Showing posts with label அவதானிப்புக்கள். Show all posts
Showing posts with label அவதானிப்புக்கள். Show all posts

Wednesday, November 30, 2016

நயினாதீவு!

கனத்த மனதோடு வள்ளத்தில் இருந்து பாலத்தில் கால் வைக்கிறேன், ஊருக்கே உரிய தனித்துவமான அந்த ஈர்ப்பு, தாய் அன்பிற்கு ஈடான அந்த குளிர்ந்த காற்றின் வருடல், பாலம் பட்டு தெறிக்கும் கனத்த அலையின் நீர்த்துகள்களின் பன்னீர் வரவேற்பு! அங்கும் இங்கும் நடமாடும் நம்மவர்கள் சக ஊரவர்கள்!
சரவணமுத்து வாத்தியார்ட பேரன் தானே நீர் என்றும், பொன்னம்மா குஞ்சியாச்சிட பேரனா தம்பி நீர் எண்டும், சுசீலா டீச்சர்ட மகனா நீர் எண்டும் அவர்கள் கேட்கும் ஒவ்வொரு தருணங்களிலும் எம் உறவுகளின் பந்தம் இன்றும் அதே பாசத்துடன் புத்துயிர் பெற்றிருப்பதைப் பறைசாற்றும்!
கைப் பையை ஒரு கையில் ஏந்தி எட்டடி நடக்கையிலே கம்பீரமாய் வரவேற்கும் தாயவளின் ராஜ கோபுரம் நாம் அறியா மாத்திரத்தில் நெஞ்சில் கை வைத்து ஒருகணம் கண் மூடி அம்மாளாச்சி தாயே என்று முணுமுணுத்தே நகரச்சொல்லும்!
பலத்த காற்றை எதிர்கொண்டு கோயில் நோக்கி பாலத்தில் நடப்பதன் சுகம் வேறு லெவல்! கிட்டவாய் அம்மாளை தரிசித்து கோயிலடி வாமதாஸ் அண்ணன் கடையடி போகையிலே அது தீவின் நவீனத்தின் அடையாளமாய், நயினாதீவின் குட்டி நகரம் என்றும் சொல்லிக்கொள்ளலாம் அந்த இடத்தை! பெரும்பாலும் எல்லாவசதிகளும் பெருவாரியாய் கிடைக்கும் இடம்!
அந்த இடத்தில் தான் என்னோடு கூட நடக்க சேர்ந்து கொண்டது அந்த பறவை!
அது நிச்சயமாக நம் மூதாதேயராய் தான் இருக்க வேண்டும், நான் நடக்கும் வீதியெங்கும் என் கூடவே வர ஆரம்பிக்கிறது, ஆரம்பத்தில் அதை நான் துரத்திவிடுவதிலே குறியாய் இருந்தேன் காரணம் அது என் கையில் இருக்கும் வடைக்கு குறி வைக்கிறது என்ற நினைப்பில் ஆனால் அதன் நோக்கம் அதுவல்ல!
மறுகணம் துரத்த எத்தணிக்கவே, அது என்னிடம் சொல்கிறது 2ம் வட்டாரம் முந்திய கலகலப்பில்லை!
என்னது! காகம் பேசுமா?
ஆம் என்னிடம் பேசியது!
அது தன்னை இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு நான் எடுத்து வைக்கும் ஒவ்வோரு அடியிலும் ஒவ்வொருவரைப் பற்றி விளக்கம் கொடுத்தபடியே நகரத் தொடங்கியது!
இது இன்னாருடைய காணி, இது இன்னாருடைய கடை, இது இன்னாருடைய வளவு, இது இன்னாருடைய ஒழுங்கை, அது சொல்லும் ஒவ்வொரு இன்னாரின் பின்னரும் இப்ப இதில் யாரும் இல்லை, யாரும் வந்து பார்ப்பதும் இல்லை, எல்லாம் வெறிச்சோடி போச்சு என்ற கனதியான ஏக்கம் கலந்தே இருந்தது!
அன்னதான மடம் தாண்டி தொடர்ந்தும் நடக்கிறோம், சுந்தா மாமாவின் வீடு இருந்ததற்கான ஒரே ஒரு தடையமாய் உடைந்து புதைந்து போன தொட்டி வீதியோரமாய், சற்று நேரம் இழைப்பாற அந்த குந்தில் அமர்கிறேன் தடையமே இல்லாத வளவில் அழகான வீடு வீறுகொண்டு எழுந்து நின்றது!
உள்ளே என் உறவுகள் அதே கழிப்புடன், நிஜ‌மாக்கப்பட்ட என் கனவுகள் அங்கே உருவங்களாகி தமக்கிடையே பேசிக்கொள்கின்றன! சுந்தா மாமாவின் குரல் மட்டும் எனக்கு தெளிவாக கேட்கிறது காரணம் அவரை நான் அண்மையில் சந்தித்ததன் பிரதிபலிப்பாய் கூட இருக்க கூடும்!
அந்த பறவை எனக்கு சொல்கிறது பார்த்தாயா உன் உறவுகள் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்று... ம்ம்ம் உண்மை தான் நவீனத்தில் புதையுண்டு கிடக்கின்றன எமக்கான வாழ்வு!
கனவை நிஜமாக்கி விட்டு மேலும் நடக்கிறேன்...
ஏதோ சொர்க்காபுரிக்குள் நுளைவதான உணர்வு!
ஆம் சொர்க்கம் என்றே சொல்லலாம் அப்படி ஆக்கப்பட்டிருக்கிறது புத்த விகாரையும் அதன் சூழலும் என்னே ஒரு முற்போக்கு, என்னே ஒரு மேம்படுத்தல்! எதிர்ப்புக்கள் பல இருந்தும் அவர்களின் செயற்பாடுகளில் தடைகள் இல்லை. அந்த சூழல், மொழி மீண்டும் என்னை கொழும்பிற்கு கடத்தி விட்டதான உணர்வு காரணம் எல்லாமே சகோதர மொழிமயமாக்கல்!
அந்த பறவை ஏழன சிரிப்போடு சொல்கிறது இது எல்லாம் நம்மவர் காணிகள், பார்த்தாயா ஆக்கிரமிப்பை! ஸ்ரீமான்ர காணி வீடு எல்லாம் மாளிகை போல! ம்ம்ம் நடக்கட்டும்... இன்னும் எவ்வளவற்றை தாரைவார்க்கப் போகிறோம்!
இப்படியே இறுதி வேகத்தடையை கடந்து நடக்கையில் ரதினி சித்தியின் வளவு எல்லையோடு பௌத்த ஆக்கிரமிப்பு முற்றுப் பெற்றுள்ளது... அதுவும் தொடருமா என்ற ஆச்சரியக் குறியை அந்த பறவையின் பார்வை எனக்கு உணர்த்தியது!
அதைக் கடக்க சிவகாமி சின்னம்மா வளவுக்க சின்னதாய் ஒரு கட்டடம் எட்டிப்பார்த்தபடி... ஏதோ ஒரு செயற்திட்டத்திற்கான ஆரம்பக்கட்டம் என்றே நினைக்கின்றேன்! அது வரவேற்க்கத்தக்கதாய்...
பறவை மேலும் தொடர்கிறது பார்த்தாயா உன்னுடைய இடத்தை... வெறிச்சோடுப்போய், காடுபத்திப் போய் ஆள் நடமாட்டமே இல்லாமல் என்று அது இழுக்கும் போது நிதி அன்ரியின் ஆள் நடமாட்டமே இல்லாத காடு பத்திப்போய் நிற்கும் அந்த வீடு கண்முன்னே!
எங்களால் கனவுகளில் மட்டும் தான் இந்த அழகிய ஊரில் வாழ முடியுமா என்ற கேள்வி வந்து சிறு வண்டு போல் கண்ணில் விழவே கண்கள் பனித்தன, கண்ணில் விழுந்த அந்த வண்டு கூட ஆக்களே இல்லாத இடத்தில் நாம் மட்டும் என்னத்தை கண்டு விட்டோம் என்ற உண்மையை சொல்லி மாய்ந்ததை போல் இருந்தது...
மேலும் ஒரு அடி எடுத்து வைத்து நகர முடியவில்லை! 2ம் வட்டாரம் எப்படி இருந்தது என்று ஒவ்வொன்றாய் விளக்கம் கொடுக்க தொடங்கியது அந்த பறவை...
இதிலே ஒரு பெரிய‌ ஆலமரம், ஆலடி மீனாச்சி, சரவணமுத்து வாத்தியார், பொன்னம்மா, கோபுவீட்டு அம்மம்மா அது தான் என்ர பெரியம்மம்மா, அங்கால குமரைய்யா அண்ணன், இஞ்சால கந்தைய்யா, இந்தா புனிதவதியா, பின்னுக்கு சிவகாமியா, அதுக்கும் பின்னுக்கு குற்றாலம் அதுகளின்ர பெடியள், அதுகளின்ர பேரப்பெடியள் எண்டு அது சொல்லும் ஒவ்வொரு பெயர்களிலும் நிஜ‌மாகி அந்தந்த இடத்தில் என் உறவுகள் உருவாகிக்கொண்டே இருந்தார்கள்...
கலகலப்பிற்கு பஞ்சமே இல்லை! அம்மம்மா சொல்லும் கதைகள் அனைத்தும் நிஜத்தில் என் கண் முன்னே! அம்மம்மா அடிக்கடி சொல்லுவா 2ம் வட்டாரம் தான் எப்பவும் டாப்! அது உண்மை தான் போலும்! மாட்டு வண்டிப் பாதை, ஒற்றையடிப் பாதை, கிடுகு வேலை, காவோலை, கருக்கு மட்டை கதவுகள்... ஆடு, மாடு, நாய், கோழி வளவுகளிற்கால் அடுத்தவர் வீட்டிற்கு போக வழி என்று 2ம் வட்டாரம் உயிர்பெற்றுக்கொண்டிருந்தது அந்த பறவை சொல்லும் ஒவ்வொரு வசனத்திலும்!
உண்மையிலே கிராமியத்தை அழகாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள் இவர்கள்!
வியந்து என் வட்டாரத்தை பார்த்து நிற்கையிலே என் உறவுகள் என்னை அழைப்பதாயும் அவர்களோடு நான் கூடி இருப்பதாயும் இவைகள் எல்லாம் நிஜமாகக் கூடாதா என்ற ஏக்கத்தில் நான் அந்த நொடிகளை வாழத்தொடங்கையில் என் தோளில் வந்து அமந்த அந்த பறவை காதோரம் சொல்லுகிறது...
வாழ்க்கை என்பது இது தான்... என்றும் கூட வரும் சொந்த பந்தங்கள், அன்பான உறவுகள், எழிமையான வாழ்க்கைமுறைகள், இதை விட வேறு எதை இப்போது எதிர்பார்க்கிறாய்!
போ!
உன் உற‌வுகளோடு வாழ்ந்து பார் என்று சொல்லியபடி அந்த ஆலமரம் இருந்த மண்ணை தோண்டி புதையுண்டு கொண்டது அந்த பறவை! அது வேறு யாராகவும் இருக்க முடியாது! ஆலடி மீனாச்சியாக தான் இருக்க முடியும்!
பாம்புகள் வாழ நாம் கட்டி வைத்திருக்கும் வீடுகள், புற்க‌ள் புதர்கள் வளர பூட்டி வைத்திருக்கும் எமது வீடுகள், ஓடுகள், சிலாகைகள் கள்ளருக்கு தாரை வார்க்க கட்டி வைத்திருக்கும் வீடுகள் எல்லாம் தரைபட்டமாகிக்கொண்டிருந்தன நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடுத்த அடிகளிலும்!
இதே நிலைமை தான் எனது ஊரின் எல்லா வட்டாரங்களிலும்...
அழிவு என்பது வந்து கொண்டே தான் இருக்கும் அதை தடுக்க முயற்சி செய்யாவிடின்!
நாம் வாழ்ந்த பூமியை, வீட்டை வந்து பார்த்து திருத்தியமைக்காவிடினும் பரவாயில்லை... தற்சமயம் இருக்கின்றதறுவாயிலாவது வைத்துப் பாதுகாக்கலாமே...!

Saturday, September 29, 2012

எழுத்து திருட்டும், விசயமே அற்ற பதிவுகளும்...!

சில மாத இடைவெளியின் பின்னர் பதிவர்களையும் பதிவுலக நாயகர்களையும் சந்திப்பது மிக்க மகிழ்ச்சி! இனி இனி தொடர்ச்சியாக பதிவுகள் எழுதுவேன் என்று எழுந்தமாணமாய் கருத்துக்களைச் சொல்லி நான் அதைச் செயற்படுத்தியது இல்லை இதுவரையில் ;)
கருத்து சொல்வது சுலபம் செயற்படுத்துவது சிரமம்! ஆதலால் இம்முறை நான் எந்த வாக்கும் கொடுப்பதாக இல்லை! கொடுத்த வாக்குகள் செல்லுபடியற்றுவிட்டன. 

இன்றைய விசயம் பதிவர்களின் பதிவுகளும் அவர்களின் பதிவுகள் திருட்டுப் போவதும், வேதனைக்குரிய விடயம். சில பதிவர்கள் நல்ல கருத்தோட்டமான பதிவுகளை அனுபவங்களை சிந்தித்து சிறிது சிறிதாக செதுக்கி அதை ஆக்கமாக்கி சமூகத்தின் முன் பகிர, ஒரு சில நொடிகளில் அதையே சுருட்டி எடுத்து தமது தளங்களில் பிரசுரித்து பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் ஒரு சில புதிய பதிவர்கள். சரி திருட்டு தான் செய்கிறீர்கள் செய்யும் திருட்டு திருட்டு இல்லாமல் இருக்க திருடும் தளத்தின் சுட்டியையாவது போட்டு உங்கள் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாமே! 

மிகச்சிறந்த பதிவுகள் மற்றவர்களால் சமூகத்திற்கு பரிமாற்றப்படுவது வரவேற்க்கத்தக்கதே ஆனால் அது திருடாமல் சரியான விதத்தில் பரிமாற்றப்படும் போது பதிவர்களைப் பொறுத்தவரையில் ஏற்றுக் கொள்ளப்படத் தக்க ஒன்று! 

எழுத்து திருட்டு என்பது சில ஆண்டுகளுக்கு முதல் பதிவுலகில் பதிவர்கள் பகிர்ந்த பதிவுகளைத் தோண்டி எடுத்து தமது பெயர்களில் பிரசுரிக்கிறார்கள். திருடும் அவர்களின் நினைப்பு யாராலும் கண்டுபிடிக்க முடியாதென்று! “உனக்கு இரண்டு கண்கள் என்றால் சமூகத்திற்கு ஆயிரம் கண்கள்” ஒவ்வொருவர் எழுத்து நடையும், சிந்தனையும் வேறுபட்டவை, எழுதிய பதிவர்களுக்கு தெரியாதா தமது சொந்த பதிவா இல்லை தமது பதிவு திருடப்பட்டு விட்டனவா என்று!!!

சுயமாக சிந்திக்க தெரியாதவர்கள் எல்லாம் கருத்துக்கள் பகிர்கின்றோம் என்ற போர்வையில் ஏன் இந்த நாடகம்...? இது இவ்வாறிருக்க சிறந்த பல பதிவர்களின் ஆக்கங்கள் இந்த காலகட்டத்தில் பெரிதாய் வெளிவருவதில்லை போலும், எங்கையா போனீர்கள் பிரபல பதிவர்களே!!! உங்களது கருத்தோட்டமான, காத்திரமான படைப்புக்கள் தான் பதிவுலகத்திற்கும் சமூகத்திற்கும் தேவையான ஒன்று! பிரபல பதிவர்களின் வேகம் குறைய புதிது புதிதாய் கிளம்பியிருக்கிறார்கள் சில குட்டிப் பதிவர்கள்! புதிய பதிவர்களை பதிவுலகில் வரவேற்கின்றோம்!

புதிதாய் பதிவுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் சில பதிவர்கள் ஏதாவது பதிவுகளை தாமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விசயமே இல்லாத, சமூகத்திற்கு இயல்பான கருத்துக்களை மறுத்து ஏதேதோ பதிவுகளைப் பகிர்ந்துவிடுகின்றார்கள். பதிவுலகைப் பொறுத்த வரையில் புதியவர்களால் பதிவுகள் பகிரப்படுகின்றன ஆனால் கருத்துக்கள் புதைக்கப்படுகின்றன. 

தரமான நல்ல சமூக சிந்தனையாளர்களின் கருத்துக்கள் மீண்டும் பதிவுலகை ஆக்கிரமிக்க வேண்டும், தொய்ந்து போய் இருக்கும் பதிவுலகம் மீண்டும் புதுப் பொலிவுடன் எழுச்சி கொள்ள வேண்டும். உங்களது சிறந்த பதிவுகள் ஒரு பாடமாக புதிய பதிவர்களுக்கு இருக்க வேண்டும்! 

எழுத்து திருட்டை தடுக்க மூத்த பதிவர்களே நீங்கள் விழித்திருக்க வேண்டும்! உங்கள் முயற்சியின் பலனை வேறொருவன் அனுபவிக்க இடமளிக்காதீர்! எழுத்து திருட்டுக்கும் விசயமே அற்ற பதிவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம்!!! 

“யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல! இப்படிப்பட்ட தவறுகள் இனியும் இடம் பெறக்கூடாது என்பதற்கான வேண்டுகோள்”

Sunday, July 8, 2012

யாழில் பரவி வரும் பஸ் காமம்...!

மீண்டும் ஒரு தடவை யாழ்ப்பாணப் பதிவோடு உங்கள் முன் வருகின்றேன் என் பார்வையில் ஏற்பட்ட அவதானிப்பு இது. அன்றே கொட்டித்தீர்த்திருக்க வேண்டும், மடிக்கணினி கைவசம் இல்லாததால் கொஞ்சம் ஆற வைத்துப் பதிவிடுகின்றேன்.

யாழின் பதிவுகளை தினம் தினம் ஏதோ ஒரு வழியில் நாம் அறிந்து கொண்டே இருக்கின்றோம், தினம் மோசமடையும் யாழின் போக்கே இன்றைய நிலை. இதற்கான காரணங்களாக கலாசாரம், மற்றும் காதல் எனும் பெயரில் அரங்கேறும் காமம் என்பன காரணங்களாக் இருந்து வருகின்றன. கட்டவிழ்த்துவிடப்பட்ட கலாசார நோயால் தினம் பாதிக்கப்படுவது என்னவோ எம் மக்களே, இதை நன்கு அறிந்தும் அதன் வழி மீள்ச்சியில்லாமல் தொடர்ந்து செல்லும் எம்மவர்கள் மீதும் தவறுகள் இருக்கின்றது.


யாழ்ப்பாணத்தின் கலாசாரம், பண்பாடு என்பவற்றை சிதைக்கும் நோக்கில் தினம் செயற்பட்டு வருகின்றன சில சக்திகள் அதற்கு துணை போகும் தமிழ் கறுப்பு ஆடுகள் இருக்கும் வரையில் தமிழ் தாழ்வாந்து போகும் என்பது திண்ணமே! படித்தோர் பெரியோர் இருந்தும் என்ன பயன். கெடுகிறேன் பந்தையம் பிடி எனும் போக்கில் போய்க் கொண்டிருக்கின்றது தமிழ் இளைஞர்களின் போக்கு.


சரி நான் சொல்ல வந்த விசயத்துக்கு வருகின்றேன்...! 


கொழும்பைப் பொறுத்தவரையில் பஸ்சில் காதல் என்ற பெயரில் காமம் என்பது சர்வ சாதாரணமாகிப் போனது என்பது உண்மையே! சராசரியாக ஒவ்வொரு பஸ்சிலும் காதலர்கள் மத்தியில் காமுகர்களும் பயணிக்கின்றார்கள். இப்படியான கேவலங்களைப் கொழும்பு பஸ்களில் பார்த்து சலித்து போய்விட்டோம்... இது இவ்வாறு இருந்த போதிலும் யாழ்ப்பாணத்திலும் இதே நிலை என நான் நினைத்திருக்கவில்லை, கலாச்சார மாற்றம் சடுதியாக இருக்கின்றது என்பதை நான் அறிவேன், ஆளில்லா வீடுகளில் காமம் அரங்கேறுவதை செய்திகள் வாயிலாக அறிந்திருக்கின்றேன் ஆனால் இந்த தொற்று வியாதி பஸ்சுக்குள்ளும் பரவும் என பெரிதாய் நினைக்கவில்லை! 


இதற்கு ராணும்வம் நடாத்தும் களியாட்ட நிகழ்வுகள், இராத்திரி நேர நிகழ்ச்சிகள், ஆபாச பட வினியோகம் என பல காரணங்களால் காதல் இளைஞர்கள் மத்தியில் காமமாக மாறியுள்ளது என்பதே உண்மை...! 


பஸ்சைப் பொறுத்தவரையில் கடைசி ஆசனம் என்பது காமுகர்களுக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவதானிப்புக்கள் மூலம் அறிய முடியும்! (எல்லா நேரமும் அல்ல) நான் யாழில் நேரில் கண்ட காமத்தை சொல்கிறேன் இது எவ்வளவு கேவலம் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்...! 




அதே கடைசி ஆசனம்!
ஒரு 45 வயசு மதிக்க தக்க பெண், பெண் என்று சொல்வதை விட அன்ரி என்று சொல்லலாம் 20 வயது மதிக்கத் தக்க பெடியன் (இவனுக்கென்ன மரியாதை பையன் எண்டு சொல்ல) கிட்டத்தட்ட அந்த அன்ரியின் மகன் எண்டு சொல்லிக்கலாம், அதுகள் ரெண்டும் கடைசியில் பண்ணிய காமலீலைகளை (Hidden Camera) நீலப் படத்துக்குள் சேர்க்கலாம்...! வெக்கம், மானம், சூடு, சுறணை இல்லாத பிறவிகள்...!

அன்று தான் தெரிந்து கொண்டேன் காமம் யாழில் வயது பேதம் இன்றி பாதித்துக் கொண்டிருக்கின்றது என்பதை! மலசல கூட குழியில் குழந்தை, குப்பைத் தொட்டிக்குள் சிசு, கருக் கலைப்பு, தற்கொலை, ஏமாற்றம், கற்பழிப்பு என எல்லா வித மனம் கோணும் நிகழ்வுகளும் யாழில் அரங்கேறியது எப்போதிருந்து...? 

காமம் தொடர்பாக யாழ் மக்களிற்கு போதிய தெளிவின்மை என யாராச்சும் சொன்னியளோ வாயில சூடுவைப்பன்! ஏன்னா எங்கட சனம் ஒண்ணுமே தெரியாத பாப்பா தானே! ஏய்யா வாய கிளர்றீங்க...?

கலாச்சார காவலர்கள் எங்கே...? ஒரு காலத்தில் இருந்தார்களாம்! (ஒரு காலத்தில்)

கிட்டத்தட்ட யாழ்ப்பாணத்தில் காமம் என்பது காதலின் பெயரால் மேடையேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு யார்மேலும் காரணம் சொல்ல விரும்பவில்லை, ஆனால் சுய புத்தி என்று ஒன்று இருக்கிறது என்று நான் நினைக்கின்றேன்! அது சில பேருக்கு சுய புத்தி சரியாக இயங்குவதில்ல போலும் ஆதலால் வந்த விளைவு...!

ஊசி இடம் கொடாமல் நூல் நுழையாது...! இது காமுகர் மொழி...! 

மனவருத்தத்தோடு விடைபெறுகின்றேன்...! யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல! என் அவதானிப்பு இது! உண்மையும் கூட!




Wednesday, June 20, 2012

சிந்தனைக்கு ஒரு நிமிடம் - உங்கள் சிந்தனை உங்களைக் குறிகாட்டும்...!

மீண்டும் ஒருமுறை வணக்கங்களைச் சொல்லிக்கொண்டு வித்தியாசமான ஒரு கருத்தாடலோடு வந்திருக்கிறேன்! இது முழுக முழுக்க மனிதர்களுடைய சிந்தனை சம்பந்தப்பட்டதாகவே இருக்கப் போகின்றது. அதாவது சராசரியாக குறிப்பிட்ட ஒரு தொகை மக்களை எடுத்துக் கொண்டால் அவர்களது சிந்தனைத் திறன் மனிதருக்கு மனிதர் வித்தியாசமானதாகவே காணப்படுகின்றது, இருப்பினும் ஒரு சில சந்தர்ப்பங்களில் சிலரது சிந்தனைகள் ஒன்றுபட்டனவாகக் காணப்படக்கூடிய சாத்தியங்களும் இருக்கின்றன.

குறிப்பாக சிந்தனை என்று வருகின்ற போது பல எண்ணற்ற சிந்தனைகள் ஒரு சில கணத்திலேயே தோன்றிவிடுகின்றன அதுவே குறிப்பிட்ட நாளை சந்தோஷமானதாக அல்லது குழப்பம் நிறைந்த நாளாக மாற்றிவிடுகின்றன. அதற்கான காரணங்கள் என பார்க்கப் போனால் சிலரது சிந்தனை கடந்த கால சம்பவங்களின் தொடர்ச்சியாக இருக்கும். அதாவது சிறிது காலத்திற்கு முன்னராக நடந்த சம்பவம் அவரவர் சிந்தையில் புதிய தொடர்ச்சியாக தோன்ற வாய்ப்புள்ளது, அது சில வேளைகளில் நல்லதாக இருக்க கூடும் சில வேளைகளில் கடுமையானதாக கூட இருக்க கூடும்.

இதே போன்று வேலைக்கு செல்பவர்களின் மன நிலையை எடுத்துக் கொண்டால், ஞாயிற்றுக் கிழமையாக இருக்கும் போது ஒரு சிலர் மனதில் சடுதியாக தோன்றும் எண்ணம் ஐயய்யோ நாளைக்கு திங்கக்கிழமை, வேலைக்கு போகணும்... இப்படி அவர்கள் சிந்தனை சலிப்புடன் இருக்குமேயானால் அன்றைய நாள் அவர்களைப் பொறுத்தவரையில் மகிழ்ச்சிகரமானதாக அமைய வாய்ப்புக்கள் குறைவே!

எது எவ்வாறாயினும் வேலைத் தளங்களில் வேலையுடன் ஒருமித்துவிட்டால் இப்படியான சிந்தனைகள் கூட மழுங்கடிக்கப்பட்டுவிடும். எல்லாம் மனம் சம்பந்தப்பட்ட எண்ணங்களாகவே இருக்கின்றன.

அது தவிர்த்து சிலர் தமது சக வேலையாட்களுடன் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறோம் என்றவாறே சிந்தனைக்குள் பயணிப்பர், இது கூட அவர்களை தேவையற்ற கற்பனைக்குள் அழைத்து சென்று முடக்கிவிட சாத்தியங்கள் அதிகமே.

இது போன்று இன்னும் பல வேறுபட்ட சிந்தனைகளை நாம் கண்டிருக்கின்றோம், ஒரே நாளில் ஒரே நிமிடத்தில் அளவுக்கு அதிகமான சிந்தனைகள் எழுவது சாத்தியமே. ஒருவரின் மனநிலையே அவரது சிந்தனையை வழிநடாத்துகின்றது, அதாவது ஒருவரது மனம் எதைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறதோ அதுவே பிரதிபலனாக குறிப்பிட்ட சிந்தனையை அடையாளப்படுத்துகின்ன்றது. இதுவே யதார்த்தமும் கூட.


சிலர் மனதில் கெட்ட கீழான சிந்தனைகள் அரங்கேறும், ஆதலால் அவர்களது நாள், நடவடிக்கைகள் தவறான பாதையிலேயே பயணிக்க ஆரம்பிக்கும். ஒருவனை நல்லவனாக்குவதும் சிந்தனை தான், கெட்டவனாக்குவதும் சிந்தனை தான். எப்போதும் எண்ணம் உயர்வாக இருத்தல் வேண்டும் என பல ஆய்வுகளில் கண்டிருக்கிறோம். அது உண்மையே!

இந்த சிந்தனை சம்பந்தமான பதிவைப் படிக்கும் நீங்கள் உங்கள் மனதிடம் ஒரு கேள்வியைச் சடுதியாகக் கேளுங்கள், இந்த நிமிடம் எதுபற்றிய சிந்தனை உங்கள் மனதில் நிரையோடிக்கொண்டிருக்கின்றது என்பதை. அது ஏற்புடையதென்றால் தொடர்ந்து செல்லுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்...!


எல்லாம் யதார்த்தமே!

பெரிய மனுசன் போல கதைச்சிட்டன் எல்லா! மன்னிச்சூசூசூசூசூசூ...!

Tuesday, June 19, 2012

பஸ் எண் - 154 இல் திருடர்கள்...!

தெமட்டகொட, பொரல்ல, கொழும்புக்கம்பஸ், பம்பலப்பிட்டிய எண்டு இடங்களின்ர பெயர அடுக்கிக் கொண்டே போனார் கொண்டைக்டர். 154 எண்ட பஸ் கிரிபத்கொடைக்கும் - அங்குலானைக்கும் ஓடுற ஒரு பஸ். ஓரளவு வேகமா ஓடும் ஆனா என்ன ஒவர்நாளும் கொழும்ப சுத்திக் காட்டிக்கொண்டே தான் போகும்! சுத்திற சுத்தில களவும் போகும். விடிய காலம வேலை நேரத்திலையும், பின்னேரம் வேலை முடிஞ்சு வாற நேரமும் அந்த பஸ்ல சனம் தாங்காது! அப்பிடி ஒரு கூட்டம் அந்த பஸ்ஸுக்க.

கொண்டைக்டர் கத்த கத்த சனமும் ஏறினபடியே தான், அதுக்க கள்ளங்களும் ஏறுவாங்கள்! மக்கா! ஜாக்கிருதை! 

இப்ப கொஞ்சக்காலமா நான் கேட்டறிஞ்சதின் படி 154ல செரியான கள்ளர் தொல்லையாம் நம்மள, நம்மட சாமான் சக்கட்டுக்கள பாதுகாக்க வேண்டியது நம்மட கடமை, அதிலையும் வேற யாருக்கும் கள்ளரால ஆபத்து எண்டு வந்திச்செண்டாலும் அவர்களுக்கு அதை தெரியப்படுத்திறதிலையும் நாங்க முன் நிக்க தான் வேணும்! ஏன்னா நாளை எங்களுக்கும் இதுவே நடக்க கூடும்! 


பஸ்ஸில செரியான கூட்டம் எண்டால் கொஞ்சம் கவனமா நில்லுங்க, கூட்டமான பஸ்ல தான் கள்ளர் அதிகம் ஏறுவாங்கள். உங்கட உங்கட பேர்ஸ்(Purse), ஹாண்ட்பாக் (Handbag), கையடக்க தொலைபேசி (Phones), சங்கிலி காப்பு நகைகள் (chain) அது மட்டுமில்லாம காசு (cash) அப்பிடி ஏதாச்சும் வைச்சிருந்தா பத்திரப்படுத்திக் கொள்ளுங்க! 

இப்பெல்லாம் களவெடுக்க வாறவங்கள் எங்கள விட Decentடா தான் வாறாங்கள், பாத்தா பெரிய பெரிய கொம்பனில CEO Levelல இருக்கிறாக்கள் போல. போலிகளைக் கண்டு ஏமாராதீர்கள்!

இன்னார் தான் திருடன் என்று ஒரு சில வழிகளில் ஊகிக்க முடியும், அவர்களிடத்தில் கொஞ்சம் ஜாக்கிரிதையாக இருந்தால் போதும். பஸ்ஸில் திருட வரும் கள்ளர் கையில் ஒரு 5ரூபா ஓ 10 ரூபா Shopping Bagஐ வைத்திருப்பார்கள், அவர்களுடைய பார்வை ஆக்களையும் திருட எத்தணிக்கும் நபருடைய உடைமையிலுமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் கொஞ்சம் பதற்றத்துடனே காணப்படுவர், முக்கியமா யாராச்சும் சீட்டில இருந்தபடி உங்கட சாமான் ஓ Bagஐ தான் வைச்சிருக்கிறதா சொல்லி கேட்டா கொஞ்சம் உஷாராகிக்கொள்ளுங்க! 

பெண்கள் உங்கள் Handbagஐ எக்காரணம் கொண்டும் கூட்டமாய் இருந்தாலும் பரவாயில்லை அமர்ந்திருப்பவர்கள் கைகளில் கொடுக்க வேண்டாம்! நான் நேரில் கண்ட அனுபவத்தை வைத்து சொல்கிறேன். உங்கள் நண்பராக இருக்கட்டும் உங்கள் உறவுகளாக இருக்கட்டும் கொடுங்கள் பரவாயில்லை ஆனால் அறிமுகமில்லா நபர்களிடம் பைகளைக் கொடுப்பதை தவிருங்கள். அப்படி ஒருவேளை கொடுக்க வேண்டிய கட்டாயம் நேர்ந்தால் கொடுத்தவர் மேல அவதானமாய் இருங்கள்.

நான் இவள நேரமும் 154ஐ பற்றி தான் சொல்லிக்கொண்டு இருக்கிறன், ஆனா வேற வேற பஸ்ல என்னென்ன நடக்குதெண்டு யாருக்கு தெரியும்.

பையன்களின் கவனத்துக்கு!


உங்கள் Purse, பணம், கையடக்க தொலைபேசி எல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்பதை நேரத்துக்கு நேரம் சரி பார்த்துக் கொள்ளுங்கள்! யார்மேலாவது சந்தேகம் வந்துவிட்டால் அவர்கள் மேல் ஒரு கண் வையுங்கள், அத்தோடு யாக்கிருதையாகவும் இருங்கள்! 

தினம் தினம் வித்தியாசமான முறைகளில் திருட்டு நடக்கிறது! அனைவருக்கும் இதை அறியப்படுத்த வேண்டியது எனது கடமை! 

இது முழுக்க முழுக்க பயணிகள் கவனத்துக்கு! அடுத்த முறை இன்னும் ஒரு பதிவோட வாறன்! 

கவனமா இருந்து கொள்ளுங்கோ!