Tuesday, December 20, 2016

நதியோடை மீன்கள்...

எப்போதும் கண்களால் வலை வீசும்
காந்தக் கண்ணியை
நதிக்கரையில் சந்தித்தேன்
நிர்வாணமாய் நீந்தும்
மீன்களுக்கு தன் ஆடை வண்ணத்தில்
மின்னிடும் ஆடைகளை
அவள் அவைகளுக்கு
வழ‌ங்கிக் கொண்டிருந்தாள்...

எப்போதும் காந்தப் பார்வை
தரும் அவள் இன்று என்மேல்
காதல் பார்வை எய்கிறாள்!

அருகில் நெருங்கினேன்
எழுந்து நின்றவள்
அருகில் இழுத்தணைத்து
என்
நெற்றியில் முத்தமிட்டாள்...

துள்ளிக் குதித்தன நதியோடை
வண்ண மீன்கள்!
சிலிர்த்தது என் தேகம்!
சலனமற்று காற்றில் ஆடி
நதி விழும் ஆலம் இலை
அந்த நொடி பாரிய சப்தம் எழுப்பி
நீரில் மிதக்கத் தொடங்குகிறது!

விழுந்த இலையின் மேல் பயணிக்கிறது
அவள் இதயமும் என் இதயமும்!
காற்றிடை புகா எம் நெருக்கத்தின்
கதகதப்பில்
பிறந்தன ஆயிரமாயிரம் பட்டம்பூச்சிகள்!
ஈற்றில் நமக்கு நாமே உடையாய்
மாறியிருந்தோம் காதல் பறவைகளின் சப்தம்
கேட்டு ரசித்தபடி!
நீரில் மிதந்துகொண்டிருந்தது
மின்னிடும் அவள் ஆடையும் என் ஆடையும்!