Friday, December 24, 2010

யாழ்ப்பாணம் சீர்கெடுதா தாத்தா...??? தாத்தாட கருத்த கவனிச்சியளோ...???

இம் முறை என் யாழ்ப்பாணத்துக்கான விஜயம் முழுக்க முழுக்க பதிவையும், புகைப்படங்களையும் மையமாகக் கொண்டே அமைந்திருக்கிறது. அதாவது நான் பதிவுலகத்துக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது இருந்தும் என் சொந்த மண்ணில் இருந்து இதுவரையில் எந்த ஒரு பதிவையும் பகிர்ந்ததில்லை. ஆக இம்முறை எப்பாடுபட்டாவது என் பிறந்த மண்ணில் கால்கள் பட்டபடி பதிவிட வேண்டும் என்ற அவாவில் என் வீட்டுமுத்தத்தில் இருந்து கொண்டு நான் இன்று பகல் கலந்துரையாடிய சுவாரசியமான பதிவை சுடச்சுட உங்கள் முன் ஆவலால் ஒப்புவிக்கிறேன்.

நான் பகிர இருக்கிற இந்த விசயம் ஏற்கனவே பலரால் அலசப்பட்டிருக்க கூடும் இருந்தாலும் என் பார்வையில் எப்படியான கருத்துக்கள் ஒன்றை ஒன்று சாடி நிற்கின்றன என்பதனை நீங்களே பாத்து
சொல்லுங்க. ஊருக்கு எண்டு வந்திட்டா எவ்வளவு நேரம் தான் வெட்டியா வீட்டுக்கையே குந்திக்கிட்டு இருக்கிறது. ஆனபடியா சும்மா ஒருக்கால் ஏரியாவ சுத்திக்கொண்டு வருவம் எண்டு வெளிக்கிட்டன் பிறேக்கே இல்லாத என்னோட சைக்கிளில. அப்பிடியே ஒவ்வரு இடமா அட்டண்டன்ஸ்ச போட்டுக்கிட்டே வர்றபோ தான் ஞாபகம் வந்திச்சு கணேசு வாத்தியார் வீட்டையும் ஒருக்கா போகணும் எண்டு. வாத்தியார் எண்டா போல நினைச்சிடாதீங்க எனக்கு படிப்பிச்ச வாத்தியார் எண்டு. இவர் எங்கள பொறுத்த வர அ.மு காலத்த சேந்தவர். நீங்க யோசிக்கிறது விளங்குது எங்களுக்கு கி.மு தான் தெரியும் அதென்ன அ.மு. அதாவது அம்மாக்களுக்கு முன். அதுதாங்க பாட்டன் முப்பாட்டன் காலத்து வாத்தியார். என்னக்கு ஒரு வகையில தாத்தா. இப்ப இந்த பயோ டேட்டா எல்லாம் வேணாமே...!

அப்போ தாத்தாக்கும் ஒரு சலாம் போட்டிட்டு உடனேயே வெளிக்கிடுவம் எண்டு தான் நம்பி உள்ள போனன். போனப்புறம் தான் தெரிஞ்சிச்சு சும்மா போன ஆசாரிய கூப்பிட்டு எனக்கு ஒரு ஆப்ப வை எண்டு அவசரப்பட்டுட்டமோ எண்டு. பட் தாத்தா கூட நான் பகிர்ந்துக்கிட்ட விசயம் எல்லாமே நடமுறையோட ஒத்தே இருந்திச்சு. அது தாங்க எனக்கே ஆச்சரியம்! வாத்தியார்க்கிட்ட அரிவரில இருந்து அரசியல் வரைக்கும் எல்லாமே அத்துப்படி...! அப்புறம் என்ன என்னைய சும்மா விட்டிடுவாரா என்ன! ஒவ்வரு விசயமா புட்டுப்புட்டு வைச்சுக்கிட்டே வந்தார். சரி நானும் அவர் சொல்லுற எல்லாத்துக்கும் ஆம்மா போட்டு க்கிட்டே வந்தன் ஒரு கட்டத்தில தாத்தா யாழ்ப்பாணத்தின்ர இண்டைய நிலமைக்க வந்தார். இந்த இடத்தில நான் முழிச்சிட்டன். ஏன்னா இப்போ எல்லாருமே பரவலா கதைக்கிறது இத பற்றி தான். சரி என்ன தான் அவர் அப்பிடி புதுசா சொல்ல போறார் எண்டு நானும் கவனிச்சுக்கிட்டே இருந்தன். என்ர பங்குக்கு சில கேள்விகள் தாத்தாட்ட கேக்க வேண்டி இருந்திச்சு சோ அப்பப்போ நான் அவர குறுக்கு விசாரணை செய்துக்கிட்டே இருந்தன். இதால யாழ்ப்பாண விசயம் எங்களுக்குள்ள கேள்வி பதிலா ஒரு உரையாடலாவே மாறிப்போச்சு.

தாத்தா கூட நான் கதைச்சத உரையாடல் பாணில சொன்னா தான் ஒரு கிக் இருக்கும். சோ எனக்கு தற்சமயம் ஞாபகம் இருக்கிற, அவர்கூட கதைச்ச அத்தனையையும் இங்க உரை நடையிலையே தாறன் சரியே...!

முக்கிய குறிப்பு :
சில கட்டங்களில் சில சொற்கள் இந்த TVல தண்ணியடிக்கிற கட்டங்களில படம் மங்கலா வாற மாதிரி இங்க சில சொல்லுக்கு நீங்களே அர்த்தம் போட்டுக்குங்க... Fill in the Blanks with suitable words :P

பேச்சு வாக்கில நான் கேட்டன் தாத்தா யாழ்ப்பாணம் இப்பெல்லாம் முன்னைய விட மாறி இருக்கெண்டு நினைக்கிறியளோ.... அப்ப அவர் சொன்னார் யாழ்ப்பாணம் மாறிட்டு எண்டு கடவுளே எண்டு நான் சொல்லவே மாட்டன் ஆனா யாழ்ப்பாணத்தின்ர புனித தன்மைய சீர்குலைக்கிற நடவடிக்கைகள் தான் தற் சமயம் நடந்தேறிக் கொண்டு இருக்குது மோனே! இது ஒரு கொஞ்சக் காலத்துக்கு தான்... அதுவும் யாழ்ப்பாணத்தின்ர பெயர கெடுக்கிறதுக்கு எங்கட மக்களையே பகடக் காயா பாவிக்கிறது தான் செரியான மனக் கவலை. இந்த காலத்து பொடியளுக்கு ஸ்டைல் தான் முக்கியம் தம்பி ஊரப் பற்றியோ நாட்டப் பற்றியோ எதுவிதமான கவலையும் கிடையாது.

பின்னேரமானா சைக்கிளையோ இல்ல, இப்ப தான் அப்பா அம்மாட காசுகள சுறண்டி புதுசு புதுசா மோட்டச்சைக்கிள்களையும் வாங்கி இல்லாத பொல்லாத றோட்டெல்லாம் கண்மண் தெரியாம திரியிறாங்கள். இவங்களுக்கெல்லாம் உயிரின்ர மதிப்பே தெரியாதப்பன். இத தட்டிக்கேக்க யார் இருக்கினும் நீர் சொல்லும் பாப்பம். பெடி பெட்டையளுக்குப் பின்னால திரியிறதும், பெட்ட பெடியனுக்குப் பின்னால திரியிறதும் பிறகு இப்ப கொஞ்சக்காலமா அதுகளின்ர அப்பா அம்மா ஆசுப்பத்திரிக்கு திரியிறதும் எண்டு காலம் மாறிப் போய் கொண்டு தான் இருக்கு. எல்லாம் அவன் செயல்.

இப்ப தான் கட்டவுத்து விட்டிட்டாங்களே! ஆளாளுக்கு உரு ஏறிப்போய் திரியிறாங்கள். முன்ன “பெடியள்” இருந்த போது இப்பிடி எல்லாம் திரிஞ்சவையே சொல்லும் பாப்பம்? என்ன ஒரு கட்டுக்கோப்பு! இப்ப எல்லாமே சீரழிஞ்சு போய்க்கொண்டு இருக்கு. அரசியல் எல்லாம் இப்ப எதுக்கு! அத விடுவம், ஏன்னா அரசியல கதக்க போனா இண்டைக்கு நீர் வீட்ட போக மாட்டீர்! அப்பிடி ஒரு கேவலமான அரசியல் இப்ப இருக்குது தம்பி. யாழ்ப்பாணம் இந்த நிலமைல இருக்கிறதுக்கு இதுவும் ஒரு காரணம். ஒரு காரணம் எண்டு சொல்லுறத விட முழுமுதற் காரணம் எண்டே சொல்லலாம்... ச்சே....ச்சே..!

எப்பிடி எல்லாம் வளங்கொழிச்ச யாழ்ப்பாணம் இப்ப தட்டுத் தடுமாறி தடம் மாறிப்போயிடுமோ எண்டு தான் எங்கள மாதிரி பெரிசுகளின்ர கவலை எல்லாம். இப்பத்தையான் இளசுகளுக்கு இது அடியோட விளங்குதே இல்ல, இதையே நாங்க சொல்ல போனா! யோவ் பெரிசு அதெல்லாம் எங்களுக்கு தெரியும் நீ உன் வேலைய பாத்திட்டு போ...! பிறகென்ன இந்த அவமானம் எங்களுக்கு தேவை தானா....?

ஆனா ஒண்டு அரசியல் இலாபம் தேடினுமோ இல்லையோ யாழ்ப்பாணத்தின்ர அபிவிருத்திய பொறுத்த வரையில ஏதோ முன்னேற்றம் இருக்கு தான் அத யாராலும் இல்லை எண்டு சொல்ல ஏலாது. எண்டாலும் இந்த அபிவிருத்திக்கையும் அசம்பாவிதங்களும் நடக்குது அது தான் கவலையான விசயம். முன்ன வெறிச்சோடிக் கிடந்த றோட்டெல்லாம் இப்ப ஒரே சனக்கூட்டமா இருக்குது. றேட்டுகளும் உதவாது, ஒரே புளுதி, பழக்க வழக்கங்களும் உதவாது, இப்பத்தைய
உண்மை நிலை விளங்காமல் பாத மாறிப் போற எங்கட சனத்துக்கு முன்னைய யாழ்ப்பாணத்துக்கான சரியான வழிய யாராச்சும் காட்டணும் இல்லின்னா அழிவ நோக்கி போற யாழ்ப்பாணத்த யாராலும் தடுக்க ஏலாது மோனே!

தாத்தா சொன்ன கருத்துக்கள வைச்சும் நான் அறிஞ்ச அனுபவிச்ச சில கரணங்களை வச்சும் ஒரு முடிவ நான் வகுக்கிறன் இது எந்த அளவுக்கு உண்மை எண்டத நீங்களே ஊகிச்சுக் கொள்ளுங்க.

பிரபல அரசியல்வாதிகளை போல போரைக் காரணம் காட்டி ஆதாயம் தேடுபவர்கள் பலர் இருந்தும் உண்மை நிலைப்பாட்டை சொல்ல விரும்புகிறவர்கள் வெறும் சிலரே! இதன் காரணத்தால் உண்மையின் வெளிப்பாடுகள் சமுகத்தின் சபையில் எடுபடுவதில்லை. நானும் போர்ச் சூழலில் யாழ்ப்பாணத்தில் இருந்தவன் தான் என்னாலும் உணர முடிகிறது நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த யாழ்ப்பாணத்தின் கட்டுக்கோப்பிற்கும் தற்போதைய யாழ்ப்பாணத்தின் கட்டுக்கோப்புக்கும் இடையிலான வித்தியாசத்தினை. எவ்வளவோ மாற்றங்கள் அபிவிருத்தியிலும் சரி அரசியலிலும் சரி.

மாற்றம் என்று பார்க்கின்றவிடத்து போர் முற்றுப் பெற்று A9 வீதி திறக்கப்பட்டதன் பிற்பாடே யாழ்ப்பாணத்தின் ஏழு அரைச் சனி ஆரம்பிச்சிருக்கிறது. ஒவ்வொரு விசயத்தையும் ஒட்டு மொத்தமாய் பார்த்தோமேயானால் கல்வியைப் பொறுத்த வரையில் யாழ் மைந்தர்கள் தான் முதலிடம், விளையாட்டைப் பொறுத்த வரையில் யாழ்ப்பாணத்தான் முன்னிநிலையில், கலாச்சாரத்தைப் பொறுத்த வரையில் எங்குமே இல்லாத உயர்வு என எல்லாவிதத்திலும் முதன் நிலையில் யாழ்ப்பாணத்தின் மைந்தர்களே கொடிகட்டிப் பறந்தார்கள். இதெல்லாம் எப்போது A9ற்கு முன். A9ற்கு பின்னர் எல்லாமே தலை கீழாய் மாறிக்கொண்டு வருகிறது.

தவறுகள் எல்லாவற்றையும் நாங்களே செய்து கொண்டு பழியை மட்டும் யாழ்ப்பாணத்தின் மேல் போட்டுக் கொள்கிறோம். இப்போதெல்லாம் பார்கின்ற பொழுது அடிக்கடி தலைப்பு செய்திகளாக “யாழ்ப்பாணம்” என்ற பதமே சுட்டிக்காட்டப்படுகிறது இதைத் தான் அரசியல்வாதிகள் விரும்பிறார்களா இல்லை இதெல்லாவற்றையும் தெரிந்தும் தெரியாதவர்களாய் இருக்கிறார்களா? எல்லா பிழைகளுக்கும் பொறுப்பாளிகளாய் நாங்களே இருந்து கொண்டு பழியை மட்டும் யாழ்ப்பாணத்தின் மீது சுலபமாக போட்டு விடுகிறோம்.

தவறுதான் செய்வது என்றாகிவிட்ட பிறகு தவறிற்கான பட்டத்தையும் நாங்களே பொறுப்பேற்கலாம் தானே....! எய்தவன் இருக்க அம்பை நோவானேன்...???