Monday, February 13, 2012

என் காதலே...!

என் காதலே!

கண்கள் வழி இதயம் புதுந்து

என்னை நித்தம் கொல்லும்

என் காதலே!

இமைகளில் ஒரு கணம் இதமாய் வாழ்ந்துவிட்டு போவாய்

நீ!

தூக்கம் தொலைத்து என்னுள்

வலி கொள்பவன் நான் தானே!

புயலென வந்து

வலிக்காமல் இதயம் திருடும்

வித்தையை எங்கே தான் கற்றாயோ!

இன்றும்

உனக்காய் வரைந்த காதல் கடிதங்கள்

சட்டைப் பைக்குள் ஏராளம்!

அவை ஓர் குட்டி நூலகம் என்பேன்!

எனக்குள் சேர்த்தேன்

உன் நினைவுகளை

ஓர்

பொக்கிஷமாய்!

அவையாவும் அழகிய கவிதையென்பேன்!

காதலர் தினங்களில்

காத்திருப்பு தான் என் காதலியாகிறது!

என்

தனிமைக்குளேயும் குதூகலமாய்

வந்து போகிறாய் நீ!

என் கனவுகளில் உனக்கே முதலிடம்!

என்னே! அழகாய் பேசிகிறாய் நீ!

உன் ஓரப் பார்வையில்

என்

கனவுகள் அனைத்தும்

உயிர் பெற்றெழக் காண்பேன்!

இனிமையான பேச்சுக்களில்

இலக்கியப் பாவையாகிறாய் - நீ!

தனிமையான நேரங்களில்

தளிர் விடும் பசுமையாகிறாய் - நீ!

தினம் ஓர் கற்பனைக்குள்

வாழ்ந்துவிட்டுப் போகிறேன் உன்னோடு!

கனவில் உன் நெருக்கம், காதல்

அது போதும் எனக்கு!

காலங்களுக்குள் கட்டுண்டவனாய்

உன் காதலின் வாசல் தேடி

இன்றும் காத்திருக்கும் உன் காதலன்!
















நினைவுகளோடு,

யாசித்திருக்கும் உன் காதலன்!

பிறேம்!

Saturday, February 11, 2012

போக்குவரத்து நெரிசலின் உந்துசக்தி - போக்குவரத்து பொலிஸ்

இதோ வந்திட்டேன்...!

கொஞ்ச நாளாவே யாரையாச்சும் வம்புக்கிழுத்து அரட்டையடிக்கிறதே எனக்கு வேலையா போச்சு. இளம் கண்று பயமறியாதாமே... என்னை சொன்னன்... லொலொ

இண்டைக்கு நம்ம நாட்டின் காவலர்கள், சேவகர்கள் பற்றி கொஞ்சமா சொல்ல போறன்! இவர்கள் தான் நாட்டின் தூண்கள் (முட்டுக்கட்டையான தூண்கள்) என்றால் மிகையாகாது!

போக்குவரத்து பொலிஸின் சேவை ஒரு நாட்டுக்கு இன்றியமையாதது. அதுவும் கொழும்பு போன்ற பெரு நகரங்களுக்கு போக்குவரத்து பொலிஸாரின் தேவை அத்தியாவசியமானது. பொதுவாகவே போக்குவரத்து பொலிஸ் என்பதன் விளக்கம். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது தான் என்று நம் எல்லோருக்கும் தெரிந்த விடயமே!

இருந்த போதும் நமது நாட்டில் போக்குவரத்து பொலிஸ் என்பதன் விளக்கம் சனமே இல்லாத இடத்தில் சன நெரிசலை ஏற்படுத்துபவர்கள் என்று பொருள்படுகிறது.
இத நான் சொல்லேல பொதுவா எல்லாரும் தான் சொல்லுறாங்கள். அதுக்காக என் மேல கோபப்படாதீங்க சொல்லிப்போட்டன்.

எங்கெல்லாம் சனமே இல்லையோ அங்கெல்லாம் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் வரைக்கும் சன நெரிசலை ஏற்படுத்துவதே இவர்களின் அளப்பெரிய சேவை! அதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக செயற்படுகிறார்கள்.
இதனாலேயே வீதிகளில் கொஞ்சமாக வாகன நெரிசலை கண்டவர்கள் மனதில் உடனே எழும் சந்தேகம் போக்குவரத்து பொலிஸ் ஏதும் கடமையில் நிற்கிறார்களோ என்பதே!
மனசத் தொட்டு சொல்லுங்கப்பா! நான் சொன்னது உண்மையோ இல்லையோ!

இதற்கு, இந்த போக்குவரத்து பொலீஸாரால் ஏற்படுத்தப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு பல காரணங்களை சொல்லிக்கொள்ளலாம்!
குறிப்பாக அனுபவமில்லாத இளம் பொலீஸாரை கடமையில் ஈடுபடுத்தல். அவர்களால் தங்களையே கட்டுப்படுத்த தெரியாதவர்கள் எப்படி வீதிப் போக்குவரத்து ஒழுங்கு முறைகளை கைக்கொண்டு நெரிசலைக் கட்டுப்படுத்த போகிறார்கள்.

தேவையில்லாத தருணங்களில் வீதிகளை மறியல் போடுதல், அதுவும் குறிப்பாக மந்திரி, தந்திரி வாறாராம் எண்டு யாராச்சும் புரளிய கிழப்பினாலும் சரி உண்மையா சொன்னாலும் சரி இதையே குறிக்கோளா வைச்சு காலைல இருந்து வெய்யில் காஞ்சு வீதிகளை மறியல் போட்டு நெருக்கடிகளைத் தாங்களாவே ஏற்படுத்திக் கொள்கிறார்கள்!
பின்னர் அதையே அறக்கபறக்க அப்புறப்படுத்த முயற்சிப்பது! இது சிறந்த திட்டமிடல் இல்லாமையின் வெளிப்பாடு என்றே சொல்லிக்கொள்ளலாம்.

இதுக்கெல்லாம் அப்பால் போக்குவரத்து நெரிசலுக்கு பொலிஸாரையே காரணகர்த்தா ஆக்குவதை விட நம்மவர்களிலும் சில தவறுகள் இருக்கதான் செய்கிறது! அதுவும் குறிப்பாக அளவுக்கு மீறிய பேருந்து போக்குவரத்து சேவைகள், அதிகரித்த முச்சக்கர வண்டிகள் பாவனை! இதனாலும் அதிகம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது!

இவற்றைக் கட்டுப்படுத்துவதே போக்குவரத்து பொலிஸாரின் மிகப்பெரிய சவாலாக காணப்படுகிறது! ஆனாலும் அதிலே இன்றும் அவர்கள் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். நம்மவர்களும் விடுவதாய் இல்லை. கெடுகிறேன் பந்தையம் பிடி எண்ட கணக்கில் அவர்களும் குறுக்கும் நெடுக்குமாக வாகனங்களை செலுத்திய வண்ணமே இருக்கிறார்கள்.

இப்படியான செயற்பாடுகளால் திறமையான பொலிஸார் பலரின் திறமைகள் வீண் போகின்றது! எது எவ்வாறு இருந்தாலும் போக்குவரத்து பொலிஸாரின் பணி இலங்கையைப் பொறுத்த வரையில் சரியான வகையில் கட்டமைக்கபடவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

அளவுக்கு அதிகமான வாகன பாவனை, தற்போதைய போக்குவரத்து நெரிசல், வீதி கட்டமைப்புக்கள் எல்லாமே இவற்றுக்கு வழிகோலும் அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன, இருந்தும் வருகின்றன.

இவற்றையில்லாம் தாண்டி நெரிசலைக் குறைக்கும் வகையில் மின் சமிக்ஞைகள், பாதசாரிகள் கடவைகள் இருந்தும் அவ்விடங்களில் போக்குவரத்து பொலிஸ் ஒருவர் கடமையேற்கும் போது தானாகவே வீதி நெரிசல் ஏற்படுகிறது.

ஆகவே போக்குவரத்து நெரிசலின் உந்துசக்தி போக்குவரத்து பொலிஸாரே....!

பொலிஸ் மாமாஸ் என்னை மன்னிச்சுக்கோங்கோ.... ஐயாம் பாவம்!

இனி காதலர் தினத்தில காதலியோட வாறன்...! பாய்!

Friday, February 10, 2012

உதுகள் திருந்தவே திருந்தாதுகள்...!

வணக்கமுங்கோ...!

இதோ வந்துட்டேன்! சின்ன விவகாரமான விசயத்தோட தான் வாறன் றோட்டில கீட்டில கண்டா ஆள் வைச்சு அடிச்சு போடாதீங்கோ! பொடியன் பாவம்....!

என்ன பெரிசா ஒண்ணும் சொல்ல வரல! நம்மட சனத்தப்பற்றி ஒரு நாலு விசயம் கண்டறிஞ்சன் அத யாரிட்டையாவது சொல்லனும் போல இருக்கு அது தான் இதுல வந்து பகிரங்கமா ஊதிட்டு போலாம்னு ஒரு முனைப்பு தான்.... லொலொ!

போன கிழம நான் யாழ்ப்பாணம் போயிருந்தன்!
என்னென்னமோ அபிவிருத்தி எண்ட பேர்ல செய்திருக்கிறாங்களப்பா... அதுக்கு பாராட்டு மாலை தெரிவிக்கிற வகைல றோட்டு முழுக்க மண் புளுதி! உது தான் யாழ்ப்பாணமா எண்டு ஒரு சந்தேகம் வேற!

எப்ப யாழ்ப்பாணத்துக்கு போனாலும் இன்னும் மாற்றம் இல்லாம இருக்கிறது ஒரு சில விசயங்களும் நம்மடாக்களின்ர நடவடிக்கைகளும்.

பொதுவாவே எனக்கு யாழ்ப்பாணம் போனா மினி பஸ்சில ஏற பிடிக்கிறதில்ல! ஏன்னா அவங்கள் தங்கட வியாபார போட்டிக்காக நம்மள பலிக்கடா ஆக்கிர்றாங்கள்!
உவங்களின்ர பஸ்சில நெரிஞ்சு கொண்டு போகணும்னு எங்களுக்கென்ன தலையெழுத்தா...!
அவையளுக்கு எங்கள பாத்தா உமி, பஞ்சு, நெல்லின்ர ஞாபகம் வாறதோ என்னமோ! நம்மள போட்டு அந்த அடைசல் அடைவினும்!
விரலுக்கேத்த வீக்கம் இருக்கனும்! பஸ்சுக்கேத்த சனம் இருக்கணும்! அளவுக்கு மீறி ஆக்கள ஏத்தி போட்டி போட்டு எத்தினையோ மினி பஸ் இடிபட்ட, கவுண்ட தரவுகள் ஆறா வடுக்கள் இன்னும் இருக்குது.

ஆனாலும் உவங்கள் திருந்தவே இல்ல! உவங்களோட இப்பிடி சண்டை பிடிச்சு தான் பயணம் பண்ணனும் எண்ட அவசியம் எனக்கில்ல! என்னை போல பலருக்கும் இல்லை.

அடுத்தது!
எந்த பஸ்சில ஏறினாலும் ஒரு தாய் கைக் குழந்தைய தூக்கிட்டு வந்தா ஒரு மனுசர் கூட அந்த பொண்ணுக்கு இடங்குடுக்க தயாரில்ல! பாவம் அந்த தாய்மார் தங்கட குழந்தைகள தூக்கிக் கொண்டு பரிதாபமா நிப்பாங்க!
நம்மட ஆக்களுக்கு பழக்கவழக்கம் பூச்சியம்!

சத்தியமா சொல்லுறன் பஸ் பயணம், கரிசனை, பிறருக்கு உதவி எண்டத நம்மட சனம் எங்கட சிங்கள மக்களிட்ட இருந்து தான் பழகிக்கணும்!
இதுக்காகவே சிங்கள சனத்திட்ட ஒரு கிழம பயிற்சி எடுத்தா கூட தப்பில்ல எண்டு தான் நான் சொல்லுவன்!

அரை ரிக்கட்! முழு ரிக்கட் சண்டை பிடிக்கிறது கைக் குழந்தைக்கு அடை ரிக்கட் போடுறது! ரெண்டு பேர் இருக்கிற சீட்டில மூணு நாலு பேர நெருக்கி ஏத்திறது! ஏய்யா இந்த வெறி!
ஒரு கலியாண வீட்டுக்கு போற பெண் பஸ்ல ஏறி போனா அது இறங்கிறபோ கலியாண வீட்ட போற மாதிரியா போய்ச் சேரும்...?
இல்ல தெரியாம தான் கேக்கிறன் உவங்களுக்கு இந்த விசயத்தில மனசாட்சி தான் இல்லையா இல்ல சமயோசிதமா சிந்திக்க தான் தெரியலையா...?

ம்ம்...!
உவங்கள் திருந்தவே மாட்டாங்கள்!

அத தான் விடுவம் பள்ளிக்கூடத்துக்கு போனா வாத்திமாருக்க ரெண்டு பிரிவு! அதிபருக்கு பந்தம் பிடிக்கிற வாளி வைக்கிற கூட்டம் மற்றது வாத்திமாருக்கே வாளி வைக்கிற கூட்டம்!
வேலையே செய்யாம செய்ற மாதிரி பிள்ளைகளையும் ஏமாத்தி தங்கள, தங்கட முன்னேற்றத்துக்கு தாங்களே முட்டுக்கட்டையா இருக்கிற கோஷ்டி! உதுகளும் வாழ்க்கைல திருந்தவே திருந்தாதுகள்!

இன்னும் சொல்ல போனா படிபெல்லாம் முடிச்சிட்டு றோட்டில வெட்டியா அங்கையும் இங்கையும் திரிற கூட்டம்! இப்பெல்லாம் காலுக்கையும் கைக்கையும் ஓரே மோட்டச்சைக்கிள் தானே! பெடி பெட்டை எல்லாம்!
அதில வெட்டியா திரிறது தான் கூட!

இதுகள திருத்தவே முடியாது!
என்ன தான் சரியா சரியான நேரத்துக்கு திருந்தினாலும் ஒரு சிலர, அவங்களின்ர நடவடிக்கைகள திருத்தவோ மாற்றவோ முடியாது!
இது நான் என்ர வாழ்கைல, யாழ் நோக்கிய பயணத்தில கண்ட உண்மை!

திரும்பவும் சொல்லுறன் ஏதோ எண்ட மனசில பட்டிச்சு! சொல்லனும்னு தோணிச்சு சொல்லிட்டன்!
ஏற்றுக்கொள்ளுறவங்க ஏற்றுக்கொள்ளுங்க!

அப்ப போய்ட்டு வரட்டே!
கூடிய சீக்கிரம் திரும்ப வாறன்....! பாய்!

Tuesday, February 7, 2012

நாகரிக மோகம்

து நான் வரைந்த கவியரங்க கவிதைகளில் முதலாவது கவி! நாகரிக மோகம் எனும் தலைப்பில் வரைந்தது...!

இறை வணக்கம் :

தமிழ் எனும் அமுது தந்து
தரணியெங்கும் புகழ் பரப்ப
எனக்கருள் பொழியும்
பரம் பொருளே - உமக்கு
பல கோடி வணக்கங்கள்...!

தமிழ் வணக்கம் :

தீந்தமிழ் சொல்லெடுத்து
தீராமல் நான் பேச
அலையென அள்ளி வரும்
என் தமிழே!
உனக்கோர் சக வணக்கம்...!

அவையடக்கம் :

மூத்தோர் குடி தனிலே
சிறியோன் கிறுக்கல் தனை
எடுத்தியம்ப வந்துள்ளேன்
நான்
கற்றவைகள் சில!
அடியேன் கல்லாதவை பல!
தவறுகள் தலை தூக்கின்
தன்மையோடு மன்னியுங்கள்!

நாகரிக மோகம்

நாடு செழிக்க நானிலம் வேண்டுமாம்
நாடு பற்றி யாருக்கிங்கே கவலை
நாம் ஒண்டு! வாழ்வொண்டு!
நாசுக்காய் வாழ்ந்திவிட்டு போவோம்!

வாழ்வியல் பாதையிலே எத்தனை திருப்பங்கள்
துல்லியமாய் வாழ்வதிலே குறியாய் இருக்கிறார்கள்
தன் வீடு!
தன் குடும்பம்!
தன் சொத்து! என்று
தனக்கென வாழ்பவர்கள் தாராளமாய் இங்கே!

தன்னியல் மேம்பாடு! சுயநல கோட்பாடு!
எடுத்தியம்ப முடியாத வாழ்க்கையின் படிப்பினைகள்!
புது வாழ்க்கைப் பயணத்தில் திணிசு திணிசாய்
சிந்திக்கிறார்கள்!
நாகரிக மோகத்தில் கண்டபடி பறக்கிறார்கள்!

மொழியியல் மோகம்!
நடையியல் மோகம்!
குணயியல் மோகம்! என்று
எல்லாமே மாற்றம் தான்!

அழகு தமிழ் அரைகுறையாய்
கலப்பு மொழி நிறை மனதாய்!
அப்படி என்ன கண்டீர்கள் கலப்பு மொழி
பயன்பாட்டில்!
தாய் மொழி பேசிட வெட்கம்!
ஆங்கில மோகம் அது நாகரிக தலை நகரம்!
அம்மா முதல் அம்மி வரை அனைத்துமே
ஆங்கிலத்தில்...
வார்த்தைக்கு வார்த்தை ஆங்கிலம்!
தமிழ் பேசும் குழந்தைகள்
தங்கிலிஸ் பேசிறார்கள்...!

என் பிள்ளைக்கு இண்டர்நஷனல் ஸ்கூல் அட்மிசன்
இடைவிடாத படிப்பு!
எண்டர்ரெயின்மெண்ட் டைம் எண்டு
ஏதும் இல்லை அவனுக்கு!
பிறகென்ன வாழ்க்கை இது!

ஆள் பாதி! ஆடை பாதி!
அதிகமாய் பரவும் தொற்று வியாதி!
ஆள் வளர ஆடை குறையும்!
இது தான் புது மொழியோ?

பெண் பூவை, கோதை, மடந்தை
எவன் சொன்னான் பைத்தியக்காரன்!
பெண் என்ற பதம் போய்
எது பெண் எது ஆண் என்று
அடையாளம் தேடும் படலம்
தொடர்கிறது!

மேலாடை ரெண்டு கைக்குட்டை
கீழாடை ஒரு கைக்குட்டை
காற்றோட்ட உடுப்பாம்
கேட்டால் ஃபஷன் என்பாள்!

வட்ட பொட்டு கூர் பொட்டானது!
மஞ்சள் குங்குமம் மங்கிப் போனது!
பெண்ணியம் கொஞ்சம் ஆட்டம் கண்டது!
நாகரிகம் நல்லாய் தலைவிரித்தாடுது!

வெளிநாட்டு மோகம் வெள்ளைக்காரன் தொடர்புகள்
வெகுளித் தனமாய் வாழ்வதற்கு
அடித்தளம் இடும் நம்மவர்கள்...
அப்பா வெளிநாடு அண்ணன் வெளிநாடு!
அப்பாடா எனக்கென்ன கவலை
கேட்டதெல்லாம் கிடைக்கும்!
ஊதாரித்தனத்தின் உந்து சக்தி
டொலரிலும் பவுண்ட்சிலும்
சக்கரமாடுது...!

தொட்டதெல்லாம் புது மாற்றம்
சொல்வதறியா கால மாற்றம்
நாகரிக குகைக்குள்
நல்லாவே திரிகிறீர்கள்
கரையேறும் வழி எங்கென்றில்லை
கரையேற கை கொடுத்தால்
ஏற்பதற்கும் தயாரில்லை...

நாகரிக மாற்றம் இது நரகத்தின் மாற்றம்....!
முடிவை நான் தேட
வார்த்தைகள் வரவில்லை....!

நன்றி!