Thursday, May 24, 2012

அவள் காவியா...!

அம்மா காவியா!
குஞ்சு காவியா எழும்பு விடிஞ்சு நேரமாச்சு எழும்பி போய் கால் முகத்த கழுவிட்டு வா பிள்ள...

அனுக்கம் கலந்த குரலில் அவளது அம்மா அவளை துயில் எழுப்புகிறாள்! என்னம்மா இப்ப தானே படுத்தன் இன்னும் கொஞ்ச நேரம் படுக்க விடம்மா எண்டு சினுங்கிய படியே சோம்பல் முறித்து மறு பக்கம் திரும்பிப் படுக்கிறாள் காவியா!

இப்பிடி அதிக நேரம் காவியா தூங்குவதில்லை, மிகவும் சுறு சுறுப்பான பிள்ளை அவள்! காவியாவின் நீண்ட நேர உறக்கமும், சோம்பலும் அவளது அம்மாவிற்கு சந்தேகத்தை எழுப்பியது! காவியா அருகே சென்ற அம்மா அவளை பார்த்த போது அவள் முகத்தில் ஏதோ வாட்டம் தெரிந்தது!

பொதுவா காவியா தான் சோகமா இருக்கிற நேரங்களில தன்ர கடந்த கால நிகள்வுகள அதிலும் தன்ர பள்ளிப் பருவ வாழ்க்கைய, தன்ர நண்பி துளசியோட தான் செய்த குறும்புகள நினைச்சு தன்னை ஆறுதல்ப்படுத்திக்கொள்ளுவாள்...

அம்மா கேக்கிறா...

பிள்ள உனக்கென்னாச்சு, நீ இப்பிடி ஒருகாலமும் இருக்கிறதில்லையே! அம்மாக்கு சொல்லு ராசாத்தி எண்டு அம்மா காவியாவிடம் கருசனையாக பேச, அது ஒண்ணும் இல்லை அம்மா என்று சொல்லிக்கொண்டே காவியா அம்மாவிடம், அம்மா என்ர கால எடுத்து தா என கேக்கிறாள் (காவியாவிற்கு போரில் அகப்பட்டு ஒரு கால் அகற்றப்பட்டது, துணைத் தடிகள் வைத்தே அவள் தன் கடமைகளை செய்பவள்) அம்மா எடுத்து குடுக்க சிறிய சிரிப்போடு எழுந்து தனது அன்றாட கடமைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற ஆரம்பிக்கிறாள்.

காவியா தான் ஊனம் ஆனவள் என ஒரு நாள் கூட ஏங்கியதில்லை அவளது ஏக்கத்துக்கும் , கவலைகளுக்கும் காரணமாய், தன்னால் சுயமாக ஏதாவது வேலையை செய்து சொந்த காலில் நின்று அம்மாவை தான் பார்க்க வேண்டும் என்பதாகவே இருந்தது. ஆனால் அவளது வேலைகள் அனைத்தும் வீடளவிலே மட்டுப்படுத்தப்பட்டமையே அவளது வாட்டத்துக்கு காரணம்.

தன் பிள்ளை ஊனம் ஆனவள் என்பதாலே காவியாவின் அம்மா அவளை இன்னும் சிறு குழந்தையை பராமரிப்பதைப் போலவே பார்த்துவருகிறாள் ஆனால் அவள் மகள் சுறுசுறுப்பானவள் என்பதை அம்மா அறிய முற்படவில்லை.

காவியா காலையில் இருந்து மாலை வரை தன் வேலை முதற்கொண்டு அம்மாவிற்கான வேலை வரை அனைத்தையும் முடித்துக்கொண்டு மெல்லவே ஓய்விற்கு வந்து படிக்கட்டில் அவரவே அவளது மாமா படலையில வந்து அம்மா காவியா....? என்று கூப்பிட்ட படி உள்ளே வருகிறார், அட வாங்க மாமா என்று அன்பு கலந்த வார்த்தைகள் கொண்டு தன் மாமாவை வரவேற்கிறாள் காவியா! தன் தம்பியின் குரல் கேக்க அடுப்படியில் இருந்து முந்தானையில் கைகளை துடைத்தபடி விரைந்து வருகிறாள் காவியாவின் அம்மா,

வா தம்பி என்ன புதினம், கன காலம் இஞ்சால பக்கம் காணவே இல்ல. என்ன பிஸியோ அப்பிடி எண்டு கேட்ட படி தன் நெற்றி வேர்வைய புறங்கையால் துடைக்கிறாள் காவியாவின் அம்மா.

அது ஒண்ணும் இல்ல அக்கா, உந்த வீடு கட்டிற அத்தடிக்க நான் ஒரு இடமும் அசயேல உப்பிடியே மணல் ஏத்திறதும் கல்லு பறிக்கிறதிலையும் ஒரே ஓடுப்பட்டுத் திரிஞ்சன் அது தான் வர ஏலாம போச்சு!

பிறகு காவியா சொல்லு நீ என்னம்மா செய்ற? அம்மாக்கு உதவி ஏதும் செய்றியா எண்டு சிறு சிரிப்போடு கேக்கிறார் காவியாவிடம், காவியா பதில் சொல்ல முன்னமே அவளது அம்மா பதில் சொல்லுறா!
அத ஏன் கேக்கிற நீ, ஒரு இடத்தில நில்லாள்! எப்ப பாரு எங்கையாச்சும் திரிவாள், நான் செய்ய வேண்டிய வேலை எல்லாம் அவளே செய்றாள். நான் எவளவு சொன்னாலும் கேக்கிறாள் இல்ல, மாமா நீ சொன்னா தான் கேப்பாள்.

அதுக்கென்ன அக்கா! என்ர மருமகள் சுறுசுறுப்பான பிள்ள தானே! அப்ப அப்பிடி தானே இருப்பாள். பாவம் விதி காவியாவ ஊனமாக்கிட்டு எண்டு சொல்லிய படியே காவியாவின் காலை பாக்கிறார் அவர். மாமா தனக்கு கால் இல்லை எண்டதை ஞாபகப்படுத்திட்டார் என நினைச்சு கண்கலங்கி மெல்ல வானம் பாத்து நிக்கிறாள் காவியா.

காவியாவின் கண்களில் கலக்கத்தைக் கண்ட மாமா, உடனே அவளை வழிப்படுத்த காவியா! நீ சொந்தமா உழைக்க நான் ஒரு வழி சொல்லட்டே என்று பேச்சுக் குடுத்தார், உடனே காவியா முகத்தில் அப்பிடியொரு மலர்ச்சி, ஓம் மாமா ஏதாவது நல்ல உருப்படியா சொல்லுங்க நான் நல்லா செய்து முன்னுக்கு வருவன் எண்டாள் காவியா.

ம்ம்ம்...

காவியா உனக்கு தான் வாகனங்கள் எண்டாலே செரியான பைத்தியம், உன்ர மச்சான்ர CD 100 மோட்டச்சைக்கிளையே எடுத்து ஓடினாளாச்சே! ஏன் நீ ஓட்டோ ஒண்டு வாங்கி ஓட கூடாது எண்டு மாமா கேக்க, இடையே குறுக்கிடுகிறாள் காவியாவின் அம்மா... ஏன் தம்பி! நீ தெரிஞ்சு தான் பேசிறியா? காவியாட நிலை தான் உனக்கு தெரியுமே அப்பிடி இருக்க ஏன் நீ இப்பிடி ஒரு யோசின சொல்லுற உனக்கென்ன புத்தி கித்தி கெட்டு போச்சா எண்டு திட்டுகிறாள் காவியாவின் அம்மா.

அதுக்கு மாமாவின் பதில் வர முன்னமே காவியா தன் அம்மாவிடம் கோவமாக சொல்லுகிறாள், இப்பிடி என்னை காலில்லாதவள், ஊனம் ஆனவள் எண்டு நீங்களே சொல்லி சொல்லி ஏன்மா என்ன நோகடிக்கிறீங்க? நான் ஒருகாலமும் எனக்கு ஒரு கால் இல்ல எண்டு யோசிச்சதே இல்ல. என்னால எல்லாம் முடியும் எண்டு வீறாப்போடு சொன்னாள் காவியா, காவியாவின் குரலில் ஒரு தன் நம்பிக்கை துளிர்விட்டிருந்தது.

மாமா தொடர்கிறார்......

அக்கா! காவியா தைரியசாலி, தன்னம்பிக்கையானவள் அவள்ட பிடிவாதம் தான் உனக்கு தெரியுமே அக்கா ஒரு ஓட்டோ ஒண்ட தான் வாங்கி குடுத்துப்பாப்பமே. அது அவளுக்கு பிடிச்சிருந்தா அப்பிடியே அத செய்யட்டும் இல்லாட்டி வேற ஏதாவது வழிய பாப்பம். இப்பிடியே வீடு வளவு எண்டு எவளவு காலம் தான் அவளும் வீட்டுக்கையே இருக்கிறது. நாலிடத்துக்கு போய் பழகத்தானே வேணும்.

எண்டாலும் தம்பி அவள் ஒரு பொம்பிள பிள்ள, அத விட இப்ப நாடு இருக்கிற நிலமல இது தேவ தானா? பேசாம ஒரு தையல் மிசின வாங்கி தைக்க பழக்கினா அவள் வீட்ட இருந்தே தைப்பாள்! இப்ப தான் ஏதோ மோட்டர் போட்ட தையல் மிசின் இருக்காமே...? அதவிட்டிட்டு வாகனம் கீகனம் எண்டுற! தச்சேலா ஏதும் நடந்திட்டா...?

ஐயோ அக்கா, அவள் என்ன யாழ்ப்பாணம் கொழும்பு பஸ்ஸா ஓட போறாள் ஓட்டோ தானே ஓட போறாள் அதுவும் பகல்ல குறிப்பிட்ட ஒரு கொஞ்ச தூரத்துக்கு தானே. அவள் எல்லாம் நல்லபடியா செய்வாள் அக்கா, நீ ஒன்னுக்கும் யோசியாத.
அவளுக்கு நம்பிக்க குடுக்கவேண்டிய நாங்க நம்பிக்க இல்லாம கதைச்சா என்ன தான் ஆகிறது.
சரி அக்கா இருட்டுது நான் போய்ட்டு பிறகு வாறன், காவியா ஓட்டோ விசயத்த நான் நாள நாளண்டைக்கு சொல்லுறன் நாங்க போய் பாத்து எடுப்பம் எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்கிறார் அவரிட்ட ஓட்டோ வாடகைக்கு எடுக்கலாம்னு நினைக்கிறன், எதுக்கும் நான் கேட்டிட்டு சொல்லுறன்.

சரி நீ எதுக்கும் யோசியாத, அக்கா நீயும் தான். போய்ட்டு வாறன்..

மாமா படலைய தாண்டி போய்விட்டார்.............

காவியாவின் மனதில் அப்பிடியொரு சந்தோசம். வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கனும் போல தோணிருக்கும் அவளுக்கு. காவியா தன் கனவிலையே வாழ்கைய ஆரம்பிச்சு நடத்த ஆரம்பிச்சிட்டாள். நிம்மதியான தூக்கம், விடியக்காலம வழக்கம் போல எழும்பிறது எண்டு எல்லாமே ரிப்ரொப்பா நடக்கிது....

ஒருவாரம் உருண்டோடியது.....................

காவியா வீட்டு வாசலில் ஒரு ஓட்டோ வந்து நிண்டது. அது தான் காவியாவின் வாழ்கையில் அவள் ஒரு காவியம் படைக்க உந்து சக்தியானது.
விரைவாய் ஏறி இருந்துகொண்டாள் பிறகு அம்மா வாங்க மாமா வாங்க எண்டு ரெண்டு பேரையும் ஓட்டோக்குள் ஏற சொன்னாள் மெல்லமாக ஓட்டம் எடுத்த அவள் சந்தோசத்தின் உச்சத்தில் வேகத்தை கூட்டிக்கொண்டே போனாள், ஒரு கட்டத்தில் அவளது அம்மா பிள்ள கொஞ்சம் மெதுவா போ! பயமாகிடக்கு! கண்டபாட்டுக்கு யாரும் கொண்டந்து குறுக்க விட்டிடுவாங்கள் பிள்ள. பாத்து போ எண்டு சொல்லிக்கொண்டே இருந்தாள். அட சும்ம இரம்மா நீ எண்டு சொல்லி ஊரெல்லாம் சுத்தி தன் வீட்டு வாசலில் கொண்டுவந்து நிப்பாட்டினாள் காவியா...!

படிப்படியாக அவளது தொழில் வளர்ச்சிகண்டது....

நிஜாயமான உழைப்பு , நேர்மை, நேரசூசி, கட்டுப்படியான காசு எண்டதால அந்த ஏரியாக்காரர்களுக்கு வாடிக்கையான ஓட்டோக்காரியானாள் காவியா. இப்பிடியே நாட்கள் கரைந்தோடியது.

ஒருநாள் தன் அம்மாவையும் ஏத்திக்கொண்டு சந்தைக்கு போட்டு வாற வழில தனது ஓட்டோக்கு குறுக்காக கைக் குழந்தைய தூக்கிக் கொண்டு ஒரு பெம்புள கடக்கிறத கண்டோன ஓட்டோவ சடுதியா நிறுத்திக்கொண்டாள் காவியா, நிறுத்திய வேகத்தில சரிஞ்சு விழுந்த கூடைக்க இருந்த தேங்காய் றோட்டில விழுந்து குழந்தைய தூக்கிக்கொண்டு நிண்ட பெண்மணின்ர காலில பட்டு கிடந்திச்சு அத எடுக்க போன காவியா கிட்டப்போய் பாத்ததும் அதிர்ச்சியடைஞ்சிட்டாள், அது வேற ஒண்ணும் இல்ல கையில குழந்தைய தூக்கிக்கொண்டு பிச்சை எடுக்கிறது அவளது உயிர் நண்பி துளசி.

இவ்வளவு காலமும் தன்ர நண்பி தன்னவிட்டு பிரிஞ்சிட்டதாவே இருந்துவிட்டாள் காவியா! எல்லாம் உந்த சண்டையின்ர விளைவுகள்...

யாராலையோ ஏமாத்தப்பட்டு, குடும்பத்த துலைச்சு நடு றோட்டில பிச்சை எடுத்துக்கொண்டு நிண்ட துளசிய கண்டதும் காவியா மலைத்துப்போய் நின்றுவிட்டாள் அதே கணம் தன் நண்பி கால் இழந்து தடிகளில் தன்னை தாங்கி நிப்பதைக் கண்ட துளசிவாயடைத்து நின்றாள்.

இருவரிடையிலும் பேச்சுப்பரிமாற்றங்கள் தடைப்பட்டு இருந்தது. இடையிட்ட அம்மா துளசி!!! என்னம்மா உன்ர கோலம்! என்னாச்சு உனக்கு! அழுகுரலில் அரவணைத்துக் கொண்டாள் அவர்கள் மூவரையும் ஒன்றாய்...!

சிறிது நேரம் கழிய காவியா பழைய நிலைக்கு திரும்பி நண்பிகள் இருவரும் தம் சொந்தக்கதை சோகக்கதைகளை ஒருவருக்கொருவர் சொல்லி ஆறுதல் படுத்திக் கொண்டனர்... காவியா தனது  முயற்சி, சுறுசுறுப்பு வேலை எல்லாவற்றையும் துளசிக்கு சொல்லிக்கொண்டிருக்க துளசிக்கு காவியா ஒரு அதிசயமாக தெரிந்தாள்!

கால் போனாலும் காவியா நீ ஒரு காவியம் படைத்த வீர பெண் என அவள் தோள் தட்டி அதே பழைய தன்னம்பிகை குடுத்தாள் அவள் உயிர் நண்பி துளசி!




மனிதருக்கு ஊனம் ஒரு குறையில்லை - முயன்றால் முன்னேறலாம் என்ற தொணிப் பொருளுக்குள் அடக்கப்படும் காவியா என்ற பெண்மணியின் காவியம்.

No comments:

Post a Comment