Saturday, April 3, 2010

மண் வாசனை...!!!
















என் தாய் நிலத்தில்
நான் பெற்ற சந்தோஷங்களை
எண்ணிப்பார்க்கின்றேன்...!!!
ஏக்கத்துடன்....!

அயல் வீட்டில்த் தணல் எடுத்து
எம் வீட்டில் அடுப்பு மூட்டி
மண் பானை, சட்டி கொண்டு
மனம் மகிழச் சோறாக்கி......!
மத்தியான நடு வெயிலில்
அக்கம் பக்கம் பரிமாறி
நாமும் உண்ட காலம் எங்கே....???

வயலுக்குச் சென்ற கணவன்
திரும்பி வரும் வேளைதனில்
அயரை மீன் குழம்பு ஆக்கி
காத்திருந்து காத்திருந்து...!
குதூகலமாய் ஊட்டி
மகிழ்ந்த காலம் எங்கே....???

ஊர் வீட்டுத் திண்ணையில்ப்
பாட்டியுடன் அமர்ந்திருந்து...!
பழங் கதைகள் கேட்டு
ரசித்த காலம் எங்கே...???

கோயில் மணலில் அமர்ந்திருந்து,
கேலிக் கதைகள் பேசிப் பேசி
மணல் வீடு கட்டி நாம்
குடிபுகுந்த காலம் எங்கே...???

ஒற்றைப் பனையடியில்
நொங்கு குடித்துவிட்டு
தோழர்களாய் அமர்ந்து அங்கே,
காவோலை மேடை கட்டி
கரகாட்டம் ஆடி மகிழ்ந்த
காலம் எங்கே...???

வயல் வரம்பு தனில்
இதமான காற்றோடு
என் காதல்க் கதை பேசி
மகிழ்ந்த காலம் எங்கே...???

பட்டப் பகல் வேளை
எட்டுமூலைப் பட்டம் கட்டி,
பணிக்கர் வளவுதனில்....!!!
இராக் கொடி பறக்க விட்ட
காலம் தான் எங்கே...???

நான் தொலைத்த என்
அத்தனை சந்தோஷங்களும்
என்னில் மீள வந்து சேருமா...????

எங்கே என் தோழி...!!!

நட்பெனும் வானமதில்
சிறகடித்துப் பறந்த - எம்
நட்பு இன்று சிறகொடிந்து
போனதன் காரணம் தான் என்ன......?

பள்ளிப் பருவமதில்
கதைத்துச் சிரிக்க ஒரு நட்பு
கல்லூரி வாழ்க்கையதில்
சுக, துக்கங்களைப் பகிர்ந்துகொள்ள
என் இன்றைய நட்பு.......!

நல்ல நட்பை யாசித்த
என் வாழ்க்கையில்.......
வசந்தத்தை எனக்குக்
காட்டியவள் என் தோழி.......!

அன்பில்த் தாயாக.......
சரிவுகளில் என் உடன்பிறப்பாக......
சோகங்களில் தோள் கொடுக்கும்
என் தோழியாக......
என்னோடிருந்த என் நண்பி....
இன்று எங்கே சென்றுவிட்டாய்.....?
என்னதான் ஆகிவிட்டது உனக்கு.....?

நேற்றுவரை........
நட்பெனும் தரு தனிலே
தோழர்களாய் மகிழ்ந்த நாம்....
கை தட்டினால் கலைந்து செல்லும்
காக்கைகளைப் போல் இன்று
சிதறியேபோனதன் காரணம் தான் என்ன....?

இன்றும் கூட......
நீ மௌனமாக இருந்தாலும்......
நெருங்கி வந்து
விலகிச் செல்கிறேன்......
பேச மனம் இருந்தும்...
பேசிக்கொள்ளாமல்...........!

ஒன்று தெரியுமா உனக்கு....?
நீ என்னோடு இல்லாததால்
என்னவோ........!
நீண்ட காலத்தின் பின்.....
சோகங்களும், சந்தோஷங்களும்.....
என் மனதில் மெல்ல மெல்ல....
கனக்கத் தொடங்குகின்றன.......!

என் தோழியே..........!
நீ
எங்கிருந்தாலும்
பேசிக்கொள்வாயா என்னோடு.......?
என் சோகங்களை
உன்னோடு பகிரவேண்டும்........!