Monday, April 16, 2012

திருந்துவார்களா இவர்கள் - சீரழியும் பஸ் சேவை (A9)

எந்தவொரு தனி மனிதனுக்கும் தனது சொந்தமண்ணுக்கு, தான் பிறந்து வளர்ந்த இடத்தை நாடிச் செல்லும் போது மனதளவில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது! இதை எவராலும் மறுத்துவிட முடியாது. அவ்வாறான காலகட்டம் இப்போ அடிக்கடி நம்மவர்களுக்கு அனுபவமாக, நிகழ்வுகளாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது! அது வேறு எதுவும் அல்ல! யாழ்ப்பாணம் - கொழும்புக்கிடையிலான போக்குவரத்து தான். நம் சொந்த ஊருக்கான பயணம்.


தத்தமது சொந்த இடங்களுக்கு செல்வதெனும் போது பலவாறான கற்பனைகளை தமக்குள்ளே தீட்டி வைத்துக் கொள்கிறார்கள், அது மட்டுமல்லாமல் அந்த கனவுகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் தமக்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபட்டுக்கொள்கிறார்கள்!

இவ்வாறான தயார்ப்படுத்தலின் இறுதிக்கட்டமாக தொடர்வது தான் போக்குவரத்து ஊடகம்! அதாவது தாம் தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து சேவை. பலருக்கு தெரிந்திருக்கும் யாழ் - கொழும்பு A9 வீதியூடான பயணத்திற்காக பல்வேறு பட்ட பேருந்துச் சேவைகள்

நடாத்தபட்டுக் கொண்டிருக்கின்றது. அரசாங்கம் மற்றும் தனியார் இணைந்து இந்த போக்குவரத்து சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது வரவேற்க்கத்தக்க விடயமாக இருக்கிற போதிலும், ஒரு சில பஸ் சேவைகளின் குழறுபடிகளால் அவ் பஸ் சேவைகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சம் குறைவடைந்து கொண்டே செல்கின்றது என்பதையும் யாராலும் மறுத்துவிட முடியாது.
தனியாரால் நடாத்தப்படும் பஸ் சேவைகளை அரை சொகுசு, சொகுசு, கடுகதி என பலவகைப்படுத்திக் கொள்ளலாம். பெயர்கள் என்னவோ கேட்பதற்கு ஆசையாக இருந்தாலும் சேவை தரமானதா என்ற கேள்வி எழும்போது அதற்கான பதில் தற்காலத்தில் கொஞ்சம் ஆட்டம் காணுகிறது என்றே கூற வேண்டும்!

யாழ் கொழும்புக்கிடையிலான பிரயாணத்தைப் பொறுத்தவரையில் என்னை விட பல தடவைகள் சென்றுவந்தவர்கள் பலர் இதை படித்துக்கொண்டிருப்பீர்கள்! உங்களுக்கு நிச்சயமாக புரிந்திருக்கும் நான் சொல்ல வரும், சொல்லிக்கொண்டிருக்கும் விடயத்தின் உண்மைத்தன்மை.

மக்களின் தேவைக்கேற்ற சேவை கிடைக்காதவிடத்து சேவைக்கான தேவையும் மக்களால் புறந்தள்ளப்பட்டுக்கொண்டே செல்லும்! பஸ் சேவையானது சிறப்புற நடக்கவேண்டும் என்றால் மக்களின் நன்மதிப்பை பெற்றுக் கொள்ளவேண்டியது முக்கிய இடத்தைப் பெறுகிறது.
அவ்வாறான சேவையை ஒரு சில பஸ் உரிமையாளர்களே தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் நிரந்தரம் இல்லை என்று தான் எண்ணத் தோன்றுகிறது.


சில பஸ் உரிமையாளர்கள் நடத்துனர்கள் மற்றும் வாகன ஓட்டுணர்கள் பயணிகளை எவ்வாறு நடத்தவேண்டும் என்ற போதிய அறிவே இல்லாமல் ஏதோ ஆடு மாடுகளை விரட்டுவதைப் போல பேசிக்கொ(ல்)ள்வார்கள். அது அவர்களது சின்னத்தனத்தையே எடுத்துக்காட்டிக் கொள்கிறது அது மட்டும் அல்லாமல் பயணிகள் மத்தியில் அவர்களுக்கான அவப்பெயரை தாமே ஏற்படுத்திக் கொள்ள வழிசமைக்கிறது.

இது ஒருபுறமிருக்க...

முன்னரைப்போல் அல்லாமல் பஸ் சேவைகள் முழுக்க முழுக்க வியாபார மயமாக்கப்பட்டு வருகிறது. அதற்கான சில உதாரணங்களை நான் இங்கே முன்வைக்கின்றேன்...!
முற்பதிவுக்காக செல்லும் பயணிகளுக்கு ஒரு ஆசனத்தை பதிவு செய்து அதே ஆசன இலக்கத்துக்கு வேறு ஒருவரையும் பதிவு செய்தல்!
இதற்கான காரணம் ஒன்று பணமதிப்பு மற்றையது ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் ஒரு பஸ்ஸுக்கான பதிவுகளை மேற்கொள்ளல்.
முன்னர் எல்லாம் பெண்களுக்காக ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டால் அதற்க்கு பக்கத்து ஆசனத்தில் ஒரு பெண்ணையே பதிவு செய்வது வழக்கம், ஆனால் இன்று அது மருவி விட்டது.
பஸ் பதிய செல்லும் பயணிகளிடம் நல்ல பஸ், முன்னுக்கு சீட், அட்யஸ்ட் பண்ணலாம் சீட்ட! நேரத்துக்கு போய்டும், நேரத்துக்கு எடுப்பம் எண்டு ஈர்வையாய் பேசுவதில் உள்ள உண்மைத் தன்மை பஸ்ஸில் ஏறியவுடன் பொய்த்துவிடும்.

இது எல்லாவற்றுக்கும் காரணங்கள் என்று பார்க்கப்போனால், ஒன்று வியாபாரமயமாக்கப்பட்ட போக்குவரத்து சேவை, பதிவுகள் மேற்கொள்ளுகையில் உள்ள விசுவாசத் தன்மையின்மை, ஏனோதானோ என்ற பற்றற்ற சேவை, பதிவுகளில் உள்ள போட்டி.

இது முழுக்க முழுக்க பயணிகளை நம்பி நடாத்தப்படும் சேவை. ஆகவே பயணிகள் நிச்சயமாக சிறந்த பயனை பெற்றுக்கொள்ளவேண்டும். அவர்களால் கொடுக்கும் பணத்திற்கேற்ற சேவையை பஸ் உரிமையாளர்களாக இருக்கட்டும், ஓட்டுணர் நடத்துனராக இருக்கட்டும் கட்டாயம் மக்களுக்கு, மக்கள் மனங்களுக்கு வழங்கி மதிப்பழிக்க வேண்டியது உங்களது கடமையாகிறது.

தொடர்ந்தும் சிறந்த சேவையை மக்களுக்காக வழங்கிவீர்கள் என்ற நம்பிக்கையில் விடைபெறுகிறேன்!

இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல! நான் கண்ட உண்மைத் தன்மையின் வெளிப்பாடு. யார் மனதையும் காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்...!

இப்ப போறன் திரும்பி வருவன் வேற வில்லங்கத்தோட!!!!
பாய்...



No comments:

Post a Comment