Friday, December 31, 2010

காகம் கத்தினா ஆக்கள் வருவினும் எண்டது உண்மையோ...???


சும்மா சொல்லக்கூடாதுங்க என்ன தான் கறுப்பா இருந்தாலும் நம்மாக்கள் காகத்த இன்னமும் முன்னுரிமை குடுத்து தான் வைச்சிருக்கிறாங்கப்பா. வெள்ளிக்கிழமை விரதமெண்டாலும் சரி சனிக்கிழமை விரதம் எண்டாலும் சரி காக்காக்கு சோறு வைச்ச பிறகு தான் நாமளே சாப்பிடுறம். அப்ப பாருங்களன் நிலமைய.

இண்டைக்கும் நான் பதியப்போற இந்த பதிவு முழுக்க முழுக்க காகத்தப் பற்றினது தானுங்கோ. அந்த காலத்தில இருந்து இந்த காலம் வரைக்கும் வீட்டு முத்தத்தில காகம் கத்தினா யாரோ வரப் போகினும் எண்ட கருத்து இன்னமும் வழக்கத்தில தான் இருக்குது. தெரிஞ்சோ தெரியாமலோ யாரும் இத மறுக்க மாட்டினும் எண்டு நினைக்கிறன். அதுவும் தீவுப் பகுதிகளைச் சேந்தவராய் இருக்கட்டும், இல்ல யாழ்ப்பாணத்த சேந்தவரா இருக்கட்டும் அவங்க எல்லாரும் பரவலா இன்னமும் நம்பிறாங்க முத்தத்தில காகம் கத்தினா யாரோ வரப்போறாங்க எண்டு.
இது எந்தளவுக்கு உண்மை எண்டது சரியாய் தெரியவில்லை. ஆனால் நான் அறிந்த வரையில் காகம் கத்தி வீட்டுக்கு விருந்தினர் வந்தும் இருக்கிறார்கள் அது தவிர மரணச் செய்திகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றான. அத விட வேற வேற விதமான நிகழ்வுகள் எல்லாம் நடந்தேறி இருக்கிறது. அதனாலேயே காகத்துக்கும் பிரிவுகள் வைச்சிருக்கிறாங்க நம்ம மூதாதேயர்கள். எப்பிடின்னு கேக்குறிங்களா அதாகப்பட்டது “வரத்துக் காகம், கூடாத காகம், செய்தி காகம்” இத விட வேற இருக்கோ தெரியல. எவ்வளவோ கண்டு பிடிச்சவே பெயரா வைச்சிருக்க மாட்டினும்.

கொழும்ப பொறுத்த வரையில காகம் கத்தி ஆக்கள் வாறது எண்ட கதைய சொன்னா காமடியா தான் இருக்கும் ஏன்னா இருக்கிறதே அதிகம் தட்டு வீடுகளில காகம் கார் பாக்கிங் பேஸ்மண்டில நிண்டு கத்தினா இருக்கிற எல்லா தட்டுக்கும் ஆக்கள் போவாங்களா இல்ல ஏதாச்சும் செய்தி தான் அவங்கள சென்றடையுமா... இப்பிடி நீங்க யோசிக்கிறது விளங்குது, அத விட காகம் கத்தி பொமிசன் குடுத்த தான் விருந்தாளிகள் வீடுகளுக்கு போகனும் எண்டு நியதியா என்ன அப்பிடி கேக்கிறதும் விளங்குதுப்பா... பட் நான் இத சரி எண்டு சொல்ல வரலையே...

ஆனா ஊர்ப் பகுதிகளில காகம் கத்துறத முழுமையாக நம்புகிறவர்கள் இருக்க தான் செய்கிறார்கள். கடந்த வாரம் நான் யாழ்ப்பாணம் சென்று வர வாய்ப்பு கிடைத்தது. அங்கு சென்ற போது வேலை எல்லாம் முடிச்சு வெட்டி நிஜயம் கதைச்சுக் கொண்டு இருக்கேக்க வழக்கம் போல காகம் கத்திச்சு. அப்ப எங்க கை சும்மா இருக்குமோ ”ஹய் சூய்” ஒரே ஒரு சவுண்ட் தான் குடுத்தன் எடுத்துச்சு பாரு ஓட்டம். பட் சின்ன கப்ல திரும்பவும் வந்து கத்திச்சு, ஆனா இந்த தடவ நான் கலைக்கல. அப்ப என்னோட அம்மம்மா சொல்லுறா இது வரத்துக் காகம் போல இருக்கு தம்பி போய் முத்தத்தில அடி அளவடா எண்டா... அடி அளக்கிறது எண்டத அண்டைக்கு தான் நானே கேள்விப்பட்டன்.

அப்பிடின்னா என்னண்டே தெரியாது சோ நான் அதின்ர விளக்கத்த கேட்டன். அம்மம்மா அடி அளக்கிறதுக்கு விளக்கம் சொல்ல தொடங்கினா அதுவும் சும்ம இல்லிங்க ஒரு பாட்டோட விளக்கம் சொன்னா. அத கேக்கிறபோ எனக்கு ஏதோ வெண்பா கேக்கிற மாதிரி இருந்திச்சு. அதுக்கப்புறம் என்னால நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல.

அம்மம்மா காகம் கத்தினதுக்கு சொன்ன பாட்டு இது தான். பெரியாக்கள் அந்த காலத்தில எழுதினது கணிச்சது எல்லாம் இன்று வரையில் பொய்க்கவில்லை. இத நீங்களும் படிச்சு பாருங்களன்.

கருமகள் அழுத போது, கடுகவே அடி அளந்து
ஒரு பதும் இரண்டும் கூட்டி, ஓரேழு கீவராகில்...
வருவது
சுகம்
இலாபம்
மழை
படை
அயனம்
வெற்றி
கருதிய சாவுண்டன்று கணித்தனர் கலைவல்லானோர்...!!!

பொருள் :

கருமகள் - காகம்
கடுகவே - உடனே
ஒரு பதும் இரண்டும் - பன்னிரெண்டு
ஓரேழு - ஏழு
கீவராகில் - பிரித்தல்

அதாவது இதின்ர விளக்கம் என்னண்டா காகம் கத்தினா உடன முத்தத்தில போய் நிண்டா நீங்க நிக்கிற நிலையில இருந்து உங்கட நிழல் எவ்வளவு தூரத்துக்கு விழுதோ அந்த இடத்த குறிச்சு வைச்சிட்டு உங்க கால் பாதத்தால அந்த நிழலின்ர நுனிவரையில அளந்து வாற எண்ணோட பன்னிரெண்ட கூட்டி அத ஏழால பிரிச்சா வாறது அதாவது வாற மிச்சம் வாறது மேல சொன்ன ஒழுங்கு முறையில அமையுமாம் மிச்சமே வராவிட்டால் அது சாவு செய்தியாய் இருக்குமாம்.

ஆனாலும் இந்த இடத்தில உங்களுக்கு சந்தேகம் கொஞ்சம் வரணுமே அதாவது பாதத்தால அளந்துக்கிட்டு போறப்போ அடி அரைக் கணக்கில வந்தா என்ன செய்யிறது... சோ அப்பிடி அரைல வந்தா அந்த அரைய கணக்கில சேர்க்கிறதே இல்லையாம் Eg - 12 1/2 எண்டு வந்தா 12ஐ தான் கணக்கெடுக்கிறதாம். இன்னொரு சந்தேகம் மழை மப்பா இருந்தா எப்பிடி அடி அளக்கிறதாம்??? யோவ் மழை பெய்யிற நேரத்தில காகம் அடிக்கடி கத்துறத கண்டிருக்கிறியோ...? மூதாதேயர் என்ன முட்டாளுகளா... கொஞ்சம் பகுத்தறிவா யோசிக்கிறதில்ல... என்னையும் சேத்து தான்யா திட்டுறன்.... :P ஏன்னா எனக்கும் இப்பிடி சந்தேகம் வந்திச்சு... :)

சோ
உங்க ஊரில காகம் கத்தினா ஒருக்கால் இத ரை பண்ணிப் பாருங்க சரியா வந்தா சொல்லுங்க. சரி வரும் எண்டு நினைக்கிறன். முன்னோர் வாக்கு அமிர்தம் கண்டியளோ...!!!




Thursday, December 30, 2010

என் 2010ம் ஆண்டின் கனவு கிறிக்கட் அணி...!!!

கிரிக்கட்டின் அகோர வளர்ச்சியும் வேகமும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. அது போக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆஷிஸ் தொடர் வேறு விறுவிறுப்பான முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் 2010ம் ஆண்டும் தனது பணியைச் செவ்வனே செய்து முடிக்கிறது... இத் தருணத்தில் எனக்கான கனவு கிரிக்கட் அணியை தேர்வு செய்திருக்கிறேன். இது 2010ம் ஆண்டில் வீரர்கள் தமது அணிக்காக செய்த பங்களிப்பின் அடிப்படையில் அவர்களது ஆண்டுக்கான சராசரியை அடிப்படையாகக் கொண்டு எந்த வீரர்கள் எனது கனவு அணியில் இடம் பிடித்தால் வலுவான அணியாக திகளும் என்ற கருதுகோளின் அடிப்படையில் என் கனவு அணியைத் தேர்வு செய்திருக்கிறேன்.

இம் முறை கடந்த முறையைப் போல் அல்லாது ரெஸ்ட் போட்டி, ஒரு நாள் சர்வதேசப் போட்டி மற்றும் இருபதிற்கு இருபது போட்டிகள் என்று மூன்று வகையான போட்டிகளுக்கும் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் என முக்கியமான நாடுகளில் இருந்து வீரர்களை ஏலம் எடுத்திருக்கிறேன். இவர்களும் என் கனவு அணியை நிச்சயம் வெற்றியடையச் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

முதலில் ரெஸ்ட் போட்டியில் நான் தெரிவு செய்த கனவு அணி வீரர்களின் விபரங்களைப் பார்ப்போம்...!!!

ரெஸ்ட் அணி :

ரெஸ்ட் போட்டிக்காக அவுஸ்ரேலியா அணியில் இருந்து இரண்டு வீரர்களும், இங்கிலாந்து அணியில் இருந்து நான்கு வீரர்களும், இந்திய அணியில் இருந்து மூன்று வீரர்களும், தென்னாபிரிக்கா அணியில் இருந்து நான்கு வீரர்களும், இலங்கை அணியில் இருந்து இரண்டு வீரர்களும், நியூசிலாந்து அணியில் இருந்து ஒரு வீரருமாக மொத்தம் பதினாறு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

அணி வீரர்களின் விபரத்தைப் பார்போமேயானால்....!!!

MEK Hussey (Aus)
IJL Trott (Eng)
AN Cook (Eng)
KP Pietersen+ (Eng)
SR Tendulkar (Ind)
VVS Laxman (Ind)
HM Amla (RSA)
JH Kallis* (RSA)
KC Sangakkara^ (SL)
DL Vettori (NZ)
MG Johnson (Aus)
JM Anderson (Eng)
Harbhajan Singh (Ind)
DW Steyn (RSA)
M Morkel (RSA)
M Muralitharan (SL)

+ அணித் தலைவர் * உபதலைவர் ^ விக்கற் காப்பாளர்

இவர்களே என்னால் தேர்வு செய்யப்பட்ட என் கனவு அணி ரெஸ்ட் வீரர்கள். இருந்தும் கவலைக்குரிய விடயம் என்னவெனில் பாக்கிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகளில் இருந்து எந்த ஒரு வீரரையும் என் கனவு ரெஸ்ட் அணியில் சேர்த்துக் கொள்ள முடியாமல் போனமை. பார்க்கலாம் அடுத்த ஆண்டுக்கான கனவு அணியில் இவ் அணி வீரர்கள் இடம் பிடிக்கிறார்களா இல்லையா என்று.

அடுத்ததாக ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான எனது கனவு அணியில் எவ் அணி வீரர்கள் இடம்பிடித்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

ஒரு நாள் போட்டிக்காக அவுஸ்ரேலியா அணியில் இருந்து மூன்று வீரர்களும், இங்கிலாந்து அணியில் இருந்து இரண்டு வீரர்களும், இந்திய அணியில் இருந்து இரண்டு வீரர்களும், தென்னாபிரிக்கா அணியில் இருந்து மூன்று வீரர்களும், இலங்கை அணியில் இருந்து ஒரு வீரரும், நியூசிலாந்து அணியில் இருந்து இரண்டு வீரர்களும், மேற்கிந்திய தீவுகளில் இருந்து இரண்டு வீரர்களும், பாகிஸ்தான் அணியில் இருந்து ஒரு வீரருமாக மொத்தம் பதினாறு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

ஒரு நாள் போட்டி அணி :

MEK Hussey (Aus)
KP Pietersen (Eng)
SK Raina (Ind)
MS Dhoni+ (Ind)
LRPL Taylor (NZ)
RT Ponting (Aus)
AB de Villiers (RSA)
KC Sangakkara*^ (SL)
CH Gayle (WI)
JH Kallis (RSA)
DM Bravo (WI)
DW Steyn (RSA)
Mohammad Amir (PK)
DL Vettori (NZ)
JM Anderson (Eng)
PM Siddle (Aus)

+ அணித் தலைவர் * உபதலைவர் ^ விக்கற் காப்பாளர்

இறுதிக்கட்டமாக கிறிக்கற் சிறிது காலம் கவனிப்பாரற்றுப் போன தருணங்களில் 20-20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் மீண்டும் கிறிக்கட் ஆர்வலர்கள் அனைவரையும் போட்டியின் இறுதிக்கட்டம் வரையில் நுனிக்கதிரையில் உக்கார வைக்கும் அளவிற்கு விறுவிறுப்பாக அமைந்து போனது இந்த இருபதிற்கு இருபது போட்டிகள். அன்றிலிருந்து கிறிக்கட் போட்டிகள் புத்துயிர் பெற்றதெனலாம் அந்த அளவிற்கு ரசிகர்களைக் கவர்ந்த போட்டியாக இந்த இருபதிற்கு இருபது போட்டிகள் மாறி இருக்கின்றது. இந்த போட்டியைப் பொறுத்த வரையில் வேகத்துக்கும் விவேகத்துக்குமே முக்கியத்துவம் எனலாம். அவ்வாறான போட்டியிலும் எனக்கான
கனவு அணியை தேர்வு செய்திருக்கிறேன்.

அதன் அடிப்படையில் என் கனவு இருபதிற்கு இருபது போட்டிகளுக்கான வீரர்களின் விபரம் இதோ...!!!

20 - 20 போட்டிக்காக அவுஸ்ரேலியா அணியில் இருந்து மூன்று வீரர்களும், இங்கிலாந்து அணியில் இருந்து இரண்டு வீரர்களும், இந்திய அணியில் இருந்து இரண்டு வீரர்களும், தென்னாபிரிக்கா அணியில் இருந்து இரண்டு வீரர்களும், இலங்கை அணியில் இருந்து ஒரு வீரரும், நியூசிலாந்து அணியில் இருந்து மூன்று வீரர்களும், மேற்கிந்திய தீவுகளில் இருந்து இரண்டு வீரர்களும், பாகிஸ்தான் அணியில் இருந்து ஒரு வீரருமாக மொத்தம் பதினாறு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

20 - 20 அணி :

DJ Hussey (Aus)
SR Watson (Aus)
KP Pietersen (Eng)
V Sehwag (Ind)
YK Pathan (Ind)
LRPL Taylor (NZ)
AB de Villiers (RSA)
Abdul Razzaq (PK)
TM Dilshan^ (SL)
CH Gayle+ (WI)
SB Styris (NZ)
DM Bravo (WI)
DL Vettori* (NZ)
DP Nannes (Aus)
GP Swann (Eng)
DW Steyn (RSA)


+ அணித் தலைவர் * உபதலைவர் ^ விக்கற் காப்பாளர்

நான் தெரிவு செய்த 20 - 20 போட்டிக்கான கனவு அணியில் அதிகமான வீரர்கள் சகல துறை வீரர்களாகவே உள்ளனர். ஆகவே இந்த அணி மிகவும் வலுவான அணியாக திகழும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. நான் 2010 ல பாத்ததில என்னால தெரிவு செய்யகூடியதா இருந்தது இவர்களைத் தான். எங்க உங்களால முடிஞ்சா உங்களுக்கென ஒரு கனவு அணிய உருவாக்கி என்னோட கனவு அணியோட மோத விடுங்க யாரு ஜெயிக்கிறாங்க எண்டு பாப்பம். நான் றெடி நீங்க றெடியா...???