Friday, September 2, 2016

நல்லூரில் இன்று நான்! கச்சான் கடையும் நானும் - நினைவில் 2

தேடுவாரத்துக் கிடக்கும் கச்சான் சாப்பிடும் ஆசை எல்லாம் அந்த 25 நாட்களுக்கும் அளவே இன்றி அத்தியாவசியமாகும். நல்லூருக்கு போனால் கச்சான் சாப்பிடாமல் வீட்டுக்கு வந்தால் அந்த நாள் அர்த்தமற்றதாய் ஒரு பிரம்மையை தோற்றுவிக்கும் காரணம் நல்லூருக்கு போறவன் எல்லாம் கட்டாயம் கச்சான் வாங்கி தின்னாம வீட்ட போக மாட்டான் என்பது ஐதீகம்... 

கடவுள் சித்தம் நான் நல்லூர் கோயிலடியிலே பிறந்தது வளர்ந்தது எல்லாமே, செரியா 4 மணிக்கு கம்பீரமாய் அடிக்கும் அந்த நல்லூரான் மணி ஆலய தரிசனத்திற்கான புறப்பாட்டு மணியாக மனதில் பதிந்து கொள்ளும் திருவிழா நேரம் அதுவும் பின்னேரம் வீதிகள் சல சலக்க தொடங்கிவிடும் வியாபரிகள் கூக்குரல் போட‌ தொடங்கிவிடுவார்கள் வீதியின் இரு மருங்கும் ஒரே களேபரமாய் தான் காணப்படும் குறைந்தது இரவு 9-10 மணி வரைக்காவது. கூட்டத்தோடு கூட்டமாய் நடந்து கோயிலுக்கு போய் சாமியுடன் ஐக்கியமாகி வீடு திரும்பும் இருள் தூழ்ந்த வேளையில் கச்சான் கடைக்காரருடன் பேரம் பேசுவதிலும் ஒரு சுவாரசியம் இருக்க தான் செய்கிறது.

(+) நல்லூர் நடு மையம் என்றால் நாலா புறமும் கட்டாயம் கச்சான் கடைகளால் அணிவகுத்திருக்கும் அந்த நல்லூர் ஏரியாவே, சரி விசயத்திற்கு வருவம்...

சாமிய இருப்புக்கு அனுப்பிட்டு பின் வீதியால நடக்கிறன் நான்,
முதல் கடைல இருந்து தொங்கல் கடை வரைக்கும் ஆக்களைக் கண்டோன கத்த தொடங்கிடுவாங்கள்:
அம்மா வாங்கோ கச்சான் வாங்கிட்டு போங்க‌
அக்கா வாங்க சாப்பிட்டு பாத்து வாங்குங்கிட்டு போங்க‌
தம்பி வாடா சுடச்சுட கச்சான்
அண்ண வாங்க இப்ப வறுத்தது சுட சுட  கச்சான், சாப்பிட்டு பாத்து வாங்குங்கோ... ஓடியாங்கோ எண்டு ஆளாளுக்கு கூவ.... 



சரி அவங்கட கூவலுக்கு சொவி சாச்சு ஏதாச்சும் ஒரு கடைக்க பூந்தா முதல் றவுண்டு சுளகுக்க குவிச்சிருக்கிற கச்சான்ல ரெண்டு மூண்ட எடுத்து திண்டு பாத்திட்டு இந்தா இதில அம்போருவாக்கு போடுங்க போளம் போடாம எண்டு சொல்லிட்டு எங்கட பாட்டில அந்த குவியல்ல ஒண்ணொண்ணா எடுத்து கொறிச்சுக்கொண்டே நிண்ட படி பேரம் போசுவம் பேசினன்...

என்னம்மா கொஞ்சமா போடுறியள் இன்னும் கொஞ்சம் கிள்ளி போடாம அள்ளி போடுங்க எண்டு சொல்லி சொல்லி கச்சான் பாஃக்கு வாய் மூடாத அளவுக்கு நிரப்பிக்கொண்டு வழி நீளமும் திண்டபடி வெளிக்கிட தெரிஞ்சவன் எவனாச்சும் சிக்குவான் பின்ன அவனுக்கும் நீட்டி கதைச்சு கதைச்சு நிக்க அந்த பக்கட் முடிஞ்சிடும்...

சரி போவம் எண்டு அவன காய் வெட்டிட்டு இன்னும் ஒரு பக்கட்ட வாங்கிக்கொண்டு கொஞ்ச தூரம் கோயில் பக்கமா நடக்க இன்னும் ஒரு அடிமை சிக்கும் அதையும் கூட்டிக்கொண்டு வாடா மச்சான் அப்பிடி அந்த பின் வீதி மணலுக்க இருந்து கச்சான் சாப்பிட்ட படி சரக்கு பாப்பம் எண்டு அதையும் இழுத்துக்கொண்டு மணலுக்க இருந்து திண்டிட்டு ஒரு ஒம்பது மணி வரைக்கும் அரட்டை அடிச்சு வீட்ட போகேக்க இன்னும் ஒரு பக்கட்ட வாங்கிக் கொண்டு போய் வேட்டி எல்லாம் களட்டி வைச்சிட்டு ஈசி சியர்ல படுத்துக் கிடந்து திரும்பவும் மிச்சம் சொச்சம் எல்லாத்தையும் கொறிச்சு தள்ளி கச்சான் கோதெல்லாத்த்தையும் அங்கங்க கொட்டி அம்மாட்ட பேச்சும் வாங்கி வீட்ட கூட்டிட்டு விறாந்தைக்க வெறுந்தரைல விட்டத்த பாத்தபடி மல்லாக்கா படுத்தோண வரும் பாருங்க ஒரு மரண நித்திரை அது தான் சார் சொர்க்கம்...! 

நல்லூரில் இன்று நான் - நினைவில் 1

காலையில் கொழும்பில் இருந்து வந்து மளமளவெண்டு குளிச்சு வெளிக்கிட்டுக் கொண்டு நல்லூருக்கு விறுக்காய் நடக்க ஆரம்பிக்கிறேன், வைமன் றோட்டில இருந்து பாரதியார் சிலை அரசடி முதலாம் பரியரைத் தாண்ட எத்தணிக்யில் அங்கு போட‌ப்பட்டிருக்கும் பரியல் நவீனமாய் காணப்பட்டது அதாவது சில்லுகள் பூட்டி பொலீஸ் காவலுடன், அதைக் கண்ட கணமே நினைவுகள் என்னை 2000த்திற்குள் அழைத்து செல்கிறது...
அந்தக் காலத்தில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி சாரணர்கள் சிறப்பாய் நல்லூரில் தமது கடமைகளை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருந்த காலமது, காலையில் நாங்கள் கோயிலுக்கு போறதுக்கு அலார்ம் வைப்பதே இல்லை காரணம் அவர்கள் 4 மணியானால் நல்லூர் முனிசிபல் கவுன்சிலுக்க இருந்து பரியலுக்கு போடுற ரம்(பீப்பா பரல்)ஐ காலால் உதைத்து உதைத்து உறுட்டி வரும் சத்தமே எங்களை எழுப்பி விடும்.
அவர்கள் மட்டுமல்ல சென் ஜோன்ஸ், சென்றல், வேறு சில பாடசாலை மாணவர்கள் ஒன்றாய் இணைந்து சிறப்பாக கடமையாற்றிய காலம் என்றால் அக் காலத்தையே சொல்வேன்... அவ்வளவு நேர்த்தி கடமையில் ஆனால் இன்று அவ்வாறோ என்று ஒரு கணம் சிந்திக்க வைத்தது ஏன் என்று தெரியவில்லை...
மேலும் நடக்கிறேன் இரு மருங்கும் என்றும் மாறாத ஆனால் முகங்கள், பாஷைகள் மாறி
ன கச்சான் மற்றும் மாலை சக விளையாட்டுச்சாமான் கடைக் காரர்கள் 'அக்கா வாங்கோ கச்சான் வாங்கிட்டு போலாம், அண்ண வாங்கோ சாப்பிட்டு பாத்து வாங்குங்க சுட சுட கச்சான், அம்மா வாங்கோ நல்ல சாறீஸ் மலிவு மலிவு, எது எடுத்தாலும் அறுவோருவா எது எடுத்தாலும் அறுவோருவா...
இடை விடாத கூவல்கள் இவைகளைக் கடந்து திலீபன் தூபியடி முச்சந்தியை அடைகிறேன் அது தான் ஒரு காலத்தில் எங்களது கோட்டை என்றே சொல்லலாம் கோயில் திருவிழாக்கள் முடிந்து நட்புக்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்து லூட்டியடிக்கின்ற எமது அசைக்க முடியா கோட்டை. அதை பல புது முகங்கள் ஆக்கிரமித்திருந்தார்கள் ஆனால் இன்றும் நாங்கள் கூடி கதைப்பதாய் நினைவில் நிழல்ப்படம் ஓட ஆரம்பித்து விட்டது... பழமைகளை ஆங்காங்கே நினைவுகளாக்கி நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நான் சின்னவனாக மாறிக்கொண்டருக்கிறேன் என்னையே அறியாமல்...
மெல்ல வலது பக்கம் திரும்பினால் றியோவில் அன்று போல் இன்றும் எந்நேரமும் கூட்டம் அலை மோதியபடி ஆங்காங்கே பெட்டிக்கடைகளும் விளையாட்டுசாமான் கடைகளும் அது போக மோட்டார் சைக்கிள் கடைகளும் என நல்லூர் ஏரியாவே களைகட்டியிருந்தது இவைகள் தான் இன்றும் மாறாத அதே பழமையுடன் நவீனமும் கலந்து...
விசித்திரமான பறக்கந்தட்டுக்கள், வான வேடிக்கைப் பொருட்கள், வீதியில் கற்பூரம் விப்போர் என வீதி எந்த நேரமும் அல்லோலப் பட்டுக் கொண்டே இருக்க நான் முனிசிப்பல் கவுன்சிலைக் கடக்கிறேன் நல்லூர் சிவன் கோயிலில் புத்தகக் கடையும் அதற்கு எதிர்த்தாற் போல் உடுப்புக் கடையும் மாற்றம் இல்லாமல்... ஏறத்தாள நான் சிறுவனாக மாறியிருந்தேன் கண்டதெல்லாம் வாங்க வேண்டும் என்ற மனப்பாங்கோடு நான் நடந்த வீதியில் நிசப்தமாக நான் நடந்தாலும் நினைவுகள் போடும் குழப்பங்கள் என்னை எதையாவது வாங்கி விட தூண்டிய வண்ணம்! சரி பழைய நினைவிற்காய் எதையாவது வாங்கி விட வேண்டும் ஆனால் கோயிலுகுக்கு போய் திரும்பி வரும் போது என்று சிவன் கோயிலைக் கடக்கையிலே அந்த காலத்தில் 5/=க்கு வித்த அந்த பெரிய பலூன் 15/- என்று கூறியபடியே முகத்துக்கு நேரே நீட்டினார் அந்த பலூன் வியாபாரி அந்த கணமே மனசு சம்மதிக்கிறது வாங்கிக் கொண்டே நடக்கிறேன்...
ஆதீன முன்றல் கடக்கையில் சிறுமி அப்பாவிடம் அடம்பிடித்தபடி அவள் அந்த பலூனுக்காய் அடம்பிடிப்பது அழகாய் இருந்தது நான் கோயிலுக்கு தானே போறன் இந்தாங்கோ அண்ண இத இவளுக்கு குடுங்கோ என்று அதை குடுத்துவிட்டு இரண்டாவது பரியலைத் தாண்டுகிறேன் வீதி முழுவதும் சிவப்பு வெள்ளை சீலையால் மறைத்து கட்டப்பட்டு இருந்தது இந்த வேலைப்பாடு கடந்த திருவிழாவில் இருந்து அரங்கேறியிருக்கிறது ஏதேதோ மாற்றம் வருசா வருசம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
ம்ம்ம்
கோயிலுக்க போய் தான் பார்ப்போம் என்றவாறே தெற்கு வாசல் பக்கமாய் நடக்கிறேன் சென் ஜோன்ஸுக்கு அடுத்த படியாக (இப்போ எப்பிடியோ) நேரம் தவறாமை என்பதன் இலக்கணம் நல்லூரில் தான் காண முடியும் அப்படி அந்தந்த உற்சவங்கள் அந்தந்த வேளைகளில் உரிய நேரத்தில் நடந்து கொண்டே இருக்கும்... வசந்த மண்டபத்தில் பஞ்சாலாத்தி காட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது நான் தெற்கு வாசல் படியைக் கடந்து உள்ளே போகிறேன் அரோஹரா என்ற வாறே... அழகுற உள் வீதி அளவான பக்தர்கள் சற்று நேரத்தில் சாமி உள்வீதி வலம் வருகிறது அழகாய் ஆரோகணித்த வண்ணம்...

பக்தி பரவசத்தில் சற்று நேரம் திழைத்தபடியே சாமியை நோக்கிய வண்ணம் பின் புறமாக சாமியுடன் மேள தாள விற்பன்னர்களுடன் நடக்கிறேன்... உண்மையில் இது தான் வரம்...
அப்படியே யாக சாலைக்கு சாமி வர நான் வெளியில் வந்தால் தமிழ் சிங்களம் எல்லாம் கைகளில் ஸ்மார்ட் போஃன் வைத்தும் டி எஸ் எல் ஆர் வைத்தும் செல்ஃபி குள்ஃபி என வளைத்து வளைத்து போஃட்டோ எடுத்த படி... திருவிழாக்கள் தொழில்நுட்பமயப்படுதலின் ஆரம்பகட்டத்தில் நாங்கள் இருக்கிறோம் என்ற மனநிலையுடன் ஆதீனம் நோக்கி நடக்கிறேன் வெள்ளைக்காரன் வேட்டியுடனும், வெள்ளைக்காரி சீலையுடனும் கோயிலுக்கு வருகிறார்கள் இவர்கள் தான் அடுத்த கலாச்சார காவலர்கள் என்ற வாறே வெளி வீதி சாமி உலாவிற்காய் ஆதின வாசலில் நின்றுகொண்டிருக்கிறேன்.
ஆங்காங்கே அழகான பிள்ளைகளைக் காணக்கூடியதாய் இருந்தது சும்மா சொல்ல கூடாது மொத்தத்தில எல்லாமே செம்ம பிகருகள் தான் சாமி வரும் வரை அதுகளை பார்த்துக்கொண்டு நிற்கிறேன்... அந்த காலத்தில் செய்த தொழிலை இப்போ செய்வதில் ஒரு ஆத்ம திருப்தி...
சாமி வருகிறது... மீண்டும் வெளி வீதியில் நடக்கிறேன் என்னுடன் என் நண்பனும் இணைந்து கொள்கிறான் இருவரும் பழைய நினைவுகளை மீட்டிய வண்ணம் சாமியை தூரே விட்டு விட்டு எங்கட பாட்டுக்கு நடந்து தேர்மூட்டியடியில் வந்து நின்று மீண்டும் அதே கணக்கெடுப்பு... எல்லோரும் அழகிகள் தான் பிழை சொல்வதற்கில்லை.
மச்சான் இண்டைக்கு சாமி உள்ள போனோன்ன கரம்சுண்டல் வாங்கி சாப்பிட்டு போவம் எண்டான் சரி எண்டு ஆதீனத்தடிக்கு வாறம் சாமியும் உள்ள போது... அந்த கரம் சுண்டல் இப்போ ஏதோ ஸ்பெசல் எண்டு மரவள்ளி எல்லாம் போட்டு கறியெல்லாம் ஊத்தி வித்தியாசமா இருந்திச்சு ம்ம்ம் ஒரே அடில அடிச்சு தள்ளிட்டு, கடைகளை பாத்துக்கொண்டு வீட்டுக்கு நடக்கிறன்... அழகாய் சோபித்திருகிறது நல்லூர்... கண் கவர் கடைகள், கவர்ச்சியான பொருட்கள் என்று... ம்ம்ம்
இவைகள் தான் இன்றும் பழமை மாறாமல் அதே தோற்றத்தோடு... 'மகிழ்ச்சி' திருவிழாவும் முடியப் போது நல்லூரும் சோர்விழந்து போக போது எண்டு நினைச்ச படி கச்சான் ஒரு பக்கட்ட வாங்கி உடைச்சு உடைச்சு கோத றோட்டில போட்ட படி வீட்டுக்கு வந்து ஈசி சியரில கண்ணை மூடினால் அன்றும் இன்றும் எத்தனையோ மாற்றங்கள்... ஆனால் எல்லாமே ஒரே மாதிரியாய்...