Sunday, August 30, 2009

பொறுமையின் உச்சம் பெண்

இந்த அவலப் பெண்ணின் சோக நிலைதனைச் சற்றே செவிமடுங்கள்... எவ்வளவு பொறுமை இவளிடத்தில்... வியந்து பார்க்கிறேன், கற்பனையில்ப் புனைந்து சிந்தித்தும் பார்க்கிறேன்...!!!

குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்டவள் படும்பாடு உலகறிந்ததே.... இங்கேயும் ஒரு அவல நிலை கற்பனையூடே உண்மையும் கலந்து.... பொறுமை காக்கும் பெண்ணவள் கருப்பொருளாய் அமைகிறாள்... வன்செயல், துன்பம், சோதனைகள் இங்கு முக்கிய கதாபாத்திரங்கள், அவள் வாழும் வீடு அரங்கமாய் அமைகிறது....!!!

வெளி உலகைப் பொறுத்தவரை இவள் வீடு அமைதியும், சந்தோஷமும் இரண்டறக் கலந்த சொர்க்க பூமி ஆனால் ஒரு நாள் அவள் இல்லமதில் இருந்து பாருங்கள் அவலப் பெண்ணும் அவள் இரு குழந்தைகளும் "போதை தாசன்" கோரப் பிடிக்கிள் மாட்டிக் கொண்டு அனுபவிக்கும் சொல்லனாத் துயரை....!!!

காட்சி மலர்கிறது.................

ஆரவாரமாய் இருந்த அயலட்டம் மெல்ல அமைதியினை நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறது..... அந்தி சாயும் வேளை 6 மணியிருக்கும் அவள் கணவன் வீட்டை விட்டு வெளிச் செல்கிறான்... சென்ற கணவன் திரும்பி வரும்வரை அவன் வரவை எண்ணி நடு
இராத்திரியில் கட்டிலில் அமர்ந்தபடி கண்விழித்து அப்பப்போ தூங்கிக்கொள்கிறாள் இவள்.
ஆளரவமற்ற வீதி தனில் அவள் கணவனின் சப்பாத்துச் சத்தம் கேட்கிறதா என உற்று செவிமடுத்தும் பார்க்கின்றாள். இருந்தும் வீடு திரும்பும் தன் கணவன் குடித்துவிட்டு கற்பனையான கதைகள் சேர்த்து தன்னில் பிழை கண்டு தன்னை அடித்தும் அயலட்டம் கேட்கும் படி சமூகத்தால் புறம் தள்ளி வைத்த வார்த்தைகளால் ஏசியும் தன்னை நோகடிப்பார் என அவள் நன்கு அறிந்திருந்தாள்.

கணவன் வெளிச் சென்ற வேளையில் வீட்டு வேலை முதல் தாய்க்குரிய வேலை வரை அத்தனையையும் செய்து முடித்து விட்டு களைப்படைந்து காணப்பட்டாள். அதனால் அவள் கண்கள் அவளையறியாமலே தூங்கிக்கொண்டிருந்தன...

நேரம் மெல்ல கழிந்து கொள்கிறது.................
..........

திடீரென வீதி வழி யாரோ நடந்து வரும் சத்தம் அவள் காதுகளில் ஒலிக்கிறது...... பதறியபடி கட்டிலில் எழுந்து அமர்ந்து கொண்டு கேட்கும் பாதச் சத்தம் தன் கணவனுடையதா என தனக்குள்ளே கேட்டுக்கொள்கிறாள்.... அவள் இதயம் படபடவென வேகமாக அடித்துக் கொண்டிருந்தது.... கவனமாக உற்றுக் கேட்கிறாள்.... சலனம் கண்ட அவள் மனதிலிருந்து ஒரு முடிவு வந்தது... கேட்கும் பாதச் சத்தம் தன் கணவனுடையதில்லை என... மீண்டும் படுத்துக் கொள்கிறாள் இருந்தும் நிம்மதியான தூக்கம் அவள் கண்களை விட்டு வெகு தொலைவிலே.........!!!

நேரமும் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது...........!

முன்னர் கேட்டதை விட பெரிதாய் ஒரு சத்தம் அவள் காதுகளை ஆக்கிரமிக்கிறது ஆனால் தள்ளாடித் தள்ளாடி நடந்து வருபவர்களின் கால்த் தடம் என்பதை உணர்ந்து கொள்கிறாள்.... இது நிச்சயமாகத் தன் கணவன் தான் குடித்து விட்டு வருகிறார் என உறுதியும் செய்கிறாள்.....!!! கணவன் தான் என அறிந்ததுமே பேதையவள் விழிகளிநோரம் கண்ணீர் அவளுக்குத் தெரியாமல்.....!!!

வீடு வந்த அவள் கணவன் கதவை மிகச் சத்தமாகத் தட்டித் திறக்கிறான்..... பீதியடைந்த அவள் தன் மூச்சைக் கட்டுப்படுத்தி மெல்ல சுவாசிக்கிறாள்... இருந்தும் வீட்டு வேலை செய்து கால் வலியுடன் கட்டிலில் அமர்ந்திருந்த அவள் கணவன் தன்னை என்ன செய்யப் போகிறானோ என்ற பயத்தினால் தன்னையறியாமல் நகங்கள் கொண்ட விரல்களினால் அவள் உள்ளங்கையை இறுகப் பற்றிக் கொண்டபடி அமர்ந்திருந்தாள்...... தன் கணவன் வீட்டுக்குள்ளே தள்ளாடிய படி நடந்து போவதைப் பார்க்கிறாள்..... ஆனால் அவன் முதலில் குளியலறைக்குள் நேரே செல்கிறான்.... சென்று அவன் தனியே கத்திச் சிரித்துக் கொண்டிருந்தான்..... சிரித்துச் சிரித்து அவன் உண்டவற்றை வெளியெடுத்துக் கொள்கிறான்... அங்கு எவரும் இருக்கவில்லை... கணவன் சிரிக்கும் சத்தம் கேட்ட அவளோ பயத்தின் எல்லையில் நின்று கொண்டிருந்தாள்....

சற்று நேரம் கழித்து அவன் தட்டுத்தடுமாறி சாப்பாட்டு அறை நோக்கி நடக்கலானான்..... அங்கே தனக்குரிய இராப் போசனத்தை எடுத்து உண்ணத் தொடங்குகிறான்.... இடைவழியில் தண்ணீர்க் குவளையைத் தேடிப் பார்த்து எடுக்க முனைகிறான் அது அவன் கை தவறி நிலமதில்ப் பட்டு உடைந்து கொள்கிறது.... குவளை உடையும் சத்தம் கேட்ட அவள் மேலும் அச்சம் கொண்டு தன் புயங்களுக்குள்த் தன்னைப் புதைத்துக் கொள்கிறாள்.... சிறிது நேரம் அமைதி நிலவிக் கொண்டிருந்தது.... அந்த அமைதியினூடே அவள் கணவன் அடுப்பை மூட்டிக் கொள்கிறான்.... அந்த நெருப்பின் சத்தம் அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது..... அவள் நடக்கப் போகும் அசம்பாவிதங்களை எண்ணி அவளை அறியாமல் நடுங்கிக் கொண்டு துன்பத்தின் இறுதி எல்லையில் நின்று கொண்டிருந்தாள்... ஆனால் அவனோ அடுப்பை நிறுத்தாமல் உரத்த குரலில்ப் பாடிக்கொண்டு அவளை நோக்கிய படி படுக்கையறைக்குள் நுழைகின்றான்....

அறைக்குள் வந்த கணம் இன்னும் சத்தமாக கத்தத் தொடங்கினான்... அவன் கத்திய சத்தம் கேட்டு அச்சத்தினால் அவன் குழந்தை கதறி அழத் தொடங்கியது...குழந்தை அழுவதை கண்ட அவனோ குழந்தையைப் பார்த்து ஏசிக்கொண்டிருந்தான்.... போதையில்க் குழந்தையை ஏதும் செய்து விடுவானோ என்ற அச்சத்தால் அவள் விரைந்தோடி குழந்தைகளை அள்ளி அணைக்க முயற்சிக்கிறாள்.... அவ்வேளை ஒரு குழந்தை கை தவறி நிலத்தில் விழுகின்றது... இருந்தும் அவள் தன் மற்றைய குழந்தையைப் பத்திரமாய் மார்போடு அணைத்துக் கொள்கிறாள்.... இத்தனையும் கண்ட அவள் கணவன் குழந்தைகள் மேல் கோவம் கொண்டு அவர்களைத் தாக்க முனைகின்றான்... அவன் அவளருகில் வருவதை கண்ட கோதை தன் பிள்ளைகள் இருவரையும் கைகளால் அணைத்த படி நின்றாள்... இதனைக் கண்ட அவன் ஆத்திரத்தில் அவளை தாக்கத் தொடங்கினான்.... எங்கே தான் அழுதால் தன் குழந்தைகளும் அழுதுவிடும் என்பதற்காய், அத்தனை அடிகளையும் தன் உதடுகளை இறுகக் கடித்த படி தாங்கிக் கொண்டு நின்றாள்... அப்போது கூட அவள் தனக்குள்ளே கேட்டுக் கொள்கிறாள் தான் என்ன பிழை செய்தேன் என்றவாறு....

அவளைத் தாக்கியதால்த் தடுமாறி கட்டில் மேல் விழுகின்றான் அவன்.... விழுந்தபடியே உரத்துக் கத்திவிட்டு அப்படியே தூங்கிவிட்டான். அவன் தூங்கியபின் ஒரு முறை அவள் அவனை வடிவாகப் பார்க்கிறாள்.... அவள் மனதிற்குள் சிந்திக்கின்றாள்.... எத்தனை துன்பத்தை அவர் எனக்குத் தந்தாலும் அவர் என் கணவர் என்று அவளை அவளே தேற்றிக் கொள்கிறாள்... இருந்தும் அவள் மனதில் ஒரு கேள்வி நன்மை எது... தீமை எது... என்று கூட அறியாத இந்தப் பச்சிளம் குழந்தைகள் மீது ஏன் அவர் இப்படி சீற்றம் கொள்கிறார் என்பதே..... இந்த குழப்பமான நிலையை எண்ணி அவளும் கண்ணீர் வடித்துக் கொள்கிறாள்.... சிறிது நேரம் கழித்து அவள் தன் கணவன் குழியலறையில் எடுத்த உணவுத் துகல்களை துப்பரவு செய்து கொள்கிறாள்....

இத்தனை இம்சைகளையும் பொறுத்து இன்னும் அவள் தன் கணவனுக்காக வாழும் இந்த சிறைவாசத்திற்கு எப்போது தான் விடிவு வருமோ.....!!!

பிறேம்...