Saturday, August 20, 2016

சேற்றிலே முளைத்த செந்தாமரை...!

தூரமாய் ஓர் ஓலை குடிசை
தள்ளி தள்ளி பனை மரங்கள்
இவை நடுவே உடுப்பு காய
குறுக்கும் நெடுக்குமாய்
கொடி கைறுகள்
ஓட்டை கிழிஞ்சல்களுடன்
எந்நேரமும் காயும்
கந்தல் ஆடைகள்
கூனல் விழுந்த ஆச்சி
குதூகலமாய் சிறுவன்
மக்கிப் போன விறகு சேர்த்து
மண் சட்டி பானை சமையல்...
மழை வந்தால் போதும்
குசினியின் சட்டி பானை எல்லாம்
விறாந்தையில் படையெடுக்கும்
விடியும் வரை ஆச்சிக்கு வீட்டிற்குள்ளே
அலைச்சல் வரும்...
முதுமையில் ஆச்சி
முத்தான பேரன்
ஆச்சிக்கு ஆதாரம் பேரன்
பேரனுக்கு அன்பு காட்ட ஆச்சி
சிறு குழந்தை அவன்
வாழ்வின் பொறுப்புக்களை
நித்தமும் படிப்பினையாய்...
பொழுது போக்க
முற்றத்தில் விளையாட்டு
தூக்கம் தேட ஆச்சி கதை
வயித்தைக் கழுவ
அவள் போடும்
வறண்டு போன கறி சோறு...
காதல் என்ற போர்வையில்
காமத்தில் சிக்குண்டு
இரு மனமும்
சிற்றின்பம் கண்டதினால்
சிதறி விழுந்த முத்து இவன்
மனமறியா தாயொன்றால் - வீதியிலே
மறைத்து விடப்பட்டவன்...
விடுகதையாய் போன - இவன்
வாழ்வின் பேசு பொருளாய்
அவன் ஆச்சி!
போக்கற்ற வேளைகளில்
முற்றத்தில் அவன்
உறுட்டி விளையாடும்
அந்த பெட்டியில் தான்
உன் தாய் உன்னை விட்டு சென்றாள் - என்று
புத்தி பேதளித்தும் பேசாமல்
மௌனித்திருக்கும் அவன் ஆச்சி
காலத்தை வென்ற கடவுளாய்
என்றும்...!