Thursday, September 8, 2016

யாழ்ப்பாணத்தில வாடகை டீ.வி...

ஏனோ தெரியல கொஞ்ச காலமா பழைய பசுமையான நினைவுகள் மனசுக்க புது புது மலர்களாய் பூக்குது... கைபேசியில பழைய போட்டோஸ் ஏதும் இருக்கா எண்டு கிண்ட தொடங்கவே மனசு தொண்ணூறுகளிற்குள்ள போய்டுது...
95/96 ஆண்டுகளிற்கு பின்னர் பிரச்சினைகள் ஓரளவு ஓய்ந்து யாழ்ப்பாணத்திற்கு மின்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக வினியோகிக்கப்படத் தொடங்கியிருந்தது அதுவும் சீராக என்று சொல்லும்படியாக இல்லை அந்த காலகட்டத்தில் தான் முதன்முதலில் எங்கள் வீட்டில் டீ.வி. போட்டு படம் பார்க்க சந்தர்ப்பம் கிட்டியது, எங்கள் வயதில் இருந்த ஒவ்வொருத்தனுக்கும் அந்த நாள் ஒரு திருவிழா போல இருக்கும்.
இப்படி சீரற்ற மின்சாரம் மற்றும் மின்சாரமே இல்லாத காலகட்டத்தில் கொஞ்சம் வசதி படைத்தோர் மற்றும் இலத்திரணியல் உபகரணங்களை பிஸ்னஸ் செய்வோர் டீ.வி, டெக் மற்றும் ஜெனரேற்றர்களை ரெண்டு மூன்று நாட்களுக்கு வாடகைக்கு விட்டு சம்பாதிக்க தொடங்கியிருந்தார்கள். அந்த நாளைல ஒரு நாள் வாடகை 50/- எண்டு நினைக்கிறன். ஒரு சிலருக்கு இதுவே ஒரு பெரிய பிஸினஸ்.

நல்லூரடியிலும் யாரோ ஒருத்தர் டீ.வி வாடகைக்கு குடுக்கிறவர் எண்டதை கேள்விப்பட்டு பெரியண்ணாவும் பெரியப்பா ஒராளும் போய் கதைச்சு அந்த டீ.வி, டெகோட அவயளே புதுசா வந்த பட கெசட்டுக்கள் ரெண்டு மூண்டையும் தருவினும், அதையும் எடுப்பிச்சுக் கொண்டு வீட்ட வந்திட்டினும்.
பிறகு அதை பெரிய கரியர் பூட்டின சைக்கிளுக்கு பின்னால வைச்சு கட்டிக் கொண்டு வந்து, வீட்ட கூட வந்தவர் பொருத்தி தந்திட்டு சொல்லுவார் இப்பிடி இப்பிடி எல்லாதையும் செய்யோணும் எண்டு காட்டிக்குடுத்திட்டு தொடக்கி வைச்சிட்டு போய்டுவார் மிச்சத்த பெரியண்ணா தான் பாத்துக்கொள்ளுவான் கூடவே சின்னண்ணாவும் ஒட்டிக்கொள்ளுவான் நாங்கள் எல்லாம் சின்ன வானரக் குட்டிகள் போல பின்னாலையும் முன்னாலையும் திரிவம் என்ன தான் நடக்குதெண்டு பாத்துக்கொண்டு ஏன் எண்டால் எங்களுக்கு எப்படா டீ.வில படம் பாக்கலாம் எண்ட மனநிலை...
மறுபக்கம் பெத்தம்மாவும் அம்மாவும் அஞ்சரைக்கே புட்டு எல்லாம் அவிச்சு வைச்சிட்டு படத்துக்காக பாத்துக்கொண்டு இருக்க அப்பப்போ அவையளுக்கும் கரைச்சல் குடுத்து பேச்சும் வாங்கி அது ஒரு விதமான சுவாரசியம்.

ஜெனரேட்டர் இயங்க தொடங்குது டீ.வியில் வெள்ளை கறுப்பு புள்ளி விளத் தொடங்குகிறது சத்தமான இரைச்சலுடன், எங்கோ நிண்ட நாங்கள் எல்லாம் பறந்தடிச்சு டீ.விக்கு முன்னாலையே போய் குந்தினம்
அப்ப பின்னால இருந்து அம்மாவின்ர குரல் எல்லாம் கொஞ்சம் பின்னால வந்து இரு, கிட்ட இருந்து பாக்க வேணாம் கண்ணுக்கு கூடாது, காதில் வாங்கிக்கொள்ளவில்லை ரெண்டாம் தரம் அம்மாவின் சொல்லும் தொணி மாறவே இருந்த வாக்கிலே கை ரெண்டையும் பின்னால ஊணி ஒரடி பின்னுக்கா இருந்து கொண்டோம்.
டீ.வி போட்டு விட‌ வந்தவர் டீ.வி பட்டன்கள ஏதோ எல்லாம் செய்ய அப்பிடியே டெக்ல என்னமோ பண்ணிக்கொண்டிருந்தார், அந்த காலத்தில எங்களுக்கு இது எல்லாம் றொக்கட் சயன்ஸ் மாதிரி இருந்திச்சு ஆனா என்ன எங்களுக்கு தேவ பெரிய டீ.வி ல படம் பாக்கோணும் அத அடுத்த நாள் போய் பள்ளிக்கூட பெடியளுக்கு சொல்லி பெருமப்படோணும்.
புள்ளிப் புள்ளியையே கண் வெட்டாம பாத்துக்கொண்டிருக்க திடீர்னு வானவில் மாரி கோடு கோடா வெள்ளை, மஞ்சள், நீலம், பச்சை, நாவல், சிவப்பு, கரு நீலம் எண்டு டீ.வில விழுந்திச்சு கொஞ்ச நேரத்தில படம் கலங்கி கலங்கி போக தொடங்கி இருந்திச்சு அப்பாடா படம் தொடங்க போது எண்டு சின்னப்பிள்ள தனமா வெள்ளாந்தி போல முதல் படத்த‌ பாத்திட்டு இருக்கிற மனசிருக்கே அது தான் சார் கடவுள்...
படம் ஓட தொடங்குது கொஞ்ச நேரம் ஆனந்த கொண்டாட்டம் எல்லாரும் படம் பாத்தாலும் நாங்க எல்லாருக்கும் மாறி மாறி சொல்லுறம் அண்ணா படம் தொடங்கிட்டு, அம்மா படம் தொடங்கிட்டு... கொஞ்ச நேரம் பெரிய அமளி துமளி வீட்டுக்க டீ.விக்கு முன்னால இருந்து கொண்டு.
ஒரு படம் ஓடி முடிய இரவு சாப்பாட்டுக்கு ஓய்வு, திரும்ப அடுத்த படம் எண்டு ராத்திரி முழுக்க ஒரே கொண்டாட்டம் தான் அதுவும் விடியும் வரைக்கும், கூடுதலா வெள்ளிக் கிழமைகளிலே இவ்வாறான படம் போடும் வேலைகளை நம்மூர் காரங்கள் செய்தாங்கள். இப்பிடியெல்லாம் கஸ்டப்பட்டு படம் பார்த்திருக்கிறோமா என்று இப்போதெல்லாம் நினைக்கும் போது ஏக்கமாவும், சந்தோசமாகவும் இருக்கிறது.
அதுவே காலம் செல்ல செல்ல மின்சாரமும் வரத் தொடங்க புதிதாக டீவி வாங்குவோரும், அதுவரை மூடிக் கட்டி மூலையில் போட்டிருந்த டீவிக்களைத் திருத்த முற்பட்டோருமாக டீவி, அன்டெனா விற்பனை வேகமாக‌ நடைபெற தொடங்கி இருந்தது. VHF இற்கு ஒரு பெரியா சைசாகவும், UHF இற்குச் சிறிதாக மீன்முள்ளு போன்ற ஒரு அன்ரெனாவும் தனித்தனியாக வாங்கி அதைப் பொருத்துவது அடுத்த தலையிடி பிடிச்ச வேலை, அதுக்கென வேறு 20 அடி பைப்புகளை வாங்க‌ வேண்டும், இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக நவீனத்திற்குள் வர தொடங்கிய காலங்களை மனசு புதுப்பித்துக் கொண்டிருக்கையிலே கையில் இருந்த கைபேசிக்கு நான் யூடியூப்பில் சப்ஸ்கிறைப் செய்த செனலில் இருந்து புதிதாக பட ட்ரெயிலர் வந்து விட்டதாய் அலார்ட் வருகிறது...
அன்று ஒரு படம் பார்க்க நாம் பட்ட பாடு இப்போதெல்லாம் ஒரு நொடியில் நினைத்த படத்தை பார்க்க முடியுமானதாக இருந்தாலும் அன்றைய நாளைப்போல இன்பம் கிடைப்பதில்லை...! அது ஒரு கனாக்காலம்!