ததன் பிரதிபலிப்பாய் கூட இருக்க கூடும்!
அந்த பறவை எனக்கு சொல்கிறது பார்த்தாயா உன் உறவுகள் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்று... ம்ம்ம் உண்மை தான் நவீனத்தில் புதையுண்டு கிடக்கின்றன எமக்கான வாழ்வு!
கனவை நிஜமாக்கி விட்டு மேலும் நடக்கிறேன்...
ஏதோ சொர்க்காபுரிக்குள் நுளைவதான உணர்வு!
ஆம் சொர்க்கம் என்றே சொல்லலாம் அப்படி ஆக்கப்பட்டிருக்கிறது புத்த விகாரையும் அதன் சூழலும் என்னே ஒரு முற்போக்கு, என்னே ஒரு மேம்படுத்தல்! எதிர்ப்புக்கள் பல இருந்தும் அவர்களின் செயற்பாடுகளில் தடைகள் இல்லை. அந்த சூழல், மொழி மீண்டும் என்னை கொழும்பிற்கு கடத்தி விட்டதான உணர்வு காரணம் எல்லாமே சகோதர மொழிமயமாக்கல்!
அந்த பறவை ஏழன சிரிப்போடு சொல்கிறது இது எல்லாம் நம்மவர் காணிகள், பார்த்தாயா ஆக்கிரமிப்பை! ஸ்ரீமான்ர காணி வீடு எல்லாம் மாளிகை போல! ம்ம்ம் நடக்கட்டும்... இன்னும் எவ்வளவற்றை தாரைவார்க்கப் போகிறோம்!
இப்படியே இறுதி வேகத்தடையை கடந்து நடக்கையில் ரதினி சித்தியின் வளவு எல்லையோடு பௌத்த ஆக்கிரமிப்பு முற்றுப் பெற்றுள்ளது... அதுவும் தொடருமா என்ற ஆச்சரியக் குறியை அந்த பறவையின் பார்வை எனக்கு உணர்த்தியது!
அதைக் கடக்க சிவகாமி சின்னம்மா வளவுக்க சின்னதாய் ஒரு கட்டடம் எட்டிப்பார்த்தபடி... ஏதோ ஒரு செயற்திட்டத்திற்கான ஆரம்பக்கட்டம் என்றே நினைக்கின்றேன்! அது வரவேற்க்கத்தக்கதாய்...
பறவை மேலும் தொடர்கிறது பார்த்தாயா உன்னுடைய இடத்தை... வெறிச்சோடுப்போய், காடுபத்திப் போய் ஆள் நடமாட்டமே இல்லாமல் என்று அது இழுக்கும் போது நிதி அன்ரியின் ஆள் நடமாட்டமே இல்லாத காடு பத்திப்போய் நிற்கும் அந்த வீடு கண்முன்னே!
எங்களால் கனவுகளில் மட்டும் தான் இந்த அழகிய ஊரில் வாழ முடியுமா என்ற கேள்வி வந்து சிறு வண்டு போல் கண்ணில் விழவே கண்கள் பனித்தன, கண்ணில் விழுந்த அந்த வண்டு கூட ஆக்களே இல்லாத இடத்தில் நாம் மட்டும் என்னத்தை கண்டு விட்டோம் என்ற உண்மையை சொல்லி மாய்ந்ததை போல் இருந்தது...
மேலும் ஒரு அடி எடுத்து வைத்து நகர முடியவில்லை! 2ம் வட்டாரம் எப்படி இருந்தது என்று ஒவ்வொன்றாய் விளக்கம் கொடுக்க தொடங்கியது அந்த பறவை...
இதிலே ஒரு பெரிய‌ ஆலமரம், ஆலடி மீனாச்சி, சரவணமுத்து வாத்தியார், பொன்னம்மா, கோபுவீட்டு அம்மம்மா அது தான் என்ர பெரியம்மம்மா, அங்கால குமரைய்யா அண்ணன், இஞ்சால கந்தைய்யா, இந்தா புனிதவதியா, பின்னுக்கு சிவகாமியா, அதுக்கும் பின்னுக்கு குற்றாலம் அதுகளின்ர பெடியள், அதுகளின்ர பேரப்பெடியள் எண்டு அது சொல்லும் ஒவ்வொரு பெயர்களிலும் நிஜ‌மாகி அந்தந்த இடத்தில் என் உறவுகள் உருவாகிக்கொண்டே இருந்தார்கள்...
கலகலப்பிற்கு பஞ்சமே இல்லை! அம்மம்மா சொல்லும் கதைகள் அனைத்தும் நிஜத்தில் என் கண் முன்னே! அம்மம்மா அடிக்கடி சொல்லுவா 2ம் வட்டாரம் தான் எப்பவும் டாப்! அது உண்மை தான் போலும்! மாட்டு வண்டிப் பாதை, ஒற்றையடிப் பாதை, கிடுகு வேலை, காவோலை, கருக்கு மட்டை கதவுகள்... ஆடு, மாடு, நாய், கோழி வளவுகளிற்கால் அடுத்தவர் வீட்டிற்கு போக வழி என்று 2ம் வட்டாரம் உயிர்பெற்றுக்கொண்டிருந்தது அந்த பறவை சொல்லும் ஒவ்வொரு வசனத்திலும்!
உண்மையிலே கிராமியத்தை அழகாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள் இவர்கள்!
வியந்து என் வட்டாரத்தை பார்த்து நிற்கையிலே என் உறவுகள் என்னை அழைப்பதாயும் அவர்களோடு நான் கூடி இருப்பதாயும் இவைகள் எல்லாம் நிஜமாகக் கூடாதா என்ற ஏக்கத்தில் நான் அந்த நொடிகளை வாழத்தொடங்கையில் என் தோளில் வந்து அமந்த அந்த பறவை காதோரம் சொல்லுகிறது...
வாழ்க்கை என்பது இது தான்... என்றும் கூட வரும் சொந்த பந்தங்கள், அன்பான உறவுகள், எழிமையான வாழ்க்கைமுறைகள், இதை விட வேறு எதை இப்போது எதிர்பார்க்கிறாய்!
போ!
உன் உற‌வுகளோடு வாழ்ந்து பார் என்று சொல்லியபடி அந்த ஆலமரம் இருந்த மண்ணை தோண்டி புதையுண்டு கொண்டது அந்த பறவை! அது வேறு யாராகவும் இருக்க முடியாது! ஆலடி மீனாச்சியாக தான் இருக்க முடியும்!
பாம்புகள் வாழ நாம் கட்டி வைத்திருக்கும் வீடுகள், புற்க‌ள் புதர்கள் வளர பூட்டி வைத்திருக்கும் எமது வீடுகள், ஓடுகள், சிலாகைகள் கள்ளருக்கு தாரை வார்க்க கட்டி வைத்திருக்கும் வீடுகள் எல்லாம் தரைபட்டமாகிக்கொண்டிருந்தன நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடுத்த அடிகளிலும்!
இதே நிலைமை தான் எனது ஊரின் எல்லா வட்டாரங்களிலும்...
அழிவு என்பது வந்து கொண்டே தான் இருக்கும் அதை தடுக்க முயற்சி செய்யாவிடின்!
நாம் வாழ்ந்த பூமியை, வீட்டை வந்து பார்த்து திருத்தியமைக்காவிடினும் பரவாயில்லை... தற்சமயம் இருக்கின்றதறுவாயிலாவது வைத்துப் பாதுகாக்கலாமே...!