Saturday, February 11, 2012

போக்குவரத்து நெரிசலின் உந்துசக்தி - போக்குவரத்து பொலிஸ்

இதோ வந்திட்டேன்...!

கொஞ்ச நாளாவே யாரையாச்சும் வம்புக்கிழுத்து அரட்டையடிக்கிறதே எனக்கு வேலையா போச்சு. இளம் கண்று பயமறியாதாமே... என்னை சொன்னன்... லொலொ

இண்டைக்கு நம்ம நாட்டின் காவலர்கள், சேவகர்கள் பற்றி கொஞ்சமா சொல்ல போறன்! இவர்கள் தான் நாட்டின் தூண்கள் (முட்டுக்கட்டையான தூண்கள்) என்றால் மிகையாகாது!

போக்குவரத்து பொலிஸின் சேவை ஒரு நாட்டுக்கு இன்றியமையாதது. அதுவும் கொழும்பு போன்ற பெரு நகரங்களுக்கு போக்குவரத்து பொலிஸாரின் தேவை அத்தியாவசியமானது. பொதுவாகவே போக்குவரத்து பொலிஸ் என்பதன் விளக்கம். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது தான் என்று நம் எல்லோருக்கும் தெரிந்த விடயமே!

இருந்த போதும் நமது நாட்டில் போக்குவரத்து பொலிஸ் என்பதன் விளக்கம் சனமே இல்லாத இடத்தில் சன நெரிசலை ஏற்படுத்துபவர்கள் என்று பொருள்படுகிறது.
இத நான் சொல்லேல பொதுவா எல்லாரும் தான் சொல்லுறாங்கள். அதுக்காக என் மேல கோபப்படாதீங்க சொல்லிப்போட்டன்.

எங்கெல்லாம் சனமே இல்லையோ அங்கெல்லாம் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் வரைக்கும் சன நெரிசலை ஏற்படுத்துவதே இவர்களின் அளப்பெரிய சேவை! அதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக செயற்படுகிறார்கள்.
இதனாலேயே வீதிகளில் கொஞ்சமாக வாகன நெரிசலை கண்டவர்கள் மனதில் உடனே எழும் சந்தேகம் போக்குவரத்து பொலிஸ் ஏதும் கடமையில் நிற்கிறார்களோ என்பதே!
மனசத் தொட்டு சொல்லுங்கப்பா! நான் சொன்னது உண்மையோ இல்லையோ!

இதற்கு, இந்த போக்குவரத்து பொலீஸாரால் ஏற்படுத்தப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு பல காரணங்களை சொல்லிக்கொள்ளலாம்!
குறிப்பாக அனுபவமில்லாத இளம் பொலீஸாரை கடமையில் ஈடுபடுத்தல். அவர்களால் தங்களையே கட்டுப்படுத்த தெரியாதவர்கள் எப்படி வீதிப் போக்குவரத்து ஒழுங்கு முறைகளை கைக்கொண்டு நெரிசலைக் கட்டுப்படுத்த போகிறார்கள்.

தேவையில்லாத தருணங்களில் வீதிகளை மறியல் போடுதல், அதுவும் குறிப்பாக மந்திரி, தந்திரி வாறாராம் எண்டு யாராச்சும் புரளிய கிழப்பினாலும் சரி உண்மையா சொன்னாலும் சரி இதையே குறிக்கோளா வைச்சு காலைல இருந்து வெய்யில் காஞ்சு வீதிகளை மறியல் போட்டு நெருக்கடிகளைத் தாங்களாவே ஏற்படுத்திக் கொள்கிறார்கள்!
பின்னர் அதையே அறக்கபறக்க அப்புறப்படுத்த முயற்சிப்பது! இது சிறந்த திட்டமிடல் இல்லாமையின் வெளிப்பாடு என்றே சொல்லிக்கொள்ளலாம்.

இதுக்கெல்லாம் அப்பால் போக்குவரத்து நெரிசலுக்கு பொலிஸாரையே காரணகர்த்தா ஆக்குவதை விட நம்மவர்களிலும் சில தவறுகள் இருக்கதான் செய்கிறது! அதுவும் குறிப்பாக அளவுக்கு மீறிய பேருந்து போக்குவரத்து சேவைகள், அதிகரித்த முச்சக்கர வண்டிகள் பாவனை! இதனாலும் அதிகம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது!

இவற்றைக் கட்டுப்படுத்துவதே போக்குவரத்து பொலிஸாரின் மிகப்பெரிய சவாலாக காணப்படுகிறது! ஆனாலும் அதிலே இன்றும் அவர்கள் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். நம்மவர்களும் விடுவதாய் இல்லை. கெடுகிறேன் பந்தையம் பிடி எண்ட கணக்கில் அவர்களும் குறுக்கும் நெடுக்குமாக வாகனங்களை செலுத்திய வண்ணமே இருக்கிறார்கள்.

இப்படியான செயற்பாடுகளால் திறமையான பொலிஸார் பலரின் திறமைகள் வீண் போகின்றது! எது எவ்வாறு இருந்தாலும் போக்குவரத்து பொலிஸாரின் பணி இலங்கையைப் பொறுத்த வரையில் சரியான வகையில் கட்டமைக்கபடவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

அளவுக்கு அதிகமான வாகன பாவனை, தற்போதைய போக்குவரத்து நெரிசல், வீதி கட்டமைப்புக்கள் எல்லாமே இவற்றுக்கு வழிகோலும் அடிப்படைக் காரணங்களாக இருக்கின்றன, இருந்தும் வருகின்றன.

இவற்றையில்லாம் தாண்டி நெரிசலைக் குறைக்கும் வகையில் மின் சமிக்ஞைகள், பாதசாரிகள் கடவைகள் இருந்தும் அவ்விடங்களில் போக்குவரத்து பொலிஸ் ஒருவர் கடமையேற்கும் போது தானாகவே வீதி நெரிசல் ஏற்படுகிறது.

ஆகவே போக்குவரத்து நெரிசலின் உந்துசக்தி போக்குவரத்து பொலிஸாரே....!

பொலிஸ் மாமாஸ் என்னை மன்னிச்சுக்கோங்கோ.... ஐயாம் பாவம்!

இனி காதலர் தினத்தில காதலியோட வாறன்...! பாய்!