Wednesday, September 7, 2016

தட்டிவானை தடவிப்பாக்கிறன் இங்கின கிடைக்குமான்னு...

நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகமாகிக்கொண்டே போகின்ற நிலையில் ஒரு சில பிடித்தமான அதுவும் ஊர் வாழ் மக்களுக்கு பிடித்தமான தட்டிவான் என்றழைக்கப்படும் பயணிகள் ஏற்றும் வாகனம் கொஞ்சம் கொஞ்சமான வழக்கொழிந்து வருவதான உணர்வு தோன்றியிருக்கிறது...

வாகன நெரிசலில் கடுப்பாகி நின்ற போது தட்டிவான் போலான ஒரு வாகனம் என்னை கடக்க கண்டேன் ஞாபகங்கள் தொண்ணூறுகளிற்குள் சென்று விடுகின்றது!

நான் அறிய தட்டிவானை அதிகமாக கண்டது குறிகட்டுவான்-யாழ்ப்பாணம் போக்குவரத்து சேவையில் தான், அது தவிர நெல்லியடி, அச்சுவேலி பக்கங்களிலும் அந்த தட்டிவான் பாவனை இன்னமும் வழக்கத்தில் உள்ளதாக கேள்வி சரியாகத் தெரியவில்லை.

இதன் அமைப்பு எப்படியிருக்கும் என்றால் சிறிய ரக லொறியைப் போல உள்ளே ஆசணங்கள் பொருத்தப்பட்டு பின்புறமாக பாதி பலகையை நீட்டி விட்டு சங்கிலியால் இரு புறமும் கொழுவி விட்டிருப்பர் அப்படியாக அமைக்கப்பட்ட பலகையையே தட்டி என்று அழைப்பதாலோ என்னவோ அந்த வாகனத்திற்கு தட்டிவான் என பெயர் வந்திருக்கலாம் என நினைக்கின்றேன்.

பஸ் பிரயாணப்பிரியர்கள் இந்த தட்டிவானில் பயணிப்பரேயானால் நிச்சயமாக வித்தியாசமான அனுபவத்தினை பெற்றிருப்பர் காரணம் இந்த தட்டிவான்களுக்கு யன்னல்கள் கிடையாது ஆகவே  தட்டிவான் பயணிக்கும் வேகத்தில் எல்லா புறமும் காற்று அலாதியாய் பயணிகளை வந்தடையும் இந்த பயணத்தை அதிகமாக யாழ்ப்பாணத்து மக்கள் அனுபவித்திருக்க கூடும்.


பயணிகள் தவிர சந்தைப் பொருட்கள் அதாவது பழவகைகள், மரக்கறி வகைகள், ஆடு மாடு என எல்லாவற்றையும் ஏற்றி செல்லும் வசதி வாய்ப்புக்கள் நிறைந்த ஒரு வாகனமாக இந்த தட்டிவான் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அண்மையில் நான் கதிர்காமம் சென்றிருந்த வேளை அங்கே தட்டிவான் பாவனை இன்னமும் இருக்கின்றமையை அவதாணித்தேன் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது இவையெல்லாம் நான் தட்டிவான் பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே ஞாபகத்திற்கு வருகின்றன. 

பாதுகாப்பான இயற்கையை ரசித்தபடி காற்றுடன் முழு நேரம் கதை பேசியபடி பயணிக்க ஆர்வமிருந்தால் ஒரு தடவை தட்டிவானில் பயணித்துப் பாருங்கள்... 

ஒரு சில பொருட்கள் எவ்வளவு காலம் சென்றாலும் எம் மனதை விட்டு இலகுவில் மறைந்து போகாது, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவை போன்ற அல்லது அவை கண்ணில் தென்படும் போது நாம் நம்மை அறியாமல் எமது கடந்த கால பசுமை நினைவுகளிற்குள் இலகுவாக கடத்தப்பட்டுவிடுகின்றோம்.

அந்த மாதிரியான ஒரு சுவாரசியமான பயண அனுபவமே இந்த தட்டிவான் பயணங்கள், எதிர் காலத்தில் இம் மாதிரியான பயணங்கள் யாருக்கும் இலகுவில் வாய்த்துவிட போவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.