Wednesday, September 28, 2016

ஆளுமையின் நாயகன் - தனபாலன் சேர்

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொருவர் முன்னுதாரணமாக எப்போதும் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். அது சிலருக்கு சில சந்தர்ப்பங்களில் வேறுபட்ட நபர்களின் ஆளுமையால் மாறிக்கொண்டே தான் இருக்கும்.

எனது வாழ்க்கையிலும் ஒருவர் இன்றும் முன்னுதாரணமாய் இருகிறார், அவர் வேறு யாரும் இல்லை என்னுடைய கல்லூரியின் அதிபர் திரு.தனபாலன் சேர் அவர்கள். அவரது ஆளுமை, ஆற்றல், முற்போக்கு நடத்தைகள் அபாரமானது. சென். ஜோன்ஸ் கல்லூரியில் அவரது தலைமைத்துவத்தின் கீழ் படித்தவர்கள் பாக்கியசாலிகள். 



நான் அறிந்தவரையில் தனபாலன் சேரின் ஆளுமை கண்டு வியந்தவர்கள் பலர், நேர்மையான பேச்சு, தரமான ஆங்கிலம், நேரம் தவறாமை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவற்றுக்கு இன்றும் உதாரணம் எம் ஆசான் தனா சேர் தான். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இவரை நாம் இன்றும் நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றோம் காரணம் நாம் கடந்து வந்த பாதையில் தனபாலன் சேரின் வழிகாட்டல் படி ஏதோ ஒரு இடத்தில் நம்மை இன்றும் கடக்க வைக்கிறது.

சென். ஜோன்ஸ் இல் படித்தவன் என்ற திமிர் எல்லா சென். ஜொன்ஸ் மாணவனுக்கும் இருந்தாலும் தனபாலன் சேரின் ஆளுமையின் கீழ் வளர்ந்தவனுக்கு என்றும் கொஞ்சம் கூடவே திமிர் இருக்கும் காரணம் அவன் பதப்படுத்தி வளர்க்கப்பட்டவன்,  வளர்க்கப்பட்டவன் என்பதை விட சேரைப் பார்த்து வளர்ந்தவன் என்று கூறுவது சால சிறந்தது.

நான் ஒரு ஆசிரியரைப் பார்த்து முரட்டுத்தனமாக ரசித்திருக்கிறேன் என்றால் அது தனபாலன் சேர் மட்டுமேயாகத்தான் இருக்க வேண்டும், தனபாலன் சேர் குணாதிசயங்கள் பற்றி சொல்லுவதானால் அளவான உயரம், மிடுக்கான தோற்றம், கட்டக்கையோ இல்ல புல்சிலீப் சேர்ட் போட்டு அதை வடிவா இன் பண்ணி அதற்கு ஏற்றால் போல் டையும் கட்டி ஒரு கையை (கூடுதலால இடது கை) பொக்கட்டுக்குள் வைத்து அவரின்ர பங்களாக்குள்ள இருந்து கிரவுண்ட் கரையோரமா நடந்து வாற ஸ்டைல் இருக்கே! சொல்ல வார்த்தைகள் இல்லை... சுருங்க சொன்னால் தனபாலன் சேரைப் போல் கம்பீரமாய் நடக்கப் பழகி என் போல் தோற்றவர்கள் பலர்! 

ஆசிரியர்கள் பிரச்சினை தொடங்கி, தனிப்பட்ட மாணவனின் பிரச்சினைகள் வரை அத்தனையையும் சுமூகமாக அணுகக்கூடிய கைங்கரியம் தனபாலன் சேரிடம் கொஞ்சம் அதிகமே இருந்தது எனலாம். அதற்கு உதாரணம் நான் என் அனுபவத்தையே சொல்கிறேனே!


நான் ஒரு தடகள விளையாட்டு வீரன், ஆகையால் கோலூன்றி பாயும் பயிற்சியில் மாலையில் ஈடுபடும் போது ஒருமுறை தனபாலன் சேர் அவரது பங்களாவில் இருந்து பார்த்து விட்டு எனக்கு கிட்டே நெருங்குகிறார், எனகோ நெஞ்சு பக்கு பக்கு என்று அடிக்க தொடங்குகிறது, கிட்டவாய் வந்தவர் சிறு புன்னகையுடன் Welldone i have seen you from my house, you are doing well in pole vault, You know Prabakaran master! he is good in pole vault, you better get some advice from him, he will guide you... என்று கூறியபடி மீண்டும் புன்னகைத்து அவரது ஸ்டைலில் நாடியை வலது கையால் தடவிய படி நடக்கிறார். 

இப்படியே நாட்கள் ஓடி விடுகிறது தனபாலன் சேர் ஏதோ கல்லூரி விசயமாய் கொழும்புக்கோ, எங்கேயோ சென்று விடுகிறார். அதை அறியாமல் நான் ஆங்கிலத்தில் தனபாலன் சேரிற்கு கடிதம் எழுதி தபாலில் அனுப்பி விடுகிறேன் உயரம் பாய்தல், கோலூன்றி பாய்தல் விளையாட்டுக்களுக்கு எங்களுக்கு பொதுவான ஒரு மெத்தை வாங்கினால் நன்றாக இருக்கும் என்ற கோரிக்கையை முன்வைத்து, நேரில் சென்று எனது கோரிக்கையை முன் வைக்க தயக்கதினால். அந்த‌ கால கட்டத்தில் அமலசீலம் மாஸ்டரும், ஞானப்பொன்ராஜா சேரும் தான் கல்லூரி நிர்வாகத்தை கவனித்துக்கொண்டிருந்தார்கள். 

நான் அனுப்பிய கடிதம் அமலியிடம் சென்றுவிடுகிறது, அமலி அதை பிரித்து படித்துவிட்டு அமளிப்பட்டு ஆள் அனுப்புகிறார் என்னை கையோடு கூட்டி வரும் படி, அப்போது நாங்கள் வில்லியம்ஸ் ஹாலில் கொமர்ஸ் செக்ஸனுக்குள் இருக்கிறோம். எட்டுக்குண்டி என்ர பெயரை சொல்லிக்கொண்டு அமலசீலன் மாஸ்டர் பிறேம்ஜியை கூட்டிக்கொண்டு வரட்டாம் எண்டு சொல்லவே எனக்கு விளங்கிட்டு அமலி கையில தனபாலன் சேருக்கு நான் எழுதின கடிதம் கிடைச்சு மனுசன் குழம்பிட்டு எண்டு.

கொஞ்சம் தயக்கத்துடன் அமலியிடம் போறன், அமலியின்ர முதல் கேள்வி ஏன் இப்பிடி கடிதம் எழுதினி? உம்மட கோரிக்கை நியாய‌மானது தான் இருந்தாலும் அத நீர் பீ.ஓ.ஜீ மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தியிருக்கலாம் எண்டு சொல்லிக்கொண்டே ஞானப்பொன்னியிடமும் இதைப் பற்றி விவாதிக்கிறார். நான் சொன்னன் எனக்கு நேர போய் கதைகிற பயத்தில தான் இப்பிடி கடிதம் எழுதினன் எண்டு சொல்ல, எனிவே ப்றின்சிப்பல் வந்தோண இத நான் குடுக்கிறன் நீர் சேர வந்து சந்தியும் எண்டு என்னை அனுப்பி வைகிறார் அமலி.




ரெண்டொரு நாளில் தனபாலன் சேர் பாடசாலைக்கு வந்ததும் மீண்டும் அழைப்பு வருது பிறேம்ஜி உம்மை ப்ரின்சிப்பல் வந்து சந்திக்கட்டாம். அண்டைக்கு உண்மையிலே பயந்திட்டன். பதற்றத்துடன் தனபாலன் சேரின்ட றூமுக்க போறன். 

Excuse me Sir என்ற வாறே உள்ளே நுழைகிறேன். 

முழு நேர பயத்துடன் சென்ற எனக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. 

தனபாலன் சேர் கையில் என்னுடைய கடிதம் இருந்தது, கடிதத்தை ஆட்டி ஆட்டி சொல்லுகிறார்: 
Excellent letter you have written and the way of writing is perfect. 
மிரண்டே விட்டேன். சிறிது நேரம் கடிதம் பற்றி கதைத்தவாறே கடிதத்தின் சாராம்சத்தை பற்றி எனக்கு விள‌க்குகிறார்...

ஏன் இன்னமும் மெத்தை(Mattress) வாங்கப்பட‌வில்லை என்றும் அதற்கான வேலைப்பாடுகள் நடப்பதாகவும் கூறி, இனி ஏதும் இப்படியான பிரச்சினைகள் இருந்தால் கடிதம் தேவையில்லை எந்த நேரமும் நீர் என்னை வந்து சந்திக்கலாம் என்று கூறிய அந்த motivational words என்னை ஏதோ வேறு ஒரு கோணத்தில் பார்க்க வைத்தது தனபாலன் சேரை. 



இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், தன்னலம் பாராது பொது நலமாக பொதுப்பட்ட பிரச்சினைகளை தானே அணுகி தீர்த்து வைக்கும் அவரது குணம் என்றுமே பாராட்டுக்குரியது.

இன்றும் நான் நேரம் தவறாமால் நிகழ்ச்சிகள், வைபவங்கள், வேலைத் தளங்களுக்கு செல்கிறேன் என்றால் அதற்கு காரணம் நான் கல்வி கற்ற சென். ஜோன்ஸ் கல்லூரியே!
இன்றும் நான் ஆங்கிலத்தில் ஓரளவு புலமையோடிருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் தனபாலன் சேர், மற்றும் என் சென். ஜோன்ஸ் கல்லூரி தான்.

இப்படிப் பட்ட ஆளுமை மிக்க மனிதரின் கீழ் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் நாம் என்பதில் பெருமை கொள்கிறேன்...