Tuesday, February 7, 2012

நாகரிக மோகம்

து நான் வரைந்த கவியரங்க கவிதைகளில் முதலாவது கவி! நாகரிக மோகம் எனும் தலைப்பில் வரைந்தது...!

இறை வணக்கம் :

தமிழ் எனும் அமுது தந்து
தரணியெங்கும் புகழ் பரப்ப
எனக்கருள் பொழியும்
பரம் பொருளே - உமக்கு
பல கோடி வணக்கங்கள்...!

தமிழ் வணக்கம் :

தீந்தமிழ் சொல்லெடுத்து
தீராமல் நான் பேச
அலையென அள்ளி வரும்
என் தமிழே!
உனக்கோர் சக வணக்கம்...!

அவையடக்கம் :

மூத்தோர் குடி தனிலே
சிறியோன் கிறுக்கல் தனை
எடுத்தியம்ப வந்துள்ளேன்
நான்
கற்றவைகள் சில!
அடியேன் கல்லாதவை பல!
தவறுகள் தலை தூக்கின்
தன்மையோடு மன்னியுங்கள்!

நாகரிக மோகம்

நாடு செழிக்க நானிலம் வேண்டுமாம்
நாடு பற்றி யாருக்கிங்கே கவலை
நாம் ஒண்டு! வாழ்வொண்டு!
நாசுக்காய் வாழ்ந்திவிட்டு போவோம்!

வாழ்வியல் பாதையிலே எத்தனை திருப்பங்கள்
துல்லியமாய் வாழ்வதிலே குறியாய் இருக்கிறார்கள்
தன் வீடு!
தன் குடும்பம்!
தன் சொத்து! என்று
தனக்கென வாழ்பவர்கள் தாராளமாய் இங்கே!

தன்னியல் மேம்பாடு! சுயநல கோட்பாடு!
எடுத்தியம்ப முடியாத வாழ்க்கையின் படிப்பினைகள்!
புது வாழ்க்கைப் பயணத்தில் திணிசு திணிசாய்
சிந்திக்கிறார்கள்!
நாகரிக மோகத்தில் கண்டபடி பறக்கிறார்கள்!

மொழியியல் மோகம்!
நடையியல் மோகம்!
குணயியல் மோகம்! என்று
எல்லாமே மாற்றம் தான்!

அழகு தமிழ் அரைகுறையாய்
கலப்பு மொழி நிறை மனதாய்!
அப்படி என்ன கண்டீர்கள் கலப்பு மொழி
பயன்பாட்டில்!
தாய் மொழி பேசிட வெட்கம்!
ஆங்கில மோகம் அது நாகரிக தலை நகரம்!
அம்மா முதல் அம்மி வரை அனைத்துமே
ஆங்கிலத்தில்...
வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம்!
தமிழ் பேசும் குழந்தைகள்
தங்கிலிஸ் பேசிறார்கள்...!

என் பிள்ளைக்கு இண்டர்நஷனல் ஸ்கூல் அட்மிசன்
இடைவிடாத படிப்பு!
எண்டர்ரெயின்மெண்ட் டைம் எண்டு
ஏதும் இல்லை அவனுக்கு!
பிறகென்ன வாழ்க்கை இது!

ஆள் பாதி! ஆடை பாதி!
அதிகமாய் பரவும் தொற்று வியாதி!
ஆள் வளர ஆடை குறையும்!
இது தான் புது மொழியோ?

பெண் பூவை, கோதை, மடந்தை
எவன் சொன்னான் பைத்தியக்காரன்!
பெண் என்ற பதம் போய்
எது பெண் எது ஆண் என்று
அடையாளம் தேடும் படலம்
தொடர்கிறது!

மேலாடை ரெண்டு கைக்குட்டை
கீழாடை ஒரு கைக்குட்டை
காற்றோட்ட உடுப்பாம்
கேட்டால் ஃபஷன் என்பாள்!

வட்ட பொட்டு கூர் பொட்டானது!
மஞ்சள் குங்குமம் மங்கிப் போனது!
பெண்ணியம் கொஞ்சம் ஆட்டம் கண்டது!
நாகரிகம் நல்லாய் தலைவிரித்தாடுது!

வெளிநாட்டு மோகம் வெள்ளைக்காரன் தொடர்புகள்
வெகுளித் தனமாய் வாழ்வதற்கு
அடித்தளம் இடும் நம்மவர்கள்...
அப்பா வெளிநாடு அண்ணன் வெளிநாடு!
அப்பாடா எனக்கென்ன கவலை
கேட்டதெல்லாம் கிடைக்கும்!
ஊதாரித்தனத்தின் உந்து சக்தி
டொலரிலும் பவுண்ட்சிலும்
சக்கரமாடுது...!

தொட்டதெல்லாம் புது மாற்றம்
சொல்வதறியா கால மாற்றம்
நாகரிக குகைக்குள்
நல்லாவே திரிகிறீர்கள்
கரையேறும் வழி எங்கென்றில்லை
கரையேற கை கொடுத்தால்
ஏற்பதற்கும் தயாரில்லை...

நாகரிக மாற்றம் இது நரகத்தின் மாற்றம்....!
முடிவை நான் தேட
வார்த்தைகள் வரவில்லை....!

நன்றி!